இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.
அதிகாரத் துஷ்பிரயோகங்கள், மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக் கூறும் கடப்பாடுகள் நிராகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், நீதித்துறை உறுப்பினர்கள் ஆகியோர் அரச அதிகாரிகளாலும், ஆதரவாளர்களாலும் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்; மிரட்டப்பட்டுள்ளார்கள் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டத்துக்கு முரணான தடுப்புகள், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் பெருமளவில் எஞ்சியுள்ளன, தண்டனைகளுக்குத் தப்பியுள்ளன என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களைக் கைதுசெய்து எத்தகைய குற்றச்சாட்டுகளுமின்றி நீண்டகாலத்துக்குத் தடுத்துவைக்க அதிகாரிகள் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.
சப்வான் லங்கா
Post a Comment