இயேசு இறை மகனா ? - தொடர் 12


இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி?
அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருந்தே நாம் அளிப்போம்.

"நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது." - (யோவான் 5:30)

"நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே." - (லூக்கா 11:20)

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்க தரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?'' என்பார்கள். அப்பொழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.(மத்தேயு 7:22,23)

"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை." - (மத்தேயு 7:21)

இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ, இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில் (சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார். மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப்படி அவர் விரும்பிய போது செய்து காட்டியவை எனவும் இயேசு விளக்கம் தருகிறார். இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறித்தவர்களே நீங்கள் காத்திருக்கிறீர்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?

"அங்கே அவர் சில நோயாளிகளின் மேல் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினதேயன்றி வேறொரு அற்புதமும் செய்யக் கூடாமல் அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு கிராமங்களிலே சுற்றித் திரிந்து உபதேசம் பண்ணினார்." - (மாற்கு 6:5,6)

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள். ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.

அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே! உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக "இந்தப் பொல்லாத விபசார சந்ததியர் அடையாளத்தைத் தேடுகிறார்கள்'' ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. - (மத்தேயு 12:38,39)

மரியாதையுடன் போதகரே என அழைத்து இயேசுவிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் ஆற்றல் அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள். மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.

"ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்." - (மத்தேயு 9:8)

அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் மக்கள் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

கெட்டவர்களும் அற்புதங்கள் நிகழ்த்தலாம்
அற்புதங்கள் நிகழ்த்துவதால் ஒருவன் கடவுளாக முடியாது. ஏன்? அற்புதம் செய்பவர்கள் நல்ல மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை. இதையும் பைபிள் தெளிவாகக் கூறுகின்றது.

உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி உங்களுக்கு ஓரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளை கேளாதிருப்பீராக. உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், உங்கள் முழு ஆத்துமாவோடும், அன்பு கூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். - (உபாகமம் 13:1-4)

தீர்க்கதரிசி அல்லாதவரும் கூட அற்புதங்கள் செய்யலாம்; நாம் முழு இதயத்துடன் கர்த்தரை மட்டுமே வழிபட வேண்டும் என்று அறிவிக்கும் இந்த வசனங்கள் கிறித்தவர்களின் கண்களில் படவில்லையா? இதை அறிந்து கொண்டே இயேசுவைக் கடவுளாக்க முயன்றால் மேற்கண்ட வசனங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள் என்பதே பொருள்.

இயேசுவும் கூட இதைத் தெளிவாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.
"ஏனெனில் கள்ளக் கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்." - (மத்தேயு 24:24)

அற்புதங்களை இயேசு மட்டுமின்றி இன்னும் பல நல்ல மனிதர்கள் செய்திருப்பதாக பைபிள் கூறுவதாலும், நல்ல மனிதர்கள் மட்டுமின்றி மோசமான மனிதர்கள் கூட அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று பைபிள் கூறுவதாலும், அற்புதங்கள் நிகழ்த்தியதால் இயேசு கடவுளாக முடியாது என்பதை ஐயமற அறியலாம். இதன் பின்னரும் இயேசுவைக் கடவுள் என்று யாரேனும் நம்பினால் அவர் பைபிளையும் நம்பவில்லை; இயேசுவின் போதனையையும் மதிக்கவில்லை என்பதே அதன் பொருளாகும்.
                                                                                    இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger