ஒன்றுக்குள் ஒன்று என்றால் கடவுள் எனப் பொருளா?
இயேசுவை மட்டும் கடவுளின் குமாரர் என்று நம்பி அவரை வணங்கி வழிபடும் கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரத்தை அலசுவோம்.
"நானும், பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்." - (யோவான் 10:30)
"நானும், பிதாவும் வெவ்வேறானவர்கள் அல்லர்; நான் தான் பிதா; பிதா தான் நான்; இருவரும் ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து விட்டோம்'' என்பது இதன் பொருள். எனவே இயேசுவும் கடவுள் தாம் என்பதும் கிறித்தவர்களின் ஆதாரம். இதே கருத்திலமைந்த யோவான் 14:10 வசனத்தையும் அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.
"இறை மகன்" எனும் சொல்லைத் தவறான பொருளில் புரிந்து கொண்டது போலவே "நானும் பிதாவும் ஒன்றே" எனும் சொல்லையும் கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கி விட்டனர். இவர்கள் புரிந்து கொண்ட பொருள் தவறானது தான் என்பதைப் பைபிளின் வெளிச்சத்திலேயே நிரூபிக்க முடியும். பின் வரும் வசனத்தைப் பாருங்கள்!
"நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்." - (யோவான் 14:20)
"நான் என் பிதாவில் இருக்கிறேன்'' என்று இயேசு கூறியதால் "இயேசுவும், பிதாவும் ஒருவரே'' எனத் தவறான பொருள் கொண்ட கிறித்தவர்கள், "நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன்'' என்று இயேசு கூறியதையும் அதே போன்று பொருள் கொள்வது தான் நியாயமாக இருக்கும். அப்படிப் பொருள் கொண்டால் "நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறேன்'' என்று இயேசு கூறியதை "மக்களும் இயேசுவும் வேறு இல்லை; மக்கள் தாம் இயேசு; இயேசு தான் மக்கள்'' என்ற கருத்தில் தான் புரிந்து கொண்டாக வேண்டும்.
இயேசு எப்படி கடவுளாக இருக்கிறாரோ அது போல் எல்லா மனிதர்களும் கடவுள்கள் என்ற கருத்து இதிலிருந்து கிடைக்கும் மூன்றாவது கருத்தாகும். இதனால் இயேசுவும், மக்களும் ஒன்று தான் என்ற நிலை ஏற்படுவதுடன் மக்கள் அனைவருமே கடவுள் தான் என்ற விபரீதமும் இதனால் ஏற்படும்.கிறித்தவர்களின் இந்தத் தவறான போக்கு இயேசுவை மட்டும் கடவுளாக்கவில்லை; மக்களையும் கடவுளாக்கி விடுகின்றது. இதன் விபரீதம் கிறித்தவர்களுக்குப் புரியாமல் போனது ஏன்?
இன்னும் தெளிவாக இயேசு கூறுவதைக் கேளுங்கள்!
"நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும் படி நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்." - (யோவான் 17:21)
இயேசு கடவுளுக்குள்ளும், கடவுள் இயேசுவுக்குள்ளும் இருப்பது போல் மக்களெல்லாம் அவ்விருவருக்குள்ளும் இருப்பதாக இயேசுவே கூறுகிறார்.
அப்படியானால் மக்களெல்லாம் கடவுள்கள் தாம் என்று இதை ஏன் கிறித்தவர்கள் புரிந்து கொள்வதில்லை?
அவர்கள் வேதத்திலேயே அவர்களுக்கு நம்பிக்கையில்லையா?
எல்லா மக்களுமே கடவுளர்கள் என்றால் இயேசுவுக்கு இதில் என்ன சிறப்பு இருக்கிறது?
மக்களே கடவுளர்களாக இருக்கும் போது யாரையும் அவர்கள் வழிபடுவதில் ஏதேனும் நியாயமிருக்கிறதா? இதைச் சிந்தித்தால் "நானும் பிதாவும் ஒன்றே" என்று இயேசு கூறியதன் சரியான பொருளை விளங்கிக் கொள்ளலாம்.
நெருங்கிய நட்பு கொண்ட இருவரைப் பற்றி பேசும் போது "இருவரும் இரண்டறக் கலந்து விட்டார்கள்'' எனக் குறிப்பிடுவது உலகமெங்கும் வழக்கத்தில் உள்ளது."இருவரும் ஒரு நபராகி விட்டார்கள். ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவி விட்டனர்'' என்று இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இருவருக்கிடையே அதிக நெருக்கம் உள்ளது என்றே இந்தச் சொல்லைப் புரிந்து கொள்வார்கள். பைபிளும் கூட இவ்வாறு பொருள் கொள்வதற்கு இடம் தருகின்றது.
"இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்." - (ஆதியாகமம் 2:24)
கணவன் மனைவி இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்பதால் இருவரும் ஒருவர் தாம் என்று புரிந்து கொள்வதுண்டா?
தங்கள் மனைவி சாப்பிட்டதும் தங்கள் வயிறு நிரம்பி விட்டதாக எண்ணிச் சாப்பிடாமல் இருப்பார்களா?
தம் இயற்கைத் தேவையைத் தம் மனைவியை விட்டு நிறைவேற்றுவார்களா?
மனைவி இறந்து விட்டால் தாமும் இறந்து விட்டதாக எண்ணிக் கல்லறைக்குள் தம்மைத் தாமே புதைத்துக் கொள்வார்களா?
மாட்டார்கள். கணவன் மனைவி இருவரின் நெருக்கம் மற்றெவரது நெருக்கத்தை விட அதிகமானது என்று தான் இதைப் புரிந்து கொள்வார்கள். இயேசு கூறியதையும் அதே போன்று புரிந்து கொள்வது தான் அறிவுடைமை.
"இதனிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருக்கிறார்கள். இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்." - (மார்க்கு 10:7,8)
புதிய ஏற்பாட்டில் உள்ள இவ்வசனத்தில் "இருவராயிராமல்" என்று இன்னும் அழுத்தத்துடன் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசு விஷயத்தில் கூட "இருவராயிராமல்" எனக் கூறப்படவில்லை. இதை எவ்வாறு கிறித்தவ நண்பர்கள் புரிந்து கொள்கிறார்களோ அவ்வாறு தானே இயேசு கூறியதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தொடரும்....
Post a Comment