முறண்படும் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்ட் பைபிள்கள்...!
பிறகு, கத்தோலிக்க மற்றும் புரொடஸ்டண்ட் பிரிவுகளை பற்றி பேச ஆரம்பித்தோம்.
- “ஒரு முஸ்லிம் ஆகிய நான் தங்களின் கொள்கைகளை அறிந்துகொள்ள வேண்டுமானால், தாங்கள் எதனை புனிதவேதமாக கருதுகிறீர்களோ அதனை படித்துத்தான் தெரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் மனிதர்களின் வார்த்தைகளை நாம் அப்படியே நம்பிவிட முடியாது. அவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவ மத கொள்கைகளை நான் தெரிந்துகொள்ள வேண்டுமானால், கத்தோலிக்க பைபிளை எடுத்துப்படிப்பதா? அல்லது புரொடஸ்டண்ட் பைபிளை எடுத்துப்படிப்பதா?”
- கத்தோலிக்க பைபிளில் 72 ஆகமங்களும், புரொஸ்டண்ட் பைபிளில் 66 ஆகமங்களுமாக வேறுபாடுகள் இருப்பது ஏன்?
- கத்தோலிக்க பைபிளோடு ஒப்பிடுகையில் புரொஸ்டண்ட் பைபிளில் 4800 வசனங்களுக்கு மேல் குறைவாக உள்ளதே. அது ஏன்?
- கத்தோலிக்க பைபிள் உண்மையாதெனில், புரொஸ்டண்ட் பைபிளில் இத்தனை வசனங்களை நீக்கியது யார்? எதன் அடிப்படையில் அந்த வசனங்கள் நீக்கப்பட்டன?
- அல்லது, புரொடஸ்டண்ட் பைபிள்தான் உண்மையாதெனில், கத்தோலிக்க பைபிளில் சுமார் 4800 வசங்களை சேர்த்தது யார்?
போன்ற கேள்விகளை அடுக்கடுக்காக வைத்தோம். பிறகு அனைத்தையும் தொகுத்து, ”இந்த இரண்டு பைபிள்களையும் ஒப்பிட்டுப்பார்க்கையில், வரலாற்றில் பைபிளில் கூட்டல் குறைத்தல் நடந்துள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மனித வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளோடு விளையாடியுள்ளதை மறுக்கமுடியாது. அவ்வாறு இருக்கையில், பைபிளை கடவுளின் வார்த்தை என எப்படி நாங்கள் நம்புவது” என கேள்வி எழுப்பினோம்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அவர், “எந்த பைபிள் உண்மையானது என்ற வாதம் ஒருபக்கம் இருக்கட்டும். எந்த பைபிளாக இருந்தாலும், அதனை தாங்கள் வாசித்துப்பார்த்தால், மனிதர்களின் பாவத்தை இரட்சிக்கத்தான் ஏசு இவ்வுலகிற்கு வந்தார். அவர் கர்த்தரின் குமாரராக இருக்கிறார். மேலும் பிதா சுதன் பரிசுத்த ஆவி என்னும் முக்கடவுள் (Trinity) கொள்கையைத்தான் அனைத்து பைபிள்களும் கூறுகின்றன” என்றார்.
அப்போது நாங்கள் “சரி ஃபாதர். மற்றவை அனைத்தும் ஒருபுறம் இருக்கட்டும். தாங்கள் தற்போது கூறிய முக்கடவுள் கொள்கை, அதாவது Trinity கொள்கையை எங்களுக்கு முதலில் விளக்குங்கள்” என கூறினோம்.
சிறிது தயங்கிய அவர் “கிறிஸ்தவ மதத்திலேயே புரிந்துகொள்வதற்கு அதிகம் சிரமமானதும் குழப்பமானதும் இந்த திரித்துவக்கொள்கைதான். அதனால் அதனை விளக்குவது கடினம். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவனின் மனத்திலும் ஆழமான நம்பிக்கையாக உள்ளது இந்த கொள்கையே!” என்றார்.
அப்போது நாங்கள், “ஃபாதர்! நம்பிக்கையில் இரு வகையான நம்பிக்கை உள்ளது. ஒன்று மூடநம்பிக்கை, மற்றொன்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து நம்புவது. உதாரணமாக, பூனை குறுக்கே சென்றால் செய்யக்கூடிய காரியம் தடங்கலாகிவிடும் என நம்புவது மூடநம்பிக்கை. ஏனெனில், என்னதான் நம் முன்னோர்கள் இதனை காலம் காலமாக கூறி வந்தாலும், இந்த நம்பிக்கை தவறு என்பதனை நாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிடலாம்.
ஆனால், ஒரு இரயில் செல்லும்போது அதன் பாதையின் குறுக்கே நாம் நின்றால் அடிபட்டு இறந்துவிடுவோம் என்று சொல்வதும் நம்பிக்கைதான். ஆனால் இதனை யாரும் மூட நம்பிக்கை என்று சொல்வதில்லை. ஏனெனில் இதனை நாம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துவிடமுடியும்.
இப்போது திரித்துவ கொள்கையை நம்பக்கூடிய தாங்கள், இந்தக் கொள்கையை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? முன்னோர்கள் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா அல்லது அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் ஆராய்ந்து அந்த ஆராய்ச்சியின் முடிவில் நம்புகிறீர்களா?” என கேள்வி கேட்டோம்.
அதற்கு அவர், “நான் கிறிஸ்தவ கொள்கையை நம்புவது தாங்கள் கூறிய முதலாம் அடிப்படையில்தான். என் முன்னோர்கள் கூறிய காரணத்தால்தான் நான் நம்புகிறேன். கடவுள், மதம் போன்றவற்றை ஒரு மனிதன் எவ்வாறு ஆராய்ச்சி செய்யமுடியும்? அதனால், இதுவரை அதனை நான் ஆய்வு செய்து பார்த்ததில்லை” என்று கூறினார்.
அப்போது நாங்கள் அவரிடம் “இஸ்லாத்தை முஸ்லிம்கள் நம்புவது தாங்கள் நம்புவதைப்போல் முன்னோர்கள் சொன்னார்கள் என்ற அடிப்படையில் இல்லை. இஸ்லாத்தில் இறைவனை அறிவியல் பூர்வமாகவும் உளப்பூர்வமாகவும் நம்புகிறோம். முஹம்மது நபி அவர்களை இறைவனின் தூதர் என நம்புவதும் அறிவியல் மற்றும் வரலாற்றுப்பூர்வமாகத்தான். மேலும், திருக்குர்ஆனை இறைவேதம் என நம்புவதும் அறிவியல் ஆராய்ச்சிக்குட்பட்டுத்தான். இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம். இங்கே மூட நம்பிக்கைக்கு இடமே இல்லை. மனிதனின் பகுத்தறிவை மேலோங்கச்செய்யும் விதமாகவே இஸ்லாத்தின் நம்பிக்கைகளும் வணக்க வழிபாட்டு முறைகளும் அமைந்துள்ளன”
“எனவே, தாங்கள் ஒருமுறை திருக்குர்ஆனை படித்துப்பாருங்கள். பைபிளையும் பொருள் உணர்ந்து ஆய்வு கண்ணோட்டத்தோடு படியுங்கள். நிச்சயமாக சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஆண்டவர் கண்டிப்பாக நேர்வழியை வழங்குவார். பரலோக இராஜியத்தில் நீங்களும் நாங்களும் வெற்றிபெற ஆண்டவர் நமக்கு துனை செய்ய வேண்டிக்கொள்கிறோம்” எனக்கூறி எங்களின் உரையாடலை முடித்துக்கொண்டோம். அதோடு எங்களிடம் இருந்த இஸ்லாமிய புத்தகங்களையும் அவர்களுக்கு கொடுத்து அனுப்பினோம்
முடிவுரை:
அன்புள்ள சகோதரர்களே! இஸ்லாத்தை எத்திவைப்பதற்கான சந்தர்ப்பங்கள் நம்மை சுற்றிலும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை நாம் தான் சரியாக பயன்படுத்த தவறி விடுகிறோம். மாற்றுமத சகோதரர்களின் மனதில், குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்தினர் மனதில் இஸ்லாத்தை பற்றி சில விமர்சனங்களும் சந்தேகங்களும் சிலரின் தவறான போதனைகளினாலும், ஊடகத்துறையின் வஞ்சகத்தினாலும் நிறைந்துள்ளன. அவைதான் இஸ்லாத்தை அவர்கள் வெறுப்பதற்கான காரணமாகும். அவற்றை நாம் அவர்களது உள்ளங்களில் இருந்து நீக்கிவிட்டால் பின் அவர்களின் நாட்டம் தாமாகவே இஸ்லாத்தின்பால் வந்துவிடும். இதற்கு அடிப்படையாக, முஸ்லிம்களாகிய நாம் அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் அளவிற்கு நம்மை தயார் படுத்திக்கொள்வது அவசியம்.
அவர்கள் கொண்டுள்ள கொள்கை எந்த அளவிற்கு தவறானது என்பதற்கான ஆதாரங்கள், அவர்கள் வேதமாக நினைக்கும் புத்தகங்களிலேயே இருக்கின்றன. அவற்றின் அடிப்படைகளை நாம் சற்று அறிந்திருந்தாலே போதும். அவர்களது வேதங்களின் எதார்த்த நிலையையும் அதில் உள்ள வசனங்களையும் வைத்தே அவர்கள் கொள்கையை நாம் தூள் தூள் ஆக்கிவிட முடியும்.
எல்லாம் வல்ல ஏக இறைவன், தூய்மையான இஸ்லாத்தை புரிந்து பின்பற்றக்கூடிய நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக. இந்த தூய மார்க்கத்தை உலக மக்கள் அனைவருக்கும் அழகான முறையில் எத்திவைக்கக்கூடிய அறிவையும் பொறுமையையும் தந்தருள்வானாக. மேலும் இந்த தூய மார்க்கத்தை உணர்ந்து உலகமக்கள் அனைவரும் இக்கொள்கையை ஏற்று இவ்வுலக நலன்களையும் மறுவுலக வெற்றிகளையும் பெற்று வாழவேண்டும் என எல்லாம் வல்ல ஏக இறைவனை பிரார்த்தித்தவனாக எனது இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
எனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தை தங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்!.
Post a Comment