இயேசு இறை மகனா ? - தொடர் 14

இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேசிய பேச்சுக்களிலும் கூட, தம்மை மனிதர் என்றே வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இயேசு உயிர்த்தெழுந்த பின் கூறியதைக் கேளுங்கள்!
"இயேசு அவளை நோக்கி என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நீ என் சகோதரரிடத்திற்கு போய் நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார்." - (யோவான் 20:17)

"என்னைப் பற்றிப் பிடித்துக் கொள்ளாதே! எனக்கும் உங்களுக்கும் ஒரே கடவுள் தான்'' என்று உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு கூறுகிறார். மரணிப்பதற்கு முன்பு எப்படி அவர் கடவுளாக இருக்கவில்லையோ அப்படியே உயிர்த்தெழுந்த பின்னரும் அவர் கடவுளாக மாறி விடவில்லை என்பதற்குத் தெளிவான வாக்கு மூலம் இது!

இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று "உங்களுக்குச் சமாதானம்'' என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி "நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள். நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே'' என்று சொல்லித் தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில் "புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா'' என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாக புசித்தார். - (லூக்கா 24:36-43)

உயிர்த்தெழுந்த பின்பும் இயேசுவுக்கு மாம்சமும், எலும்புகளும் இருந்துள்ளன. இது கடவுளுக்கு இருக்க முடியாது.
உயிர்த்தெழுந்த பின்பும் "புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா'' என்று பிறரிடம் யாசித்திருக்கிறார். இதுவும் மனிதனின் இயல்பு தான்.
உயிர்த்தெழுந்த பின்பும் அவருக்குப் பசித்திருக்கிறது. பொரித்த மீன் சாப்பிட்டிருக்கிறார். இந்தத் தன்மையும் கடவுளுக்கு இருக்க முடியாது.
உயிர்தெழுந்த பின்பும் சீடர்களும் வேறு சிலரும் இயேசுவைக் கண்களால் கண்டுள்ளனர்.
உயிர்த்தெழுந்த பின்னரும் அவரை மற்றவர்கள் பார்த்திருப்பதால் அவர் கடவுள் தன்மை பெறவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இயேசு மரணிப்பதற்கு முன் எவ்வாறு மனிதராகவே - கடவுளின் அம்சம் ஒரு சிறிதும் அற்றவராகவே - இருந்தாரோ அப்படித் தான் உயிர்த்தெழுந்த பின்பும் மனிதத் தன்மை கொண்டவராகவே இருந்திருக்கிறார். இந்த வசனம் இதை ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றது.

மற்றவர்களும் உயிர்த்தெழுந்துள்ளனர்:
உயிர்த்தெழுந்ததால் இயேசு கடவுளாகி விட்டார் என்பதை மற்றொரு கோணத்திலும் கிறித்தவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயேசு உயிர்த்தெழுந்து அந்த நிலையிலேயே நீடிப்பதால் கடவுளாகி விட்டார் என்றால் இது போல் இன்னும் பலர் இறந்த பின் உயிர்த்தெழுந்துள்ளதாக பைபிள் கூறுகிறதே? அவர்களையும் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர்கள் என்றோ கிறித்தவர்கள் கூறாமலிருப்பது ஏன்? இதோ! பைபிள் கூறுவதைக் கேளுங்கள்!

"ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக் கொண்டான்." - (ஆதியாகமம் 5:24)
"விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினாலேயே அவன் காணாப்படாமற் போனான். " - (எபிரேயர் 11:5)

இயேசு கூட மரணத்திற்குப் பின்பே தேவனாலே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். கடவுளுக்கு மரணம் ஏற்பட முடியாது. ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறான். கிறித்தவர்கள் இயேசுவை விடப் பெரிய கடவுளாக ஏனோக்கை ஏன் நம்புவதில்லை? விளக்குவார்களா?

"அவர்கள் பேசிக் கொண்டு நடந்து போகையில் இதோ அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழற்காற்றில் பரலோகத்திற்கு ஏறிப் போனான். அதை எலிஷா கண்டு... " - (இரண்டாம் ராஜாக்கள் 2:11,12)

இயேசுவைக் கர்த்தர் பரலோகத்துக்கு எடுத்துச் சென்றதை எவரும் பார்த்ததில்லை. ஆனால் எலியாவைக் கர்த்தரே எடுத்துச் சென்றிருக்கிறார். உயிருடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு தீர்க்கதரிசியாகிய எலிஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே எலியா எடுத்துச் செல்லப்பட்டார். பலமான சாட்சியத்துடன் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் "எலியா இயேசுவை விடப் பெரிய கடவுள்'' என்று கிறித்தவர்கள் நம்ப வேண்டுமல்லவா?

எலியா, ஏனோக்கு போன்றோர் உயிருடன் பரலோகத்துக்குக் கர்த்தரால் எடுத்துக் கொள்ளப்பட்டதும் இன்னும் பலர் இறந்த பின் உயிர் பெற்றதாக பைபிள் கூறுவதும் "இயேசு கடவுளல்லர்; கடவுளின் மகனுமல்லர்; மனிதர் தாம்'' என்பதை எள்ளளவும் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன. கிறித்தவர்களுக்கு உண்மையிலேயே பைபிளில் நம்பிக்கை இருக்குமானால் இயேசுவைக் கடவுள் என்றோ கடவுளின் குமாரர் என்றோ நம்புவதை விட்டொழித்து ஒரே கடவுளின் பால் திரும்பட்டும்.

                                                                                    இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger