நோன்பின் சட்டங்கள் - தொடர் 6 - பி.ஜே


ஸஹருக்காக அறிவிப்புச் செய்தல்

மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால் ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக் கூடிய ஏற்பாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் செய்யப்பட்டிருந்தது.

பிலால் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இரண்டு முஅத்தின்கள் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ரமளான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுபுஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, பிலால் (ரலி) அவர்கள் ஸஹருக்கு எழுப்பி விடுவதற்கான பாங்கு சொல்வார் எனவும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) சுபுஹ் தொழுகைக்கு பாங்கு சொல்வார் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிப்புச் செய்தார்கள்.

பிலாலின் பாங்கு ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில் (இரவில்) நின்று வணங்கியவர் வீடு திரும்புவதற்காகவும், உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அவர் பாங்கு சொல்வார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்கள்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 621, 5299, 7247

மற்றொரு அறிவிப்பில், இரண்டு பாங்குகளுக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்கும் என்பதை விளக்கும் போது, அவர் பாங்கு சொல்லி விட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்காகச் செல்வார் என்று ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் விளக்கமளித்ததாக இடம் பெற்றுள்ளது. நூல்கள்: முஸ்லிம் 1829, புகாரி 1919

சுபுஹுக்குச் சிறிது நேரம் இருக்கும் போது ஒரு பாங்கு சொல்லி மக்களை விழித்தெழச் செய்யும் வழக்கம் பெரும்பாலும் எங்குமே இன்று நடைமுறையில் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இந்த சுன்னத்துக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

முதல் பாங்கு ஸஹருக்கு எனவும், இரண்டாவது பாங்கு சுபுஹுக்கு எனவும் மக்களுக்குத் தெளிவாக விளக்கிவிட்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களை ஸஹருக்கு எழுப்பி விடுவதற்காகப் பலவிதமான நடைமுறைகள் உள்ளன.

நள்ளிரவு இரண்டு மணிக்கெல்லாம் ஒலிபெருக்கிக் குழாய் மூலம் பாடல்களைப் போட ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்மைகளை அதிகமதிகம் பெற்றுத் தரக்கூடிய புனித மாதத்தில், புனிதமான நேரத்தில் இசைக் கருவிகளுடன் பாடல்களை ஒலிபரப்பி, பாவத்தைச் சம்பாதித்து விடுகின்றனர். இது ஒட்டு மொத்த ஜமாஅத்தினரின் ஏற்பாட்டின் படி நடந்து வருகின்றது.

ஷைத்தானுக்கு விலங்கு போடப்படும் மாதத்தில் ஷைத்தானை அவிழ்த்து விடுவதை விடக் கொடுஞ் செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நள்ளிரவு இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் பாடல்கள் சுபுஹ் வரை சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விடாமல் அலறிக் கொண்டிருக்கும்.

மாற்று மதத்தவர்களின் உறக்கத்தைக் கெடுத்து, அவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது.

பின்னிரவில் எழுந்து தொழுவதே சிறப்பு என்ற அடிப்படையில் பின்னிரவில் எழுந்து தொழுபவர்களின் காதுகளைக் கிழிக்கும் வகையில் ஒலிபெருக்கியை அலற விட்டு, பாவத்தைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில பகுதிகளில் இரவு ஒரு மணியிலிருந்தே பக்கிரிசாக்கள் கொட்டு மேளத்துடன் தெருத் தெருவாகப் பாட்டுப் பாடிச் செல்லும் வழக்கம் உள்ளது. ஸஹருக்காக இரவு ஒரு மணிக்கும், இரண்டு மணிக்கும் மக்களை எழுப்பி விடக் கூடிய அதிகாரத்தை இவர்களுக்கு யார் வழங்கினார்கள்?

கடைசி நேரத்தில் ஸஹர் செய்வதே சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க, நள்ளிரவு இரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் மக்களின் உறக்கத்தைக் கெடுப்பது குற்றமாகும். இது போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

விடி ஸஹர்

தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது.

உறக்கம் மேலிடுவதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். இவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இல்லாததினால் நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதாக நிய்யத் செய்து கொள்கின்றனர்.

சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ, பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

இதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டால் இந்த நிலையை நாம் தவிர்த்து விடலாம்.

இரவில் படுக்கைக்குச் செல்லும் போதே, இன்று நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டுப் படுக்க வேண்டும். அல்லாஹ், ஸஹர் செய்வதற்கு ஏற்ப விழிப்பை ஏற்படுத்தினால் ஸஹர் செய்யலாம்.

அவ்வாறு விழிக்காமல் சுபுஹு நேரத்திலோ அது கடந்த பின்னரோ விழித்தால் எதையும் உண்ணாமல் நோன்பைத் தொடரலாம். ஏனெனில் இரவிலேயே நோன்பு நோற்பதாக முடிவு செய்து விட்டோம்.

அதிகமாக உண்பது

நோன்பு துறக்கும் போதும், ஸஹர் நேரத்திலும் அதிக சுவைகளுடனும், அதிக அளவிலும் உணவு உட்கொள்ளும் வழக்கம் உள்ளது.

மார்க்க அறிவு இல்லாத சூஃபிய்யாக்கள் எனும் அறிவிலிகள் இந்தப் பழக்கத்தைக் குறை கூறுகின்றனர். சுவையாக உண்பதால் நோன்பின் நோக்கமே பாழாகி விட்டதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

நோன்பின் நோக்கம் உணவின் அளவையும், சுவையையும் குறைத்துக் கொள்வதற்கான பயிற்சி அல்ல! மாறாக இறையச்சத்தை அதிகரிப்பதற்கான பயிற்சியே என்பதை முன்னரே நாம் விளக்கியுள்ளோம். இந்தத் தத்துவத்திற்கு இது மாறாகவுள்ளது.

நமது சக்திக்கும், வசதிக்கும் தக்கவாறு எத்தனை வகைகளிலும் உணவு உண்ண நமக்கு அனுமதி உள்ளது.

நோன்பு துறந்த பின்பும் நோன்பாகவே இருங்கள் என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறவில்லை.

அதிக அளவோ, அதிக சுவையோ கூடாது என்றால் அதைக் கூற வேண்டிய அதிகாரம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் தான் உள்ளது. மார்க்க அறிவற்ற சூஃபிய்யாக்களுக்கு இல்லை.

அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹராமாக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.
வகை வகையான உணவில் நாட்டமிருந்தும், எனக்காக அந்த ஆசையை எப்படி என் அடியான் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்று அல்லாஹ் மகிழ்ச்சியடைவானே தவிர அவன் அனுமதித்ததைச் செய்யும் போது அதிருப்தி அடைய மாட்டான்.

இன்ஷா அல்லாஹ் தொடரும் .....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger