அல்லாஹ் தான் நாடியோருக்கே நேர்வழியைக் காட்டுகின்றான். அந்நேர்வழியானது பலருக்கும் பல்வேறு கோணங்களில் கிடைக்கின்றது. அந்த வகையில் கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய சகோதரர் இத்ரீஸ் தவ்பீக் அவர்கள் இஸ்லாத்தை தழுவிய வரலாறு வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் தான்.
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு இலட்சியம் இருக்கும் என்ற வகையில் சகோதரர் இத்ரீஸ் அவர்களுடைய நெடுங்கால இலட்சியம் தான் ஒரு பாதிரியாராக வரவேண்டும் என்பதாகும்.
அவருடைய இலட்சியக் கனவை ஒருவாரு நனவாக்கினார்.
ரோம் நகரில் ஆன்மீகத்தை படித்து பிரித்தானியாவில் பாதிரியாராக இத்ரீஸ் பணியாற்றிக் கொண்டிருந்த காலமது. சத்திய மார்க்கத்தில் இருந்தால் தானே கொள்கையில் தெளிவான பிடிப்பும் இருக்கும். எதோ ஒரு வகையில் இத்ரீஸ் அவர்களின் நாட்கள் ஒருவிதமாக உருண்டோடினாலும், தனிமை காரணமாக தனது மனம் பாதிக்கப்படுவதை அவரால் உணர முடிந்தது.
தான் மட்டும் என்ற அவருடைய வாழ்க்கைச் சக்கரம் அவரை உள ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. கத்தோலிக்க பாதிரியார்கள் மணமுடிக்கக் கூடாது என்று போதிக்கும் பாதிரியாரான இத்ரீஸ் அவர்களுக்கு தன் தனிமைக்கு மருந்து திருமணம் தான் என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டார். மனிதனின் உணர்வுகளை அடக்கி ஆளக் கூடிய கொடூரமான கொள்கையை ஒரு உண்மையான மார்க்கம் போதிக்காது. என்பதை உணர்ந்த இத்ரீஸ் அவர்கள் கிருத்துவத்தை வெருத்து தன் பாதிரியார் பணியையே கைவிட்டார். ஆயினும் இது அவருக்கு மிகவும் கடினமாகத் தான் இருந்தது. தனிமையால் பாதிக்கப்பட்ட இத்ரீஸின் உள்ளத்திற்கு தன் இலட்சியப் பணியை கைவிட்டமை இன்னொரு பெரும் சுமையாக மனதை ஆட்கொண்டிருந்தது.
தனிமையினாலும், கவலையினாலும் பாதிக்கப்பட்ட இத்ரீஸ் அவர்கள் தன் வாழ்வில் சில மாற்றங்களைக் காண எங்காவது சுற்றுலா செல்வதென முடிவெடுத்தார். தன் கைவசமுள்ள குறைந்த பணத்திற்கு பொருத்தமான இடம் எகிப்து என அவர் தேர்ந்தெடுத்தாலும். அது முஸ்லிம்கள் வாழும் இடம் என்பதினால் அங்கு செல்வதற்கு அவருக்கு பயமாக இருந்தது. காரணம் மீடியாக்கள் முஸ்லிம்களை பற்றி சொல்லிய செய்திகள் தான்.
இருந்தாலும் வேறு வழியே இல்லையென உணர்ந்தவராக எகிப்தை நோக்கியே செல்வதற்று முடிவெடுத்தார். எகிப்தை நோக்கிய தனது பயணத்தில் நான் சந்தித்த மிக முக்கியமான நபர் ஒருவரையும் அவருடைய செயலையும் பற்றி இவ்வாறு விபரிக்கின்றார் இத்ரீஸ் அவர்கள்.
நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாத்தை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த ஒரு சிறுவனால் தான்.
அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.
‘அஸ்ஸலாமு அலைக்கும்’
அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை. உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.
நான் சென்றுவரும் இடத்திற்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.
அவனை கடந்து செல்லும்போது ‘எப்படி இருக்கின்றாய்’ என்று கேட்பேன்.
அவன் ’அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)’ என்று பதிலளிப்பான்.
ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய ”அஸ்ஸலாமு அலைக்கும்’ மற்றும்’அல்ஹம்துல்லில்லாஹ்’ என்ற வார்த்தைகளால் தான்.
சிறுவன் கூறிய அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது (இறைவனின்) சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் என்ற வார்தை சிறுவனுக்கும் அவருக்குமிடையே நல்லதொரு நற்பை உண்டாக்கியது.
சிறுவனின் ஸலாமும், அவனுடைய நடத்தையும், எகிப்தின் சுற்றுலா பயணமும், இத்ரீஸ் இதுவரைக் காலமும் மீடியாக்கள் மூலம் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் தான் என்று அறிந்திருந்த தவறான எண்ணத்தை தகர்த்தெரிந்தன.
ஏதோ ஒரு வழியில் மக்களுக்கு எதையாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்ரீஸ் இருந்ததினால் ஒரு கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்ற முன்வந்தார். அங்குதான் இத்ரீஸ் அவர்களின் கருப்புப் பக்கங்கள் வெள்ளைப் பக்கங்களாக உருவெடுத்தன.
தான் இணைந்த கல்லூரியில் அரபு மாணவர்கள் அதிகமாக இருக்கும் அதே வேலை அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களாகவே இருந்தார்கள். அந்த கல்லூரியில் புத்தம், இந்து, சீக்கியம், கிருத்தவம், யுதம் மற்றும் இஸ்லாம் மதங்கள் குறித்த பாடங்களை கற்பிக்கும் படி இத்ரீஸ் அவர்கள் பணிக்கப்பட்டார்கள். கிருத்தவத்தையும், யுத மதத்தைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்த இத்ரீஸ் அவர்களுக்கு மற்ற மதங்களைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்ற நன்னோக்கத்திற்காக மற்ற மதங்களுடன் இஸ்லாத்தைப் பற்றியும் படிக்க ஆரம்பித்தார்.
இஸ்லாத்தைப் படிக்க படிக்க தன்னை அறியாமலேயே இஸ்லாத்தைக் காதலிக்க ஆரம்பித்தார் இத்ரீஸ் அவர்கள். நபி (ஸல்) அவர்களின் பேரை உச்சரிக்கும் போதெல்லாம் தனக்குள் ஏதோ ஒரு மாற்றம் உண்டாகுவதாக அவர் உணர்ந்தார். ஆனால் அதனை பிறரிடம் இத்ரீஸ் அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ரமழான் மாதம் வந்தது. சிறுவர்களை ஊக்கப்படுத்துவதற்காக தானும் நோன்பு நோற்றிருந்தார். இத்ரீஸின் அனுமதியுடன் இத்ரீஸ் அவர்களின் அரையில் தொழுவதை மாணவர்கள் வழமையாக்கிக் கொண்டனர். மாணவர்கள் தொழுவதனை அவதானித்து வந்த இத்ரீஸ் அவர்களை தொழுகை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
அவர்களிடம் எதனையும் காட்டிக் கொள்ளாமல் மாணவர்கள் தொழுகையில் உச்சரித்த வார்த்தைகளின் அர்த்தங்களை இத்ரீஸ் இணையதளத்தின் மூலம் தேடி அறிந்து கொண்டார். ரமழான் முடிவில் தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை மாணவர்களின் மூலம் அறிந்து கொண்டதுடன், நோன்பும் நோற்றிருந்தார்.
முஸ்லிம் மாணவர்களுடன் பழகுவதினால் இஸ்லாத்தைப் பற்றிய ஒரு விரும்பம் தனக்குள் தன்னை அறியாமலேயே உருவானது. தனிமையினால் உள்ளம் பாதிக்கப்பட்டிருந்த இத்ரீஸ் அவர்களுக்கு கல்லூரி நாட்கள் மன நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் அமைந்தது. மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றி அறிய லண்டனில் உள்ள மத்திய பள்ளிவாயலுக்கு சென்றுவர ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் மாணவர்களுக்காக இஸ்லாத்தை அறிய முற்பட்டாலும், இம் முறை தனக்காகவே இஸ்லாமிய அறிவைத் தேடிச் சென்றார். இவ்வாறு சில வாரங்கள் கழிந்தன. ஒரு நாள் இஸ்லாமிய பிரபல பிரச்சாரகர் யூசுப் இஸ்லாம் அவர்களின் சொற்பொழிவொற்றை தற்செயலாக இத்ரீஸ் அவர்களினால் கேட்க்க முடிந்தது.
சொற்பொழிவின் இறுதியில் யூசுப் இஸ்லாம் அவர்களை நேரடியாக சந்தித்தார் இத்ரீஸ் தவ்பீக். அப்போது அவரிடம் “நான் ஒரு முஸ்லிம் அல்ல முஸ்லிமாக மாறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? முஸ்லிம்கள் இறைவன் ஒருவன் என்பதில் உறுதியானவர்கள், நானும் ஒரு இறைவனையே நம்புகின்றேன். முஸ்லிம்கள் ஐவேலை தொழுபவர்கள். எவ்வாறு தொழுவது என்பதும், அரபியில் எவ்வாறு ஓதுவது என்பதும் எனக்குத் தெரியும். முஸ்லிம்கள் ரமழானில் நோன்பு நோற்பார்கள். நானும் நோன்பு நோற்றிருக்கின்றேன்”.
இத்ரீஸின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார் யூசுப் இஸ்லாம். பின்னர் அவரைப் பார்த்து பேச ஆரம்பித்தார். இத்தனை விஷயங்கள் தெரிந்த நீங்கள் முஸ்லிம்தான் முஸ்லிம் அல்ல என்று கூறி யாரை முட்டாலாக்கப் பார்க்கின்றீர்கள்?
அப்போது பள்ளியில் இகாமத் சொல்லப்பட்டதும், அனைவரும் தொழுகைக்காக சென்றார்கள். இத்ரீஸ் அவர்கள் மாத்திரம் செய்வதறியாமல் அங்குள்ள தூண் ஒன்றில் சாய்ந்தவராக உட்கார்ந்திருந்தார்.
தொழுகை ஆரம்பித்தது. குர்ஆனின் வசனங்கள் இத்ரீஸ் அவர்களை ஆக்ரஷித்தது. குர்ஆன் வசனங்களினால் மனம் ஈர்க்கப்பட்டு, அழத் தொடங்கினார் இத்ரீஸ் அவர்கள். இத்தனை நாள் தான் தேடிக் கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தங்கள் இக்குர்ஆனிலேயே பொதிந்திருப்பதை உணர்ந்த அவர் இனிமேலும் தான் தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பதை அறிந்து தொழுகை முடிந்ததும் மீண்டும் இத்ரீஸ் அவர்கள் யூசுப் இஸ்லாத்தை சந்தித்தார்.
“சகோதரரே நான் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்? என்று யூசுப் இஸ்லாம் அவர்களிடம் கேட்டார் இத்ரீஸ் தவ்பீக் நான் சொல்வதையே திருப்பிச் சொல்லுங்கள் என்று கூறிய யூசுப் இஸ்லாம் அவர்கள் சகோதரர் இத்ரீஸ் அவர்களுக்கு ஷஹாதாவை சொல்லிக் கொடுத்தார்.
இத்ரீஸ் அவர்களின் வாழ்வில் மறக்க முடியாது அற்புதமான தருணமது. இத்ரீஸ் முஸ்லிமாக மாறினார். ஒரு பாதிரியார் இஸ்லாத்தை ஏற்பது இன்றைய கால கட்டத்தில் ஆச்சரியமல்லவா? இன்று உலகம் முழுவதும் பயணித்து அழைப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இத்ரீஸ் அவர்கள் பத்திரிக்கைகள், நூல்கள் மற்றும் தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமாகவும் தனது அழைப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றார்.
இஸ்லாம் கற்றுக் கொடுத்த சிரிய வார்த்தைகளான அஸ்ஸலாமு அலைக்கும் மற்றும் அல்ஹம்துலில்லாஹ் போன்றவை இவருடைய வாழ்வை மாற்றிப் போட்டதை நாம் அத்தனை பேரும் நமது வாழ்வில் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்வின் சிறு வார்த்தைகளாக இருந்தாலும் அவை இன்னொருவரின் வாழ்வை மாற்ற வல்லவையாக இருக்கின்றது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து நமது வாழ்வை இஸ்லாத்தின் பாதையில் அமைத்துக் கொள்வோமாக!
நன்றி - rasminmisc
Post a Comment