நானோ டெக்னாலஜி - எளிய அறிமுகம்!

நானோ டெக்னாலஜி - எளிய அறிமுகம்!ரு தக்கனூண்டு குட்டி இயந்திரம் மனித உடம்பிற்குள் சுற்றுலா சென்று கான்சர் பாதித்த ஒரு கூட்டம் செல் குன்றுகளைமட்டும் மிகச் சரியாகக் கண்டுபிடித்துத்  தாக்கி அழித்துவிட்டு உடம்பிலேயே கரைந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அது மருத்துவ உலகில் ஒரு பெரிய புரட்சி என்றே கருதப்படும். இன்றுவரை இப்படி ஒரு ஏற்பாடு இல்லை. கேன்சர் பாதித்த செல்லை அழிக்க அனுப்பப்படும் மருந்து அல்லது கதிரியக்க சிகிச்சை, அச் செல்களைச் சுற்றியிருக்கும் நல்ல பல செல்களையும் அழித்துவிடுகிறது. அதனால் தான் முடி கொட்டுவது, ஆங்காங்கே வீங்குவது போன்ற பக்கவிளைவுகள்  மனிதனை உருக்குலைக்கின்றன.

அதேபோல, அமெரிக்காவின் லைப்ரரி ஆப் காங்கிரஸின் அனைத்துப் புத்தகங்களின் தகவல்களையும் ஒரு தீப்பெட்டியை விடச் சிறிய பெட்டகத்தில் அடக்கிவிடலாமாம். மேற்படி காங்கிரஸ் சோனியா காந்தியின் இந்திரா காங்கிரஸ் அல்ல. உலகின் மிகப்பெரிய இரண்டு நூலகங்களுள் ஒன்று. மற்றொன்று? விக்கியில் தேடிப்பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!!.

இன்னும் இரும்பைவிடப் பல மடங்கு லேசானதும் பத்து மடங்கு உறுதியானதுமான உலோகம் கிடைத்தால் ஒட்டன்சத்திரத்தில் 'புர்ஜ்கலீபா'வை விட உயரமான கோபுரம் கட்டமுடியாதா என்ன?

இந்தக் குட்டி இயந்திரம், லேசான உலோகம், சிறிய தகவல் பெட்டகம் இதெல்லாம் சாத்தியப்படும் நாள் வெகுதொலைவிலில்லை என்று சொன்னால், இது எப்ப்பப? என்று வடிவேலு பாணியில் கேட்டீர்களானால், அதுதான் தாத்தா அப்துல் கலாமுக்கு விருப்பமான நானோ டெக்னோலஜியில் நடக்கும் ஆராய்ச்சிகள் வெற்றி பெறும்போது.. என்று சொல்ல வேண்டும்.

வரும் காலத்தில் நானோ டெக்னாலஜிதான் 'நானே டெக்னாலஜி'  என்ற அளவில் அடுத்த பெரிய விஷயமாகப் விஸ்வரூபமெடுக்கப் போகிறதென்று அத்துறையின் ஜாம்பவான்கள் எல்லாம் தமிழக எழுத்தாளர்களைப் போலல்லாமல் ஒருமித்து அடித்துச் சொல்கிறார்கள்.  இவ்வளவு ஆச்சரியங்கள் அடங்கிய அந்தத்துறையைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் குடி  முழுகிப்போய்விடாதென்பதால் கொஞ்சம்.. தெரிந்துகொள்வோம்.
நானோ டெக்னாலஜி - எளிய அறிமுகம்!முதலில் பெயர்க்காரணம்.

இல்லை, டாடா  நானோ காருக்கும் நானோ டெக்னாலஜிக்கும் எந்தவிதமான ஸ்னானப் ப்ராப்தியும் சத்தியமாக இல்லை.  நானோ டெக்னாலஜி-யின்  பின்னாலிருக்கும் பதமான 'டெக்னாலஜி' ன்னா தெரியுமா என்றுகேட்டால் பின்னிப் பெடலெடுக்கப்படலாம் என்பதால், அதைவிட்டுவிட்டு நானோவிற்கு மட்டும் வருவோம்.

நானோ என்றால் மிக மிக மிகச் சிறிய ஒரு நீட்டலளவை. ஐந்தாம் வகுப்பில் ஒருமீட்டர் நூறு சென்டீ மீட்டர்,  ஒரு சென்டீமீட்டர் பத்து மில்லீமீட்டர் என்ற வாய்ப்பாடு படித்திருப்போமே? அதில் இன்னும் கீழே கீழே கீழே போனால் பலவகையான மீட்டர்களைத் தாண்டி நானோ மீட்டர் என்று ஒன்று வரும். சாட்சாத் அதே நானோ மீட்டரின் நானோ தான் நமது நானோவும்.   ஒன்றும் ஒன்பது சைபர்களும் சேர்ந்த நானோ என்பது ஒரு மீட்டர்.   இந்த இலக்கத்தைக் கற்பனைப் பண்ணிப் பார்ப்பது கதைக்குதவாதென்பதால் எளிதாகப் புரிய இந்தச் சமாச்சாரங்களை முயன்று பாருங்கள்.
சாதாரணக் காகிதத்தின் தடிமன் 100,000 நானோவும், ஒரு அங்குலத்தில் 25,400,000 நானோவும், ஒரு தலைமுடியின் குறுக்குவெட்டு 100,000 நானோவும்,  சதா கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் உங்கள் நகம்  ஒரு செகண்டில் வளரும்  அளவு எல்லாம் நானோக்கள். அவ்வவளவு சிறியது.

சரி, சரீ, எதற்காக மெனெக்கெட்டு இவ்வளவு சிறிய அளவுகளோடு மல்லு கட்டவெண்டுமென்றால், காரியமிருக்கிறது. உலகின் எல்லாப் பொருட்களும் அணுக்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிறதென்பது ஆறாம் வகுப்பு அறிவியல். இந்த அணுவின் அளவுகளெல்லாம் நானோமீட்டர் அளவில்தான் இருக்கிறது. அணுவின் விட்டம் 0.1 லிருந்து 0.5 நானோ மீட்டர்வரை. நானோ டெக்னாலஜியின் ஆதார சுருதியே அணுக்களோடு விளையாடுவதென்பதால் நானோ மீட்டர் என்பது முக்கியமாகிறது.

நானோ டெக்னாலஜி எப்படி வேலைசெய்கிறது? எப்படின்னா,  மேலே சொன்ன அணுக்களோடு விளையாடுவதுதான். அதாவது எல்லா மேட்டர்களும் அணுக்களால் ஆனது. சே இல்லய்யா, அந்த மேட்டரைச் சொல்லவில்லை. அறிவியலில் இடத்தை அடைத்துகொள்வதும், நிறையுள்ளதுமெல்லாம் மேட்டர்தான். இந்த மேட்டர்களில் இருக்கும் அணுக்களுக்குள்ளும் நிறைய அணுத் துகள்கள் (sub atomic particles) புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்று தெரிந்த துகள்கள் தவிர இன்னும் பல துகள்கள் கண்டுபிடிக்கப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனவாம். யாராவது வேலை இல்லாதவர்கள்..கண்டுபிடித்துகொள்ளட்டும்.


நானோ டெக்னாலஜி - எளிய அறிமுகம்!இந்தத் துகள்களடங்கிய அணுவுக்கு சில பண்புகள் இருக்கிறது. இந்தப் பண்புகள் தான் அந்த மேட்டரின் மணம், நிறை, எடை போன்றவைகளைத் தீர்மானிக்கிறது. அணுக்கள் கோடிக்கணக்காக சேர்ந்திருக்கும்பொழுது பண்புகள் மாறும். இரும்பு இரும்பாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பது அதனுள் இருக்கும் அணுக்களின் பண்புதான். இந்த அணுக்களின் கட்டமைப்பை நாம் மாற்றினால் நமக்குத் தேவையான பண்புகளடங்கிய  மேட்டரை உருவாக்கிவிடலாம். இப்படி உருவாக்கும் டெக்னிக் தான் நானோ டெக்னாலஜி.

இதன் மூலம் கற்பனைக்கெட்டாத சிறிய கருவிகளை உண்டாக்க முடியும். உதாரணமாக, இரண்டு நானோமீட்டர் விட்டமுள்ள, உயிரின் ரகசியம் பொதிந்திருக்கும்  டி.ன்.ஏ வையோ அல்லது 5.5 நானோமீட்டர் விட்டமுள்ள உடலில் ஆக்சிஜனைச் சுமந்துசெல்லும் ஹீமோகுளோபின் என்ற புரோட்டீனையோ செம்மைப் படுத்த அதே அளவுள்ள கருவிகள் வேண்டும்.
அது நானோ டெக்னோலஜியில் மட்டும்தான் சாத்தியம்! அந்தச் சாத்தியங்கள் கைகூடும் நாள் வெகு தொலைவிலில்லை என்று நம்புவோம்.

அபூ பிலால்
நன்றி - இந்நேரம் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger