Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

முத்தலாக் விட்டால் வேறு திருமணம் செய்யலாமா?

எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா?  - சர்மிளா, மதுரை

நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2932)


அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும். என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது. இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.

இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார். நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
0 comments

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே


''இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே!  உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம்.  ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.  இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை.  நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை.  கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்!  கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது!  ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது.  ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

உணவு, உடை

அல்லாஹ்வின் தூதரே!  எங்களில் ஒருவர் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று நான் கேட்ட போது, ''நீ சாப்பிடும் போது அவளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.  நீ உடை உடுத்தும் போது அவளுக்கும் உடை கொடுக்க வேண்டும்.  முகத்தில் அடிக்கக் கூடாது.  அவளை நீ மனம் நோகச் செய்யக் கூடாது.  வீட்டிற்குள்ளேயே தவிர (வேறு இடங்களில் அவள் மீது) வெறுப்பைக் காட்டக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா (ரலி) நூல் : அபூதாவூத் 1830

நாம் சாப்பிடும் போது நம்முடன் நமது மனைவியை சாப்பிடச் செய்ய வேண்டும் என்று இங்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.  கணவன் சாப்பிட்ட எச்சிலைத் தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை எச்சில் தொட்டியில் தூக்கி எறிகின்றார்கள்.  நமக்கு ஆடை எடுத்தால் மனைவிக்கும் சேர்த்து ஆடை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றார்கள்.  அத்துடன் மட்டும் நபி (ஸல்) அவர்கள் நிற்கவில்லை.  உனது மனைவிக்கு நீ ஊட்டி விடு, அதற்குக் கூலியும் கிடைக்கும் என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப் படுவீர்.  உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56

சுய மரியாதையைப் போற்றுதல்

மனைவியை அடிக்க வேண்டிய சில கட்டங்கள் வாழ்க்கையில் வரும்.  இது போன்ற கட்டங்களில் கன்னத்தில், முகத்தில் அறைந்து விடக் கூடாது என்ற நல்ல பண்பை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகின்றார்கள்.  அதனால் மனைவியை அடிப்பதற்கு இந்த ஹதீஸ் ஏகபோக உரிமை அளித்துள்ளது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

''நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல் அடிக்க வேண்டாம்.  பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) நூல் : புகாரி 4942, 5204

மனைவியை அடித்து விட்டு அவள் பக்கத்தில் போய் படுப்பதற்கு வெட்கப்பட வேண்டாமா? என்று இந்த ஹதீஸ் கேட்கின்றது.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவிமார்களை அடித்ததில்லை என்பதை இங்கு நாம் உணர வேண்டும்.

அடுத்ததாக 'பொது இடங்களில் வைத்து மனைவி மீது வெறுப்பை நெருப்பாக அள்ளித் தட்டி விடாதே' என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.  இன்று நம்மில் பலர் மனைவியருக்கு சுயமரியாதை என்ற ஒன்று கிடையாது என்று முடிவு செய்து விட்டார்கள்.  அதனால் தான் பலர் முன்னிலையில், பொது இடங்களில் திட்டித் தீர்த்து விடுகின்றார்கள்.  நிச்சயமாக இது ஒரு நல்ல பண்பல்ல!  இத்தீய பண்பை ஒரு முஸ்லிம் அறுத்து எறிந்து விட வேண்டும்.

மனைவி உறங்கும் போது அவளது உறக்கத்திற்கு இம்மியளவு கூட மதிப்பு கொடுப்பது கிடையாது.  பகலில் மாடாய் உழைத்து விட்டு, இரவில் அயர்ந்து உறங்கும் போது கொஞ்சம் உறங்கட்டுமே என்று உறங்க விடுவது கிடையாது.  வேலைக்காரியை எழுப்புவது போல் அலட்சியக் குரலில் முதலில் எழுப்பிப் பார்ப்பது, அதில் அவள் விழிக்கவில்லை என்றால் கழுதையைப் போன்று காட்டுக் கத்தல் கத்துவது, அதற்கும் சரிப்படவில்லை என்றால் காலால் எட்டி உதைப்பது போன்ற செயல்களால் மனைவியை மிருகத்தை விடக் கேவலமாக நடத்தும் காட்டுமிராண்டித்தனம் நம்மிடம் சர்வ சாதாரணமாகத் தொடர்கின்றது.  இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பாருங்கள்!

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தமது மனைவி ஆயிஷா (ரலி) அருகில் வந்து படுக்கின்றார்கள்.  ஆயிஷா (ரலி) உறங்குகின்றார்கள் என்றெண்ணி அவர்களிடம் சொல்லாமல் (ஜன்னத்துல்) பகீஃலிக்கு செல்கின்றார்கள்.  உறங்குவது போல் காட்டிக் கொண்ட ஆயிஷா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களை பகீஃ வரை பின்தொடர்ந்து சென்று பார்த்து விட்டு, அவர்களுக்கு முன்னரே ஓட்டமெடுத்து வீட்டுக்கு வந்து சேர்கின்றார்கள்.  மூச்சிறைப்பின் காரணமாக ஆயிஷா (ரலி) அவர்களின் உடல் ஏறி இறங்குவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் விசாரிக்கின்றார்கள்.  அதற்கு ஆயிஷா (ரலி), ஒன்றுமில்லை என்று கூறியதும், நீயாக சொல்லப் போகின்றாயா? அல்லது அல்லாஹ் எனக்கு உண்மையை அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  உடனே ஆயிஷா (ரலி) நடந்த நிகழ்வைக் கூறுகின்றார்கள்.  ''பகீஃலிக்கு சென்று பாவமன்னிப்பு தேடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதாக ஜிப்ரயீல் வந்து என்னிடம் கூறினார்கள்.  அதற்காக நான் புறப்பட்டேன்.  அப்போது நீ உறங்குகின்றாய் என்றெண்ணினேன்.  உன்னை எழுப்புவதற்கு சங்கடப்பட்டேன்.  அதன் மூலம் நீ வெறுப்படைவதை அஞ்சினேன்'' என்று தாம் சொல்லாமல் சென்றதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியாரிடம் தெரிவிக்கின்றார்கள்.  (ஹதீஸின் சுருக்கம்) நூல் : முஸ்லிம் 1619

இங்கு நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியருகே வந்து படுக்கும் போதும் எழுப்பவில்லை.  அதன் பிறகு வெளியே செல்லும் போதும் எழுப்பவில்லை.  காரணம் மனைவியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பது தான்.  ஆனால் நம் நாட்டிலோ 'பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி' என்று பதிகம் பாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  தனது ஆணாதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறை அன்றைய தினம் மட்டும் கடைப்பிடித்த அபூர்வ நடவடிக்கை அல்ல!  அது அவர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது என்பதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகின்றது.

நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவார்கள்.  உட்கார்ந்த நிலையில் ஓதுவார்கள்.  ஓத வேண்டியதில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அதை ஓதிவிட்டு ருகூவுச் செய்வார்கள்.  பின்னர் ஸஜ்தச் செய்வார்கள்.  இரண்டாம் ரக்அத்திலும் இது போலவே செய்வார்கள்.  தொழுது முடித்ததும் நான் விழித்துக் கொண்டிருந்தால் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் உறங்கி விட்டால் அவர்களும் படுத்து விடுவார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),    நூல் : புகாரி 1119

மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த மாநபி

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகின்றாயா?'' என்று கேட்டார்கள்.  நான் ஆம் என்றேன்.  அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.  (பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள்.  நான் பார்த்துச் சலித்த போது, ''உனக்குப் போதுமா?'' என்று கேட்டார்கள்.  நான் ஆம் என்றேன்.  ''அப்படியானால் செல்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),  நூல் : புகாரி (950)

இங்கு மனைவியின் ரசனைக்கு மதிப்பளித்த ஒரு மாபெரும் தலைவரை நாம் காண்கின்றோம்.  மனைவியெனில் படுக்கையில் பாலுணர்வைப் பகிர்வதற்குரிய ஒரு சதைப் பிண்டம்!  பகல் வேளையில் நம் வீட்டில் அனைத்துப் பணிகளையும் செய்வதற்குரிய மானுட இயந்திரம்!  இவளிடம் என்ன பேச்சு வேண்டியிருக்கின்றது?  இவளிடம் பேசுகின்ற நேரத்தில் நான்கு தஸ்பீஹ்களைச் சொன்னால் நன்மைகள் கிடைக்கும் என்று நாம் எண்ணுகின்றோம்.  நன்மையல்லாத காரியத்தையா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனைவியின் உணவு, உடை, அவர்களுக்குரிய சுயமரியாதை போன்ற விஷயங்களையும் அவர்களது ரசனை உணர்வுகளையும் மதிப்போமாக!  மாநபி வழியில் நடை போடுவோமாக!

நன்றி - tntj துபாய் 
0 comments

ராஜ் சென்னை என்பவருக்கு பதில்..

குதிரைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்த பெண்களுக்கு கிடையாதா ??? இப்படி ஒரு கேடு கேட்ட நிலைமை நம் பெண்களுக்கு வேண்டுமா

என்ற செய்தியுடன் தாங்கள் இந்த புகைப்படத்தையும் இணைத்து இந்த பதிவை வெளியிட்டுள்ளீர்கள்.

இந்த தளத்தை பொறுத்தவரை முகவரி இல்லாமல் வரக்கூடியவர்களை பற்றி எந்தவித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்து வருகிறோம், இருப்பினும் தாங்கள் எங்கள் சமூகத்தை சார்ந்த சகோதரிகளை பற்றி நீங்கள் உண்மைக்கு மாற்றமாக விமர்சித்ததால், இந்து மக்களுக்கும் உங்களுக்கும் உண்மையை புரிய வைப்பதற்கு தான் இந்த பதிவு.

நீங்கள் பதிவு செய்த அதே தலைப்பை மீண்டும் கீழே தந்துவிட்டு என்னுடைய விளக்கத்தை தருகிறேன்.

"குதிரைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்த பெண்களுக்கு கிடையாதா ??? இப்படி ஒரு கேடு கேட்ட நிலைமை நம் பெண்களுக்கு வேண்டுமா" - ராஜ் சென்னை

அருமை சகோதரர் ராஜ் அவர்களே...

குதிரைக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்த பெண்களுக்கு இல்லை என்பதை அந்த பெண்கள் உங்களுக்கு போன் பண்ணி சொன்னார்களா ? அப்படியென்றால் எந்த தேதியில் எந்த ஊரிலிருந்து போன் பண்ணி சொன்னார்கள் என்பதை பொது இடத்தில் நீங்கள் சொல்லியே ஆகவேண்டும்,

எந்த பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களோ அதே பெண்கள் எனக்கு போன் பண்ணி சொன்னார்கள்...

அண்ணா நாங்கள் குதிரை சவாரி செய்த பின் எங்களை தொடர்ந்து இரண்டு இந்து சகோதரிகள் குதிரை சவாரி செய்தார்கள், அந்த இரண்டு இந்து சகோதரிகளும் குதிரையை விட்டு இறங்கும் போது அவர்களின் அந்தரங்கம் தெரிந்ததால் அங்கு இருந்த இரண்டு கயவாளி பசங்கள் அந்த இரண்டு இந்து சகோதரிகளையும் யாருக்கும் தெரியாமல் போட்டோ எடுத்தார்கள்,

ஆனால் நாங்கள் பார்த்துவிட்டோம், உடனே அந்த இந்து சகோதரிகளிடம் உங்களை போட்டோ எடுக்கிறார்கள் என்று சொன்னோம்.

உடனே அங்கிருந்தவர்கள் அந்த இரண்டு கயவர்களையும் அடித்து, உதைத்து அவர்களிடம் உள்ள மொபைலை சோதனை செய்து பார்த்ததில் அந்த இரண்டு இந்து சகோதரிகள் மட்டுமின்றி பல இந்து சகோதரிகளை அவர்களுக்கே தெரியாமல் போட்டோ எடுத்துள்ளார்கள் என்பது தெரிய வந்தது,

இறுதியில் இரண்டு கயவர்களையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்கள், என்று கூறிய அந்த முஸ்லிம் பெண்கள் மேற்கொண்டு கூறினார்கள்...

அண்ணா நம்முடைய மார்க்கத்தில் கணவனுக்கு மட்டுமே தெரியவேண்டிய உடலை கண்டவனுக்கு காட்டவேண்டாம் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு கவசமான பர்தா வை நாங்கள் அணிவதால் எங்களது கண்ணியம் காப்பாற்றப்பட்டது, அதே பர்தா அந்த இந்து சகோதரிகளுக்கும் இருந்திருந்தால் அவர்களின் கண்ணியமும் காக்கப்பட்டிருக்கும் என்று அந்த இரண்டு முஸ்லிம் பெண்களும் கூறினார்கள்.

என்ன ராஜ் சார்... இந்த பதில் போதும் என்று நினைக்கிறேன் ?


நன்றி - முக நூலில் இருந்து ...சங்கை ரிதுவான் பக்கம் 
0 comments

வீட்டுக்குள்ளும் ஒழுக்கம் பேணுவோம்.



வீடு தான் பெண்களின் உலகம் என்பார்கள். ஏனெனில் பொதுவாக பெண்கள் அதிகமான நேரத்தை வீட்டிலேயே கழிக்கிறார்கள். ஒரு பெண் தன் வீட்டினுள் விரும்பிய முறையில் ஆடை அணிவதிலோ, சுதந்திரமாக செயற்படுவதிலோ எவ்வித குற்றமும் இல்லை. இருப்பினும் சில நேரங்களில் தன் கற்பைப் பேணுவதற்காக தன்னை இஸ்லாமிய கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றாள். வீதியில் உலா வரும் தனக்குத் தெரியாத பல ஆண்களினால் ஏற்படும் குழப்பங்களை விட வீட்டுக்குள் வரும் தான் அறிந்த ஒரு ஆணால் ஏற்படும் குழப்பங்கள் அதிகமாகும்.
அவ்வப்போது நம்முறைய வீட்டுக்கு வரும் கணவனின் நண்பர்களோ அல்லது தனது உறவுகளோஇ வீட்டின் தேவை காரணமாக கூலியாட்கள் கூட வந்துவிடலாம் அந்நேரங்களில் நம் பெண்கள் அறிந்தும் அறியாமலும் தவறிழைத்து விடுவதினால் நினைத்தும் பார்க்காத விதங்களில் குடும்பப் பெண்கள் உட்பட கன்னிகளும் தம் கற்பைப் பறிகொடுத்து விடுகின்றார்கள்.
கணவனின் நண்பனோடு கள்ளக் காதல். அண்ணனின் நண்பனோடு தலைமறைவு, சகோதரியின் கணவனுடன் சல்லாபம், வளர்ப்பு மகனுடன் பாலியல் இது போன்ற பல ஒழுக்கக் கேடான செயல்களுக்கு நம் சகோதரிகள் துணை செல்கின்றார்கள். ஆகவே இவற்றுக்கான காரணங்கள் நமக்குள்ளே இருந்தாலும் அவை அடிப்படையில் இருந்தே கிள்ளி எறியப்பட வேண்டும்.
முந்தானை அணிவதில் உஷார்.
அதிகமான பெண்கள் வெளியே செல்லும் போது அபாயா என்ற ஆடையுடன் பர்தாவோ அல்லது முந்தானையோ தலையில் அணிந்து செல்வதினால் முகம், கை, கால் தவிர மற்றைய பகுதிகளை இஸ்லாம் கூறியதைப் போல் மறைத்தாலும் தன் வீட்டிற்கு அந்நிய ஆண் ஒருவர் வந்துவிட்டால் எது இஸ்லாமிய ஆடை என்பதை மறந்துவிடுகின்றாள். தலையையும், மார்பையும் மறைக்கின்றோம் என்ற பெயரில் ஒரு முந்தானையை அரைகுறையாக அணிவதன் மூலம் முகத்துடன் சேர்த்து கழுத்துப் பகுதியும், தலை முன்பாகமும், மணிக்கட்டுக்கு மேலுள்ள குடங்கைகளும் வெளிக்காட்டப்படுகின்றன.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,  ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (24:31)
ஆகவே நாம் அணியும் முந்தானைகள் கனமாக இருப்பதுடன் கழுத்துப் பகுதி, தலையின் முற்பகுதி, குடங்கை என்பவற்றை மறைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
பெரியப்பா மற்றும் சித்தாப்பாவின் பிள்ளைகள், மற்றும் வளர்ப்புப் பிள்ளைகள் நமக்குப் பெயரளவில் மாத்திரமே அண்ணன் தம்பிகள். சொந்த சகோதரர்கள் அல்ல ஆனால் இதை நாம் அறியாது, அல்லது அறிந்தாலும் சரியான முறையில் கவனிக்காமல் சகஜமாக தொட்டுப் பேசி பழகி வருகின்றோம். இவர்களும் மார்க்க அடிப்படையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களே!
உண்மையில் திருமணம் செய்ய தடுக்கப்பட்டவர்கள் யார்? என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள்.
ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.
1.       தாய்
2.      மகள்
3.      சகோதரி
4.      தாயின் சகோதரி
5.       தந்தையின் சகோதரி
6.      சகோதரனின் புதல்விகள்
7.      சகோதரியின் புதல்விகள்
8.      பாலூட்டிய அன்னையர்
9.      பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
10.      மனைவியின் தாய்
11.      மனைவியின் புதல்வி
12.      மகனின் மனைவி
13.      இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1.       தந்தை
2.      மகன்
3.      சகோதரன்
4.      தாயின் சகோதரன்
5.       தந்தையின் சகோதரன்
6.      சகோதரனின் மகன்
7.      சகோதரியின் மகன்
8.      பாலூட்டிய அன்னையின் கணவன்
9.      பாலூட்டிய அன்னையின் மகன்
10.      கணவனின் தந்தை
11.      கணவனின் புதல்வன்
12.      புதல்வியின் கணவன்
13.      சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரி கள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (திருக்குர்ஆன் 4:23)
இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.
அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2451, 4719
இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.
(புகாரி 4719)
மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.
இவர்கள் தவிரவுள்ள மற்ற அனைவரும் திருமணம் செய்யவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
மேலும் வளர்ப்பு மகனை தமது சொந்த மகனைப் போல் கருதி அவனுடன் உறவாடும் வளர்ப்புத் தாய்மார்களையும் சகோதரிகளையும் நாம் காணலாம். ஒரு வளர்ப்பு மகன் இரண்டு வருடங்களுக்குள் பசி தீரும் அளவு ஐந்து தடவைகள் குறிப்பிட்ட தாயிடம் பால் அருந்தினால் மாத்திரமே தனக்கு சொந்த மகனாக ஆகுவதுடன் குறிப்பிட்ட தாயின் குழந்தைகளுக்கும் சொந்த சகோதரன் போல் ஆகிவிடுகின்றான். இப்பால்குடியினால் ஏற்படும் உறவல்லாமல் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை பருவ வயதை அடைந்த பின் குறிப்பிட்ட தாய்க்கோ, சகோதரர்களுக்கோ அவனுடன் தொட்டுப் பழகவோ அவனுக்கு முன் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைக்காமல் இருப்பதோ குற்றமாகும்.
எனவே பெரியப்பா, சித்தாப்பா மகன் மற்றும் வளர்ப்புப் பிள்ளைகள் ஆகிய அனைவரையும் நாம் அந்நிய ஆண் போலவே கருதி நமது கற்பை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு.
மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும். ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது. இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.
ஆனால் நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள். மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் மதினிமார்கள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு. அதே போல் கணவனின் சகோதரர்களுடன் கொஞ்சிப் பேசும், கிள்ளிப் பழகும் மைத்துனிமார்களும் நமது சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றார்கள்.
இப்படியானவர்களுக்கு நபியின் எச்சரிக்கையைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232
தனது மச்சான் என்ற உரிமையுடன் ஆரம்பத்தில் இருந்தே அளவு கடந்து பேசுவதினால் அல்லது பழகுவதினால் தன்னை அறியாமல் தன் சகோதரியின் கணவனுடன் தவறிழைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் நபியவர்கள் கணவனின் சகோதர உறவுகளை இந்தளவுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும். மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம், மச்சான் என்று கிண்டல் செய்வது, அதுபோல் அவரும் மதினி, என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை. கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான் மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும். எனவே கணவன் மதினி விஷயத்திலும், மதினி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும். இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கையையும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் ஆடை  சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்கு அப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். மதினி போன்றவர்கள் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே! எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தொடர்பை நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள். எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே வீட்டுக்குள் தானே இருக்கிறோம், இது ஒரு பெரிய பிரச்சினையா? என்றெல்லாம் சமாதானம் பேசாமல் இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பேணி வாழக் கூடிய பெண்களாக அல்லாஹ் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!
ஆக்கம் : சகோதரி ஷப்னா கலீல்
நன்றி - RASMINMISC.COM 
0 comments

மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும்


“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற பல மொழியை அடிக்கடி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கணவன் பற்றி மணைவிக்கு உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்திதான் மேற்குறிப்பிட்ட பல மொழியாகும். கணவனுடன் மணைவி சேர்ந்து வாழ்ந்து ஒட்டி உறவாட வேண்டும் என்பதை சூசகமாக இந்தப் பல மொழி எடுத்துச் சொல்கிறது.
ஏன் என்றால் இன்று பல வீடுகளில் கணவன் மணைவிப் பிரச்சினை தீராத ஒரு வியாதியாக மாறியிருக்கிறது. காரணம் என்னவென்று ஆராய்ந்தால் கணவன் மணைவிக்கு மத்தியில் பிரச்சினை வருவதற்கு முழு முதற் காரணமாக மாமியார் பிரச்சினை தான் சொல்லப்படும்.
உங்கள் அம்மா இப்படி, உங்கள் தாய் அப்படி என்று ஒரு நாளைக்கு நூறு தடவைகள் கணவனின் தாயைப்பற்றி – மாமியாரைப் பற்றி மருமகள் தனது கணவனிடத்தில் புகார் சொல்லுவார்.
இந்தப் பிரச்சினை பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.
காரணம் மாமியார் பணிவிடை பற்றி மருமகளுக்கு சரியாகத் தெரியவில்லை என்பதே!
நான் என் கணவருக்கு மாத்திரம் தான் உதவ வேண்டும், பணிவிடைகள் செய்ய வேண்டும். அதுவல்லாத யாருக்கும் நான் எந்தப் பணிவிடையும் செய்யும் அவசியம் இல்லை. செய்யவும் மாட்டேன் என்று விடாப்பிடியாக சில மருமகள்கள் இருக்கிறார்கள். இதற்க்குக் காரணம் இவர்கள் சரியான கோணத்தில் இஸ்லாத்தின் குடும்ப இயலைப் புரிந்து கொள்ளாததே.
பெண்கள் என்றால் போதைக்குறியவர்கள் என்று பார்க்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கும் ஆண்மா உண்டு, அவர்களும் மனிதப் பிறவிதான் என்பதை உலகுக்கு உணர்த்தியது இஸ்லாம். பெண்களுக்கு இவ்வளவு கவுரவத்தையும், மரியாதையையும் தந்த இந்த மார்க்கத்தில் பிறந்த பெண்கள் தங்கள் பாலாராகிய மாமியாரை மதிக்காமல், பணிவிடைகள் செய்யாமல் அவர்களை வெறுத்து ஒதுக்குவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத படுபாதகச் செயல்பாடாகும்.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.(2:228) இந்த வசனம் மருமகளுக்கு மாத்திரம் உரியதன்று உண்மையில் அணைத்துப் பெண்களுக்கும் உரிய உரிமைகள் பற்றிப் பேசும் வசனமாகும்.
பெண்கள் தங்கள் கடமைகள் எது உரிமைகள் எது என்பதை சரியாக விளங்கிக் கொண்டால்தான் மிகச் சரியான இன்பகரமான முறையில் தங்கள் வாழ்க்கைகளை அமைத்துக் கொள்ள முடியும். கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெண்ணினம் இருந்ததை விட பல மடங்கு முன்னேறியதாகத் தான் தற்காலத்தில் இருக்கிறார்கள்.
கல்வியில், அறிவியலில், நாகரீகப் பண்பாட்டில் என்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை.
ஆனால் எவ்வளவு முன்னேற்றம் கண்டாலும் இன்றும் பத்திரிக்கையைப் புரட்டிப்பார்க்கும் போது மாமியார் மருமகள் பிரச்சினைகள் வெட்டுக் குத்துக்கள், குடும்பப் பிழவுகள் பற்றி பல செய்திகள் வந்த வண்ணமிருப்பதைப் பார்க்களாம். இதற்கான காரணம் என்ன? மாமியார் மருமகள் பற்றிய சரியான புரிதல் அவர்களுக்கு மத்தியில் ஏற்படவில்லை. விட்டுக் கொடுப்பு சகிப்புத் தன்மை பற்றிய அறவுரைகள் அவர்களை சரியாக செம்மைப்படுத்தவில்லை. ஆக முதலில் மாமியார் மருமகள் உறவு செம்மைப்படுத்தப்பட வேண்டும். குர்ஆனும் நபிமொழிகளும் சொல்லித் தரும் குடும்ப இயல் சரியான முறையில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கப்பட வேண்டும்.
குணவதியே கணவனின் காவலாளி.
கணவனுக்குறிய சொத்துக்கள், அவனுடைய குழந்தைகள், அவனுடைய வீட்டு நிலைபாடுகள் அனைத்துக்கும் பொருப்பாளியாக இஸ்லாம் மணைவியைத் தான் சொல்லித் தருகிறது.
ஒருவன் திருமணம் செய்யாத வரை அவனுடைய செல்வத்திற்கு, செயல்பாட்டிற்கு அனைத்திற்கும் அவனே பொருப்பாளியாக இருக்கிறான். என்றைக்கு அவன் ஓர் ஆடவன் என்ற எல்லையைத் தாண்டி கணவன் என்ற நிலையை அடைகிறானோ அன்றைக்கே அவனுடைய மணைவிக்கு இவனுடைய அனைத்துப் பொருப்புக்களும் கை மாறுகிறது.
கணவனுடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் மணைவியும் உரிமை படைத்தவளாக மாறிவிடுகிறாள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும்,அவன் குழந்தைகளுக்கும் பொருப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். (நூல் : புகாரி – 2554) 
கணவனின் வீட்டிற்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் மணைவிதான் பொருப்பானவள் என்றும் அந்தப் பொருப்புகள் பற்றிய கேள்வி கணக்கு மறுமையில் கண்டிப்பாக உண்டு என்பதையும் மேற்கண்ட செய்தியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
மணைவி என்பவள் தன்னுடைய மாமியாருக்கு மாத்திமல்ல, தேவையேற்பட்டால் மாமனாருக்கு, கணவனின் சகோதர சகோதரிகளுக்கும் உதவி ஒத்தாசைகள் பணிவிடைகள் செய்வதற்கு உரியவளாகிறாள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபியவர்களிடம்“அல்லாஹ்வின் தூதரே ! நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். நான் நபியவர்களிடம் மதீனாவுக்கு சீக்கிறமாக செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம் “நீ கண்ணிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான் “வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் திருமணம் முடித்துக் கொண்டேன் என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள் “கண்ணிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உண்ணுடனும் விளையாடலாமே!” என்று கூறினார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே ! எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என்எனக்கு சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொள்ளப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ அவர்களை பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும், அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலளித்தேன்.
(நூல் : புகாரி – 2967)
மேற்கண்ட செய்தியில் கண்ணிப் பெண்ணை திருமணம் செய்திருக்களாமே என்று நபியவர்கள் குறிப்பிட்ட நபித் தோழரிடம் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்லும் காரணம் சிறு வயதுடைய தனது சகோதரிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவே தான் ஒரு வாழ்ந்த அனுபவமுள்ள விதவைப் பெண்ணை மணந்ததாகச் சொல்கிறார்கள் அதை நபியவர்களும் ஆமோதிக்கிறார்கள்.
இன்னுமோர் செய்தியில் ஜாபிர் அவர்களைப் பார்த்து நீங்கள் செய்தது சரிதான் என்று ஊக்கமளிக்கும் விதமாகவும் நபியவர்கள் பேசுகிறார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாரு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். (அதற்கு) நபி (ஸல்) அவர்கள் “நீ செய்தது சரிதான்”என்று கூறினார்கள்.(நூல் : புகாரி – 4052)
சகோதரிகளுக்கு உதவ வேண்டுமென்பதையே நபியவர்கள் ஆமோதித்து அங்கீகரிக்கும் போது மாமியார் என்பவர்கள் சகோதரிகளை விட முற்படுத்தப் பட வேண்டியவர்கள் அதனால் அவர்களுக்கு உதவி உபகாரங்கள் செய்வது அல்லது பணிவிடைகள் செய்வது என்பது மிக முக்கியமான அதிகம் சிறப்புடைய ஒரு செயல்பாடுதான் என்பதை மிகத் தெளிவாக நாம் மேற்கண்ட செய்தியில் இருந்து புரிந்து கொள்கிறோம்.
அது மாத்திரமன்றி ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தான் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை சொன்னவுடன் அது சரியானது தான் என்றும் நபியவர்கள் ஊக்கமளித்து பதில் சொல்கிறார்கள்.
ஆக அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே ! மாமியார் பணிவிடை என்பது இஸ்லாம் அங்கீகரித்த ஒரு செயல்பாடு என்பது மட்டுமன்றி அதன் மூலம் கணவனின் கடமைகளை சரிவர செய்தவள் என்ற இடத்தை அடைந்து கொள்வதற்கும் அது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இங்கு சொல்லப்படுகிறது.
கணவனின் பெற்றோரை மதித்து, மாமி மருமகள் என்ற பிரச்சினைகளை மறந்து உண்மையான ஒரு முஸ்லீம் பெண்மணியாக சிறந்த குணவதியாக, மாமியாரையும் நமது தாயாராக மதித்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக!

நன்றி - தமிழ் தவ்ஹீத் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger