இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!


அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.
வாழ்வில் பிரச்சனையா? செல்வம் சேர்க்க வேண்டுமா? ஆண்மை சக்தி குறைவா? மண வாழ்வில் பிரச்சனையா? வெளி நாடு செல்ல வேண்டுமா?
“இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிருஷ்டக் கல் மோதிரம் அணியுங்கள்” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தங்கள் சரக்குகளை விற்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் மோசடிகள் பல செய்து ஏழை எளியவர்களின் உழைப்பில் தங்களின் வயிறுகளைக் கழுவி வருகின்றனர்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கற்கள் உண்டு அதை அணிந்து கொண்டால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் நம்புவது வடிகட்டிய முட்டாள் தனமும் மூட நம்பிக்கையும் ஆகும். வேதனையான விஷயம் என்னவென்றால் தாம் மெத்தப் படித்தவர் என்றும், டாக்டர் என்றும் பொறியாளர் என்றும் சொல்லிக்கொள்பவர்கள் கூட தங்களின் அறிவை அடகு வைத்துவிட்டு கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து இந்த மூடநம்பிக்கையின் பால் ஆட்கொண்டு விடுகின்றனர்.
ஆனால் சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலே இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இஸ்லாமிய நம்பிக்கைகளின் படி இவ்வாறு நம்பிக்கை கொள்வதே மிகப் பெரும் பாவமாகும். ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்துக் காரியங்களும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. அவனறியாமல் ஓர் ஆணுவும் அசையாது என்பதாகும். மேலும் இந்த வகையான கற்களுக்கும் மோதிரங்களுக்கும் எந்த சக்தியுமில்லை என்பதாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
‘(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:17)
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல்-குர்ஆன் 35:2)
எனதருமை முஃமினான சகோதர, சகோதரிகளே! இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் சகல காரியங்களும் இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வருபவனான அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது. இதில் எந்த ஒரு முஃமினுக்கும் சந்தேகம் இல்லை. இதில் சந்தேகம் வரவும் கூடாது. அவனுடைய நாட்டமில்லாமல் அணுவும் அசையாது என்றிருக்க அவனை மட்டுமே வணங்கி முற்றிலும் அவனையே சார்ந்திருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நாம் எப்படி அவனை விடுத்து அவனுடைய படைப்பான கற்களிடமும், சட்சத்திரங்களிடமும், கிரகங்களிடமும் நம்பிக்கை கொள்வது?
முன்சென்ற சமுதாயங்களைச் சேர்ந்தவர்களில் பலர் இவ்வாறு கற்களுக்கும், சிலைகளுக்கும் நட்சத்திரங்களுக்கும், சூரியனுக்கும் சக்தியுண்டு என்று நம்பி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வழிபட்டதால் தானே அவர்களை ‘காஃபிர்கள்’ என்று இறைவன் கூறினான்?
“தன் மீது அசுத்தம் படிந்தால் தானே சுத்தம் செய்து கொள்ள சக்தியில்லாத, தமக்குத் தாமே எதுவுமே செய்து கொள்ள இயலாத கற்களை”,  ‘உங்களின் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யப் போகின்ற அதிருஷ்டக் கற்கள்” என்று கூறி நவீன காலத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன்  டி.வி. போன்ற மீடியாக்களின் உதவியுடன் விற்பனை செய்து  வருகின்றனர். துரதிருஷ்ட வசமாக படிப்பறிவில்லா பாமரர்களும் மெத்தப் படித்த மேதாவிகளும்? இந்தப் போலியான கவர்ச்சி விளம்பரங்களில் ஏமாந்து விடுகின்றனர்.
ஒருவர் இந்த அதிருஷ்டக்கல் என்பதை அணிந்துக் கொண்டால் அவைகள் அவருக்கு நலவுகளைத் தருகின்றது என்று நம்பிக்கை கொள்வாராயின் அது படுபயங்கரமான, இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத ‘ஷிர்க்’ என்று சொல்லப்படக் கூடிய மாபெரும் பாவமாகும். காரணம் என்னவெனில், அந்த அதிருஷ்டக் கல் மோதிரம் அணிந்து கொள்பவர் பின்வரும் மாபெரும் குற்றங்களைச் செய்தவர் போலாகிறார்.
1) மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக, அல்லாஹ்வின் சக்தியையும் மீறி இந்த அதிருஷ்டக் கற்களே தமக்கு நன்மை தீமைகளை அளிக்கின்றது என்று நம்புகிறார்.
2) அல்லது அந்த அதிருஷடக் கற்களை அணிந்து கொண்டதன் காரணத்தால் அல்லாஹ் வேறு வழியில்லாமல் அவருக்கு நன்மைகளையே தருகின்றான் என்று நம்புகிறார். (நவூதுபில்லாஹ்! இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்)
ஒருவர் இதை மறுத்தாலும் இது தான் உண்மையாகும். மேற்கண்ட இரண்டில் ஒரு காரணத்திற்காகத் தான் ஒருவர் இவ்வகையான கற்களுடைய மோதிரங்களை அணிகிறாரே தவிர வேறில்லை. எனவே இது ‘ஷிர்க்’ எனப்படும் மாபெரும் பாவமாகும்.
எனென்றால் இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுடைய படைப்பாகும். படைப்புகள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில் அவனையே சார்ந்திருக்கின்றன. அவைகள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளக் கூட சக்தியற்றவைகளாக இருக்கின்றன.
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடிவிட்டால் அதை தடுத்து நிறுத்த வேறு யாராலும் முடியாது. அதைப் போல அல்லாஹ் ஒருவருக்கு ஒரு தீமையை நாடிவிட்டால் அதை அவனைத்தவிர வேறு எதுவும் அதாவது அதிருஷ்டக் கற்களோ, தட்டு, தகடு, தாயத்து அல்லது இது போன்ற எதற்குமே சக்தியில்லை. இவைகளை அணிந்து கொண்டாலும் இவைகளால் அவனுடைய சக்திக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:107)
மாறாக, இவைகளை அணிந்து கொண்டால் இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் கேட்பதற்கு பதிலாக இந்த கற்கள், தட்டு, தகடு மற்றும் தாயத்து போன்றவைகளின் மீது நம்பிக்கை வைத்ததற்காக இறைவனின் கோபத்திற்குள்ளாக நேரிடும். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாகவும்).
மேலும் ஒருவருடைய பிறந்த தேதிக்கும் நட்சத்திரத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. நட்சத்திரங்கள் ஒருவருடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று நம்புவதும் மூட நம்பிக்கையும் இஸ்லாத்திற்கு எதிரான நம்பிக்கையும் மாபெரும் பாவமுமான ‘ ஷிர்க்’ என்னும் இணைவைத்தலுமாகும்.  அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் இறுதி நாளையும் நம்பிக்கைக் கொண்ட முஃமினான ஒருவர் இத்தகைய நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி
அல்லாஹ் கூறுகிறான்: -
39:65 அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீவிர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்).
39:66 ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்-குர்ஆன் 39:65-66)
எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்-குர்ஆன் 5:72)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்-குர்ஆன் 4:48)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். (அல்-குர்ஆன் 10:106)
எனவே எனதருமை முஃமினான சகோதர சகோதரிகளே! யார் அல்லாஹ்வுடைய வேதத்தையும் அவனுடைய தூதருடைய வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழ்கிறாரோ அவர் வழிதவற மாட்டார். ஆனால் எவர் வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறாரோ நிச்சயமாக அவர் தூரமான வழிகேட்டில் இருக்கிறார்.
அல்லாஹ் கூறுகிறான்:
(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். (அல்-குர்ஆன் 3:160)
நன்றி:சுவனத்தென்றல்
நன்றி - தமில்தவ்ஹீத் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger