காரைக்கால்: மாவட்ட நிர்வாகத்தின் தொடர் அலட்சியத்தால், காரைக்கால் மாவட்டத்தில் கார்பைட் கற்கள் மற்றும் ரசாயண கலவையால் பழுக்க வைக்கப்பட்ட மாங்கனிகள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வயிற்றுவலி, வாந்திபேதி, தூக்கமின்னமை போன்ற பிரச்சனைக்கு பொதுமக்கள் ஆளாக நேரிடுவதால், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்து அழிக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்கள் மாங்கனிகள் மாதம் எனலாம். இந்த நேரத்தில் பெரும்பாலன நகர் பகுதிகளில் இருந்து மரத்தில் மாம்பழம் பழுப்பதற்கு முன்னதாக, காயாக பறித்து ஏற்றுமதி செய்து விடுகின்றனர். இவை லாரி லாரியாய் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு வருகிறது. அவற்றை வாங்கும் வியாபாரிகள் அதனை வைகோல்களுக்கு மத்தியில் 3 நாள் முதல் ஒரு வாரம் வரை வைத்து பழுக்க வைக்க சோம்பேறித்தனம் பட்டு, கார்பைட் கற்கள் மற்றும் ‘எத்திபோன் டாக்பான்’ உள்ளிட்ட ரசாயண கலவைகளை பயன்படுத்தி ஒரே இரவில் மாங்காய்களை பழமாக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற மாங்கனிகளில் லேசான சாம்பல் நிறமும், கலர் சாயமும் இருக்கும்.
பெரும்பாலான நகர்களில் மாவட்ட கலெக்டரிடன் உத்தரவின் பேரில், நகராட்சி மற்றும் உணவு கலப்பட அதிகாரிகள் ஆய்வு நடத்தி இதுபோன்ற மாங்கனிகளை பறிமுதல் செய்து அழித்து விடுகின்றனர். ஆனால், காரைக்கால் மாவட்டத்தில் இது போன்று அதிகாரிகள் தானாகவே முன்வந்து கடைகளிளோ, விற்பனை குடோன்களிளோ ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை.
இது குறித்து, சமூக ஆர்வலர் டாக்டர் அனந்தகுமார் கூறியதாவது:
"காரைக்காலில் உள்ள அதிகாரிகளின் தொடர் அலட்சியம் காரணமாக, மாவட்டம் முழுவதும் ஒரு சில கடைகளை தவிர பலர் இந்த கார்பைட் கற்களால் பழுக்கவைக்கப்பட்ட மாங்கனிகளைதான் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, ‘எத்திபோன் 39% SL டாக்பான்-39’ என்ற ரசாயண கலவையை வாங்கி, தன்ணீரில் கலந்து, மாங்காய்களை அதில் ஊறவைத்து எடுத்துவிட்டால், சிலமணி நேரங்களில் மாங்காய் மாங்கனியாக மாறிவிடுகிறது. இது விஷத்தன்மை வாய்ந்த திரவம். பொதுவாக, கார்பைட் கல்லை தன்ணீரில் கரைத்தல், அசிட்டிலின் வாயு உற்பத்தியாகும். இது நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும்.
இதுபோன்ற ரசாயணத்தால் பழுத்த மாங்கனிகள் வாங்கினால் ஒரிரு நாளில் வீணாகிவிடும். இதனை தெரியாமல் வாங்கி உண்ணும் பலருக்கு வயிற்று வலி, வாந்திபேதி, மயக்கம், உறக்க நிலை, மனகுழப்பம் ஏற்படும், இதனை நீண்டகாலமாக பயன்படுத்தினால், ஞாபகசக்தி, மூளை நிச்சயம் பாதிக்கும். மனநல கோளாறு போன்ற பிரச்சனைக்கும் ஆளாக நேரிடும். பலர் மாங்கனிகள் மட்டுமின்றி வாழை, தக்காளி, அண்ணாசி போன்ற பழங்களை கூட இம்முறையில் பழுக்க வைக்கின்றனர் என்பது வேதனையாக உள்ளது. முக்கியமாக, சிறு குழந்தைகள் இதுபோன்ற பழங்களை உண்ணக்கூடாது. சென்னை, கர்நாடக உள்ளிட்ட பகுதியில் கடந்த வாரம் இதுபோன்ற பல டன் மாங்கனிகளை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். உணவு கலப்பட தடுப்பு சட்டத்தின் கீழ் இது பயங்கர குற்றமாகும்.
காரைக்கால் மாவட்டத்தில் அதிக அளவில் விற்பனை செய்துவரும் இதுபோன்ற கார்பைட் மாங்கனிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் அனைத்து கடைகள் மற்றும் குடோன்களில் உடனடியாக ஆய்வு நடத்தி, பறிமுதல் செய்து அழிக்க முன்வரவேண்டும். தொடர்ந்து விற்பனை செய்வோரை தண்டிக்கவும் முன்வரவேண்டும். கூடுதலாக இதுபோன்ற மாங்கனிகளை இனம் கண்டுகொள்வது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். காரைக்காலில் இதுபோன்ற பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பதவி கடந்த பல மாதங்களாக காலியாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம் புதுச்சேரியில் இருந்து சிறப்பு அதிகாரிகளை வரவழைத்து மிக சீரியசாக கவனிக்கவேண்டும். இல்லையேல், வருகிற மாங்கத்திருவிழாவின் போது, கார்பைட் கற்களால் பழுக்க வைக்கபட்ட மாங்கனிகள்தான் அதிகம் இருக்கும்" என்றார்.
உணவு மற்றும் கலப்படத்துறை முன்னாள் ஆய்வாளர் அனந்து ஜான் கூறியதாவது,
"சென்ற ஏப்ரல் 2012 ஆம் ஆண்டு முதல் கடந்த ஒரு வருட காலமாக காரைக்காலில் உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறையில் முறையான அதிகாரிகள் இல்லாததால் இந்த இலாகா இயங்கவில்லை. அதுபோல் புதிய உணவு கட்டுபாட்டு சட்டத்தை செயல்படுத்தி, முறையாக சரிபார்த்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உணவு லைசன்ஸ் வழங்க/புதிப்பிக்க அதிகாரிகள் இல்லை. அப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் எப்படி நாம் பொதுமக்கள் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்க முடியும்" என்றார்.
இந்நேரம்
Post a Comment