ஜூன் 17-ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கானஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 17-ஆம் தேதியிலிருந்துவழங்கப்படும்.

இரண்டு நாட்கள் தேர்வு
பணி நியமனத்தில் புதிய முறை
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பம்

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான முதல் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் இரண்டாவது தேர்வு கடந்த அக்டோபர் மாதத்திலும் நடைபெற்றது. தற்போது, வருகிற ஆகஸ்ட் 17, 18தேதிகளில்மீண்டும் தேர்வு நடைபெறும் என்று இத்தேர்வை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 66 கல்வி மாவட்ட தலைமையிடங்களில் இத்தேர்வு நடைபெறும்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள, கடந்த ஆண்டுக்கான காலிப் பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பணி இடங்கள் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு முதல், பணி நியமன முறையில் புதியமுறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில்  60 சதவீதமும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவர். அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதையடுத்து, தகுதியுடையவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள்வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்புதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிடும்.  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் டூ, பட்டப் படிப்பு, பிஎட் மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குட்பட்டு, மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தத் தகுதித் தேர்வை யார் எழுதலாம்?

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 23-8-2010 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். 23-08-2010-க்கு, அதாவது தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அறிவிக்கைக்கு முன்னதாக, நியமன நடவடிக்கை தொடங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுயநிதிப் பள்ளிகளில் குறைந்தபட்சத் தகுதி இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் உரிய தகுதி பெற வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் தங்களது தகுதி மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால் இத்தேர்வை மீண்டும் எழுதலாம்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை  ஆசிரியராகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளை எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் தகுதித் தேர்வின் இரண்டாவது தாளை எழுத வேண்டும். இத்தேர்வு எழுத விரும்புபவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான இளநிலைப் பட்டமும் (அதாவது பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ படித்து மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டம்) பெற்றிருக்க வேண்டும்). அத்துடன் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் பி.எட். இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் இந்தத் தகுதித் தேர்வின் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

இந்தத் தேர்வு எப்படியிருக்கும்?

அப்ஜெக்ட்டிவ் முறையிலான இந்தத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களின் வினாக்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக விரும்புபவர்களுக்கான தகுதித் தேர்வு அதாவது முதல் தாள், மூன்று மணி நேரம் நடைபெறும். குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (6-லிருந்து 11 வயது வரை), மொழி-1 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது), மொழி-2 (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படாது. ஆறு வயதிலிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான கல்வி உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை குறித்த கேள்விகள் இருக்கும். மொழி-1 பிரிவின் கீழ் எந்த மொழியில் மாணவர்களுக்காகக் கற்பிக்கிறோமோ அந்த மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும். மொழி-2 பிரிவில் ஆங்கில மொழி அடிப்படைகள், கம்யூனிக்கேஷன், காம்ப்ரிஹென்சன் எலிஜிபிலிட்டீஸ் போன்றவற்றை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடங்களில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், பாடங்களைப் புரிந்து கொண்டு கற்பிக்கும் முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டப்படி உள்ள பாடங்களின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். ஆனாலும் செகண்டரி நிலை வரை தொடர்புடைய விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படலாம்.

ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக விரும்புபவர்கள் இத்தேர்வின் இரண்டாம் தாளை எழுத வேண்டும். இதிலும் 150 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை. இந்தத் தேர்வுக்கும் 3 மணி நேரம் வழங்கப்படும். குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை குறித்து 30 கேள்விகள் கேட்கப்படும். 11 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் இந்தக் கேள்விகள் இருக்கும். இதுதவிர, மொழி-1 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது) மொழி-2 (ஆங்கிலம்) ஆகிய பாடங்களிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். மொழி-1 பிரிவில் எந்த மொழியில் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்களோ அந்த மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும். மொழி-2 பிரிவில் ஆங்கில மொழியின் அடிப்படைகள், கம்யூனிக்கேஷன், காம்ப்ரிஹென்சன் எலிஜிபிலிட்டீஸ் போன்றவற்றை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். இந்த மூன்று பிரிவுகளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயமானது. கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக விரும்பும் ஆசிரியர்களுக்கு கணிதம், அறிவியலில் 60 கேள்விகள் கேட்கப்படும். சமூக அறிவியல் ஆசிரியராக விரும்பும் ஆசிரியர்களுக்கு சமூக அறிவியலில் 60 கேள்விகள் கேட்கப்படும். மற்ற ஆசிரியர்கள் இந்த இரண்டில் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியதிருக்கும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் அமையும். மேல்நிலைக் கல்வி வரை இது தொடர்புள்ள விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 17-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து வழங்கப்படும். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதல் தாளை எழுதுவதற்கும் இரண்டாம் தாளை எழுதுவதற்கும் தனித்தனி விண்ணப்பங்களைப் பயன்படுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் கொடுக்கப்பட்டுள்ள செலானை பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒரு வங்கியில் இத்தேர்வுக்கான ரூ.500 கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250. கட்டணம் செலுத்திய செலானின் ஆசிரியர் தேர்வு வாரியப் பகுதியை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கு அடையாளமாக ரசீது பெறுவதற்கு விண்ணப்பத்தின் நகலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜூலை முதல் தேதியன்று மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு நேரடியாக அனுப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி கிடைத்து விடுமா?

இந்தத் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். மொழி-1 பிரிவின் கீழ் எந்த மொழியைத் தேர்வு செய்திருக்கிறார் என்பதும் அதில் குறிப்பிடப்படும். இந்தத் தேர்வுச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லும். இந்தத் தேர்வு, ஆசிரியர் தகுதிக்கான தேர்வு மட்டுமே. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அரசின் விதிமுறைகளின்படி, தேவை ஏற்படும்போது ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்போது, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNTJSW 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger