மில்லரை சுண்டியிழுத்த இஸ்லாம்

டாக்டர் மில்லர் கண்ட குரானின் அதிசயங்கள்
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்தவ பிரசார பீரங்கி டாக்டர் ஜாரி மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார். இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்கநினைத்தார். அவரது எண்ணமெல்லாம் குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்; முஸ்லிம்களைக் கிறித்தவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் தனக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்துவிடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது
ஆனால், என்ன ஆச்சரியம்! உலகத்தில் வேறு எந்த நூலிலும் காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களை குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின்துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது. நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாததுமட்டுமல்ல; குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரை திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்தவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம்கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்பட்டிருந்தது மில்லரின் வியப்பைக் கூட்டியது. குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்ஆனில் ஒரு வசனம் அவரைத் தூக்கிவாரிப் போட்டது
இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள் (4:82)  

என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது. இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவெனில், சிந்தனைகளில் தவறு இருக்கும்; தவறு இல்லை என்பது நிரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால்தான் அது முடியவில்லை. உலகில் எந்தப் படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது; இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது. டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்
இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (21:30)
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். பெருவெடிப்பு’ (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பலகோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம்என்கிறது இக்கொள்கை
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்கு இணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அல்ஃபத்க்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். (ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!)
நபி (ஸல்) அவர்களுக்கு இந்த குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார்போலும். இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதைக் கண்டு திகைத்துப்போனார் மில்லர்
இதை ஷைத்தான்கள் இறக்கிவிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல;அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211)
என்று கூறும் குர்ஆன்,”(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!” (16:98) என்று கட்டளையிடுகின்றது. ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்குமுன் என்னைவிட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்கவைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவற்றை அற்புதங்கள்’ என்கிறார் அற்புதக் கூட்டங்கள் பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் மரணிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீலஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக்கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை -தான் நரகவாசி என்பதை- பொய்யாக்கியிருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை
ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப்பெற்றது.
-ஜலால்

நன்றி - jesusinvites 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger