யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு.
இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. ஹொலிவுட் நடிகர்கள், விஞ்ஞானிகள் இன்னும் பல பிரபல முக்கியஸ்தர்கள் கூட இஸ்லாத்தை ஏற்பதும் இவர்களுக்கு இஸ்லாம் மீதான பயத்தை அதிகரிக்க செய்துள்ளது.
பிரித்தானியாவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் 5000ம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தை தேடிப் படித்து அதன் மீது ஏற்படும் கவர்ச்சி காரணமாக இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார்கள். அந்த வகையில் குர்ஆனின் வார்த்தைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் யூஷா எவன்ஸின் வரலாறு மாற்று மதத்தவர்களுக்கு மட்டுமல்ல குர்ஆன் மனிதர்களுக்கு புரியாது என்று வாதிடுவோர்களுக்கும், வெறுமனே மார்க்கம் காட்டித் தராத சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மாத்திரம் குர்ஆனை ஓதுவோருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு பண்ணும் பாடமாய் அமைகின்றது.
யூஷா எவன்ஸ் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் Gக்ரின் வில்லி பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததினால் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கடவுள் பக்தியுடனும் எவன்ஸ் வளர்க்கப்பட்டார்.
கிருத்தவத்தை விரும்பி தன்னை அதனுடனேயே இணைத்துக் கொண்ட எவன்ஸ் தனது 12- 13 வயதிலேயே தேவாலயத்தில் இளைஞர் சேவைகளுக்காக தன்னை இணைத்துக் கொண்டார். தனது 17 வயது முழுமையாக இருக்கும் நிலையில் பொப் ஜோன்ஸ் பல்கலைக் கழகத்தில் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் 17 வயதுடைய ஒரு நண்பருடன் நட்பு வைத்திருந்தார். கிருத்துவத்தில் ஊறிப்போயிருந்த எவன்ஸ் ஒரு முறை தன் நண்பனின் ஒரே ஒரு கேள்விக்கு நிலை குலைந்து போனார். அங்கு தான் அவருடைய வாழ்க்கை திருப்பமடையத் துவங்கியது.
நண்பர் – நீ பைபிலை படித்திருக்கிறாயா?
எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம்.
நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா?
(பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்)
மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம்?
தன் நண்பர் கேட்ட கேள்வி எவன்ஸை மிகவும் சிந்தனைக்கு உள்ளாக்கியது. பைபிலை முழுமையாக படிக்க முழு முயற்சியில் இறங்கினார் எவன்ஸ். Genesis (The first Book Old Testament) ல் இருந்து படிக்கத் துவங்கினார். அங்கு தான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் அவருக்காகவே காத்திருந்தாற் போல் இருந்தன. பைபிலை தொடந்து வாசித்த எவன்ஸ் இது வரை காலமும் நபிமார்கள் புனிதமானவர்கள், முன்மாதிரியானவர்கள் என பாதிரியார்களினால் தனக்கு போதிக்கப்பட்டதையும், பைபிலில் நூஹ் (அலை) அவர்கள் ஒரு குடிகாரர், லூத் (அலை), தாவுத் (அலை) அவர்கள் ஆகியோர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந் நபிமார்கள் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தார். Old Testament முழுதும் பல முரண்பாடுகளைக் கண்ட எவன்ஸ் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை பாதிரியார்களிடம் சென்று விபரித்தார். பைபிலில் முரண்பாடுகளைக் காணும் எவருக்குமே தன் சந்தேகத்திற்கான நிவர்த்தி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை.
எல்லா பாதியார்களும் கூறும் பதில்தான் எவன்சுக்குகம் விடையாகக் கிடைத்தது. ‘இது நம்பிக்கை சார்ந்த விடயம் கடவுளை உள்ளுணர உணர வேண்டும். கேள்வி கேட்க்கக் கூடாது. மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு மற்றும் தரீக்காக்களில் ஊறிப் போன உலமாக்களிடத்தில் கூட ஒரு அமல் குறித்து மக்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டால் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி நழுவிச் செல்வதை நாமும் பார்க்கக் கிடைக்கின்றது.
அது போல் தான் இந்தப் பாதிரியாரும் எவன்சுக்கு பதிலளித்தார். அது மட்டுமன்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவர் தப்பிக்கும் வண்ணமாக ஜீஸஸ் பற்றியுள்ள New Testament படிக்கும் படி எவன்சுக்கு ஏவினார்.
எவன்சும் அதனைப் படிக்க ஆரம்பித்தார். மக்களால் அறியப்படாத Mathew, Mark, Luke, John ஆகியோரால் எழுதப்பட்ட New Testament ஐ கடவுளின் வார்த்தை என்று கூறுவது நியாயமா? என்பதே இவரின் குழப்பத்தின் ஆரம்பமாக இருந்தது.
ஈஸா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர் கடவுளின் மகன் என்றெல்லாம் இதுவரை அறிந்த எவன்ஸ் New Testament ல் ஈஸா (அலை) அவர்கள் தன்னை அவ்வாறு சிறப்பித்துக் கூறாததையும், பழைய ஏற்பாடு முழுதும் ஒரே ஒருவன் தான் கடவுள் என்றிருப்பதனையும் கண்டு மேலும் அவர் குழப்பம் அடைந்தார். மீண்டும் பாதிரியாரிடம் சென்று ஒட்டுமொத்த பைபிலும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றது என்று எவன்ஸ் கூறிய போது குழந்தையை சமாளிப்பதைப் போல் எவன்சையும் கேள்வி எதுவும் கேட்ட’லாகாது என்று சமாளித்து விட்டார் பாதிரியார்.
பாதிரியார்கள் சொன்னதை மந்திரமாக ஏற்பதற்கு இனியும் தயாரில்லாத எவன்ஸ் பைபிலைப் பற்றி அறிந்த பேராசிரியர் ஒருவரிடம் தன் சந்தேகங்கள் நியாயம் தானா? என்று கேட்ட சமயத்தில் பைபில் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் அது தூய்மைத் தன்மையை இழந்து விட்டது. வெறுமனே நம்பிக்கையினால் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. என அப்பேராசிரியர் எவன்சுக்குக் கூறினார்.
அறிவைக் கொடுத்த இறைவன் அதனால் சிந்திக்கும் திறனையும் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்த எவன்ஸ் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்ட ஒரு நூல் ஒரு போதும் கடவுளின் வார்த்தையாக இருக்காது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து தாமாக விரும்பி இணைந்த கிருத்தவத்தை விட்டு வெளியேறி விட்டார்.
அப்போது எவன்சுக்கு வயது 17 ஐயும் தாண்டவில்லை.
பைபில் கடவுளின் வார்த்தையாக இல்லாவிட்டால் எதுதான் கடவுளின் வார்த்தை? என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா? என்ற எச்சரிக்கையுடன் படித்தார். ஜுடாயிசம், இந்துஸம், Bபுத்திசம், முதற்கொண்டு பகவத் கீதை, மந்திரம் எல்லாவற்றையும் படித்த எவன்ஸ் அவற்றில் ஒன்று கூட மனித அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதை அறிந்தார். ஆனால் இத்தனை மதங்களிலும் தேடலில் ஈடுபட்ட எவன்ஸ் இஸ்லாத்தைப் பற்றி மாத்திரம் அலட்டிக் கொள்ளவில்லை.
காரணம் இஸ்லாம் மிகச் சிரிதாகவே அறியப்பட்ட காலம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. தான் இறைவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டும் இறைவன் தனக்கு ஒரு வழியையும் ஏற்படுத்தவில்லையே என தவறாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டார். ஈற்றில் வெறுத்துப் போய் தன் 17 வயதிலேயே மார்க்கத் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.
ஒரு முறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாம் பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது. “முஸ்லிம்கள் பாலை வனத்தில் இருக்கின்ற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கின்ற அல்லாஹ் என்ற Moon God ஐ வணங்குகின்றார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரபியர்கள் தான். பெண்களை அடிமைப்படுத்துபவர்கள். முஸ்லிம்கள் அல்லாத யாரைக் கண்டாலும் கொலை செய்ய அவர்களுக்கு அனுமதியுண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், 70 கன்னிகளும் கிடைப்பார்கள்.“ என்று அதிலிருந்தது.
அப்படியே அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எவன்ஸ்.
இஸ்லாத்தைப் பற்றி அறிய வந்த ஒருவனுக்கு அது பற்றிய அறிவை இறைவன் வழங்காமலா இருப்பான்?
இஸ்லாத்தின் வாசத்தை நுகர்கின்றார் எவன்ஸ்.
ஒரு முறை எவன்சின் நண்பர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார்.
நண்பர் – இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?
எவன்ஸ் – நினைப்பதற்கு என்ன உள்ளது? நான் பார்த்த மதங்களிலேயே மிகவும் மோசமானது அதுதான்.
நண்பர் – உனக்குத் தெரியுமா நான் ஒரு முஸ்லிம்?
எவன்ஸ் – நீ ஆபிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம் என்றாலே அரபியர் தானே? (எவன்ஸ் நூலகத்தில் தான் படித்த செய்தியை மையமாக வைத்து கேட்கின்றார்)
நண்பர் – நான் உனக்கு சிலரை அறிமுகப் படுத்துகின்றேன். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உனக்குக் கூறுவார்கள். என்று கூறிவிட்டு, ஜும்மாவுக்கு செல்லவிருந்த நண்பர் எவன்சையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.
என்ன ஆச்சரியம். அவர் பணிவிடை செய்து வந்த தேவாலயமும், பள்ளிவாயலும் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தன. அங்கே ஜும்மாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாட்காலியில் அமர்ந்த எவன்ஸ் தனக்கு முன் பல ஆண்களும், தனக்குப் பின் பல பெண்களும் இருப்பதைக் கண்டு, ஜிஹாத் நடைபெறப் போகின்றதோ? என்று உள்ளுக்குள் பயமுற்றிருந்தார்.
இஸ்லாத்தை அறியாததின் காரணமாகவும், சிலர் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதப் போக்கின் காரணமாகவும் இன்றும் சிலர் பள்ளிவாயல் ஜிஹாதுக்கான இடம் என்று தவறுதலாக புரிந்து பள்ளிகள் மீது தமது அடாவடித் தனங்களை அவிழ்த்து விடுகின்றார்கள் என்பது நாம் இன்று இலங்கையில் கண் முன் காணும் கசப்பான உண்மையாகும்.
இது போல் தான் எவன்சும் தனது தவறான எண்ணத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக நினைத்திருந்தார். அப்போது எவன்சுக்கு பள்ளியில் இமாம் ஆற்றிய ஜும்மா உரை ஆரம்பத்தில் பயத்திற்கு மேல் பயத்தை உண்டாக்கினாலும், அதே உரை தான் அவரின் உள்ளத்தை பெரிதும் ஆக்ரோஷித்தது. ஒரே ஒரு குர்ஆன் வசனமே அந்த உரையின் மையக் கருத்தாகும்.
ஜும்மா உரை முடிந்தவுடன் மக்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ட எவன்ஸ், யாரைத் தொழப் போகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே! பைலிலும் இறைவன் என்று இவனையே கூறப்படுகின்றது.
தொழுகை ஆரம்பித்தது, குர்ஆனின் வசனங்களினால் மனதளவில் ஈர்க்கப்பட்டார் எவன்ஸ். மற்ற மத நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த எவன்ஸ், இஸ்லாத்தை மட்டும் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவெடுத்ததை நினைத்து வெட்க்கப்பட்டார். எவன்ஸ் அங்கிருந்த இமாமிடம் இருந்த திருமறைக் குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அன்றிரவே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஈஸா (அலை) அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதுடன், பைபிலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட நபிமார்கள் உண்மையில் இறையச்சத்துடன் தான் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் குர்ஆன் தான் நேரான வழிகாட்டி என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார். மூன்று நாட்களில் குர்ஆனைப் படித்த அவர் தானும் குர்ஆனைப் பின்பற்றி நபியவர்கள் காட்டிய வழிப் பிரகாரம் இவ்வுலகில் வாழவேண்டும் என்ற என்ற எண்ணம் அவருக்குள் உத்வேகமாய்ப் பிறந்தது. குர்ஆனைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டுவரும்படி இறைவன் விடுக்கும் சவால்களையும், கடவுளின் விளக்கங்களையும், அறிவுப் போதனைகளையும் படித்தவுடன் அம்மாற்றத்தினால் எவன்ஸின் உள்ளமும், கண்களும் அழத் தொடங்கின.
யூஷா எவன்ஸ் அடுத்த ஜும்மா நாளிலேயே புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து தன்னை ஒரு உண்மை முஸ்லிமாக மாற்றிக் கொள்கின்றார். அல்ஹம்து லில்லாஹ்.
ஆங்கில மொழியில் தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு பிரச்சாரகராக யுஷா எவன்ஸ் தனது பணியை முன்னெடுத்து வருகின்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் ஒரு பிரச்சாரகராகவும் இவர் திகழ்கின்றார். இவருடைய பிரச்சாரத்தின் காரணமாக பலர் தூய இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும்.
இமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் மாத்திரம் தான் திருமறைக் குர்ஆன் புரியும் என்று வாதிடுபவர்கள் யுஷா எவன்ஸ் போன்ற பலர் குர்ஆனைப் படித்து, புரிந்து இஸ்லாத்தில் நுழைவதை வைத்தே அனைவரும் இந்த திருமறைக் குர்ஆன் தெளிவாக விளங்கும், புரிய முடியும் என்பதை இனிமேலாவது உணர்வார்களா?
நன்றி - rasminmisc
Post a Comment