சென்னை: பிளஸ்–2 பெயிலான மாணவர்கள் உடனடி சிறப்பு தேர்வு எழுத விரும்புபவர்கள் வருகிற மே 23–ஆம் தேதி முதல் ஆன்–லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்நேரம்
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வு எழுத ஆன்–லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நடைபெறவுள்ள ஜூன் மற்றும் ஜூலை, 2013 மேல்நிலை சிறப்பு துணைத்தேர்வு எழுத தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்–லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திற்கு சென்று, அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விவரங்களைப்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வர்கள் www.dge,tn.nic.in என்ற இணையதளத்தில் 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27–ந்தேதி பகல் 12 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்–லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான செலானையும் 27.05.2013 நண்பகல் 12 மணிவரை வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்தவேண்டிய இறுதி தேதி 27–ந்தேதி (திங்கட்கிழமை). செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.
மாணவர்கள் உடனடித் தேர்விற்கான உறுதி செய்யப்பட்ட காப்பி எனக்குறிப்பிட்ட ஆன்–லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய ஸ்டேட் பாங்க் செலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித்தலைமை ஆசிரியரிடம் 27–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்களுக்கு:
கடந்த மார்ச் மாதம் பிளஸ்–2 தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான உறுதிசெய்யப்பட்ட காப்பி எனக் குறிப்பிட்ட ஆன்–லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய வங்கி செலானை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
உடனடி +2 தேர்வு கால அட்டவணை:
ஜூன் மாதம் 19–ந்தேதி தமிழ் முதல் தாள், 20–ந்தேதி தமிழ் 2–வது தாள், 21–ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 22–ந்தேதி ஆங்கிலம் 2–வது தாள். 24–ந்தேதி இயற்பியல், பொருளாதாரம், 25–ந்தேதி கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நீயூட்ரிஷியன் அண்ட் டையட்டிக்ஸ், 26–ந்தேதி வணிகவியல், மனை அறிவியல், புவியியல், 27–ந்தேதி வேதியியல், அக்கவுண்டன்சி, 28–ந்தேதி உயிரியியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்,
29–ந்தேதி கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், தட்டச்சு, ஜூலை 1–ந்தேதி அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங்(பொது), புள்ளியியல்.
இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இந்நேரம்
Post a Comment