அண்ணல் நபியின் விண்ணுலப் பயணம்.

vinulaga copyஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிருந்து பைத்துல் முகத்தஸுக்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்ட அற்புத நிகழ்ச்சிக்கு இஸ்ரா – இரவில் கூட்டிச் செல்லுதல் – என்று சொல்லப்படும். பின்னர் பைத்துல் முகத்தஸிருந்து விண்ணுலகத்திற்குச் சென்ற அற்புத நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது.
இது எந்த மாதத்தில் எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கான துல்யமான வரலாற்றுக் குறிப்பு எதுவும் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவம் பெற்ற பின் மக்காவில் இருக்கும் போது நடந்தது என்பதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 17:1)
இஸ்ரா, மிஃராஜ் என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த அற்புத நிகழ்ச்சிகளில் கற்பனைச் சரக்குகள், கட்டுக் கதை கழிவுகள், கலப்படங்கள் அதிகமாகக் கலக்கப் பெற்று உண்மை எது? பொய் எது? என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு அவை ஆக்கப்பட்டு விட்டன.
குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியான சத்தியக் கருத்துக்களை மட்டும் மாதந்தோறும் இதழ் வடிவில் தந்து கொண்டிருக்கும் ஏகத்துவம் இம்மாதம் இஸ்ரா, மிஃராஜ் பற்றி சரியான வடிவத்தில் தருகின்றது.
அல்குர்ஆன், புகாரி, முஸ்ம் மற்றும் இன்ன பிற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களிருந்து இஸ்ரா, மிஃராஜ் பற்றி தெளிந்த நீரோடையென பளிச்சென்று தெரிகின்ற உண்மை நிகழ்வுகளை மட்டும் இன்ஷா அல்லாஹ் இவ்வாக்கத்தில் நாம் காணவுள்ளோம்.
இங்கே வாசகர்கள் ஒரு வினாவைத் தொடுக்கலாம். இஸ்ரா, மிஃராஜ் எப்போது நடந்தது என்பதற்குத் துல்யமான வரலாற்றுக் குறிப்பில்லை எனக் குறிப்பிட்டு விட்டு, வழக்கமாக தொன்று தொட்டு அன்று முதல் இன்று வரை தென்னகத்தில் – இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா இன்னும் இதர நாடுகளில் ரஜப் மாதம் 27ஐ மிஃராஜ் என்று படு விமரிசையாகக் கொண்டாடி அனுஷ்டிக்கும் போது, இந்தச் சிறப்பிதழ் அதை உறுதி செய்வது போல் ஆகாதா? என்பது தான் அந்த வினா!
நபி (ஸல்) அவர்கள் பிறந்த தின விழா சீசன் வரும் போது, மீலாது விழா தொடர்பான பித்அத்களை மக்களிடம் பிரகாசமாகப் பிரச்சாரம் செய்வது போல் இந்த மிஃராஜுடைய சீசனில் இது பற்றிய உண்மை விபரங்களை மக்களுக்கு வழங்கவிருக்கின்றோம்.
புகாரி, முஸ்ம் இன்னும் பிற ஆதார நூல்களில் இஸ்ரா, மிஃராஜ் பற்றிய நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி வரும் எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. மிஃராஜ் பற்றி ஒரு ஹதீஸில் வராத விபரம் மற்றொரு ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதில் வராத விபரம் வேறொரு ஹதீஸில் வருகின்றது. இது போன்று பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெறும் பல்வேறு துண்டுகளை இணைத்து ஒரு சரமாகத் தொடுத்து இஸ்ரா, மிஃராஜ் பற்றிய ஒரு தொகுப்பை வழங்க முயற்சித்துள்ளோம்.
இந்த விண்வெளிப் பயணத்தின் போது நடைபெற்ற சம்பவங்களின் வரிசைக் கிரமம் பற்றிய ஒரு செய்தியை இங்கு குறிப்பிடுவது அவசியம். அதாவது, இப்போது நாம் தொகுத்திருக்கும் இந்த வரிசைப்படி தான் மிஃராஜின் போது நிகழ்வுகள் நடைபெற்றன என்று உறுதி கூற முடியாது. ஏனென்றால், ஒரு ஹதீஸில் பைத்துல் மஃமூரைப் பற்றி கூறப்பட்ட பிறகு ஸித்ரத்துல் முன்தஹாவைப் பற்றி கூறப்படுகின்றது. ஆனால் மற்றொரு ஹதீஸில் ஸித்ரத்துல் முன்தஹா பற்றி சொல்லப்பட்ட பிறகு பைத்துல் மஃமூர் இடம் பெறுகின்றது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், மிஃராஜின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆதாரப்பூர்வமான பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பதை நாம் நம்ப வேண்டும். அவை எந்த வரிசையில் நடைபெற்றன என்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை. இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டிய அற்புதங்கள் என்பது தான் இங்கு முக்கியமான விஷயமே தவிர, வரிசை ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவை தவிர, மிஃராஜைப் பற்றி மக்களிடம் நிலவும் தவறான நம்பிக்கைகளைப் பற்றியும், மிஃராஜின் பெயரால் நிலவும் கதைகளைப் பற்றியும் இவ்வாக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இஸ்ரா = கஅபாவிருந்து அக்ஸா வரை.
மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல்குர்ஆன் 17:1)
ஜிப்ரீல் வருகை – வீட்டு முகடு திறக்கப்படுதல்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
“நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு அதை மூடி விட்டார்கள்”
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி 349)
(பின்வரும் ஹதீஸில் கஅபாவில் இருக்கும் போது நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகின்றது. இரண்டையும் இணைத்துப் பார்க்கையில் நபி (ஸல்) அவர்களை வீட்டிருந்து ஜிப்ரீல் (அலை) கஅபாவிற்கு அழைத்துச் சென்று அங்கு இந்நிகழ்ச்சி நடந்ததாக விளங்கிக் கொள்ளலாம்)
புராக்.
நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது….(இந்த நிகழ்ச்சி நடந்தது)….. கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதுமான புராக் எனும் வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது”
(அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி), நூல்: புகாரி 3207)
கடிவாளம் பூட்டப்பட்டு, சேணமிடப்ட்டவாறு புராக் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதில் ஏற சிரமப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல், “முஹம்மதிடம் நீ ஏன் இவ்வாறு செய்கின்றாய்? அவரை விட அல்லாஹ்விடம் மதிப்பிற்குரிய எவரும் உன் மீது ஏறியதில்லையே” என்று (அதை நோக்கி) கூறியதும், அதன் மேனி வியர்த்து வழிந்தோடத் துவங்கி விட்டது.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),நூல்: திர்மிதீ 3056)
“தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது”
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: முஸ்ம் 234)
மூஸா (அலை) அவர்களைக் காணுதல்.
நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)
நூல்கள்: முஸ்ம் 4379, அஹ்மத் 12046, நஸயீ 1613
பைத்துல் முகத்தஸிற்குச் செல்லுதல்.
மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 17:1)
பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளியில் நுழைந்தேன்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்ம் 234, அஹ்மத் 12047)
பைத்துல் முகத்தஸில்…
என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 251)
நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும்) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. “அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்” (அல்குர்ஆன் 32:23)
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி 3239, முஸ்ம் 239)
நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தல்.
அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், “முஹம்மதே! இதோ மாக்! நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்” என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதல் எனக்கு (ஸலாம்) சொல் விட்டார். (முஸ்லிம் 251)
(இந்தச் செய்தி இப்னு ஜரீர் என்ற நூலும் இடம்பெற்றுள்ளது)
மிஃராஜ் விண்ணுலகப் பயணம்.
ஜிப்ரீல் (அலை) என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள (முதல்) வானத்தை அடைந்த போது, வானத்தின் காவலரிடம், “திறங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “யார் அது?” என்று கேட்டார். “இதோ ஜிப்ரீல்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார். அதற்கு “உங்களுடன் வேறெவராவது இருக்கின்றாரா?” என்று கேட்கப்பட்டது. அவர், “என்னுடன் முஹம்மது இருக்கின்றார்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரச் சொல்) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஆம், திறங்கள்” என்றார்.
(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் மேலே சென்ற போது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தனது வலப்பக்கம் பார்க்கும் போது சிரித்தார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து), “நல்ல இறைத் தூதரே! வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான், “ஜிப்ரீலே! இவர் யார்?” என்று கேட்டேன். அவர், “இவர் ஆதம் (அலை) அவர்கள். அவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப்பக்கம் இருப்பவர் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவே தான் அவர் வலப்பக்கத்திலுள்ள தம் மக்களைப் பார்க்கும் போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுகின்றார்” என்று பதிலளித்தார்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 3342)
பிறகு நாங்கள் இரண்டாம் வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.
பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், “சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.
பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.
நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி), நூல்: புகாரி 3207)
“அவரை உயரமான தகுதிக்கு உயர்த்தினோம்” என்ற (19:57) வசனத்தை ஓதினேன்.
(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)
பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.
பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடத்தில் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள்.
பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.
நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், “சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். “நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், “இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திருந்து சொர்க்கம் புகுவார்கள்” என்று பதிலளித்தார்.
பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். “யார் அது?” என்று வினவப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உங்களுடன் இருப்பவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். ”அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஆம்” என்று பதிலளித்தார். “அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை” என்று சொல்லப்பட்டது.
நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், “மகனும், நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று சொன்னார்கள். பிறகு பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது.
(புகாரி 3207)
இப்ராஹீம் (அலை) அவர்கள் பைத்துல் மஃமூரில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.
(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)
பைத்துல் மஃமூர்.
நான் அதைக் குறித்து ஜிப்ரீடம் கேட்டேன். அவர், “இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்” என்று கூறினார்.
ஸித்ரத்துல் முன்தஹா.
பிறகு “ஸித்ரத்துல் முன்தஹா’ (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்டப்பட்டது. அதன் பழங்கள் ஹஜ்ர் என்ற இடத்தின் கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போல் இருந்தன.
(புகாரி 3207)
அல்லாஹ்வின் கட்டளைப்படி அதை மூட வேண்டியது மூடியதும் அது சிவப்பு மாணிக்கங்களாக அல்லது பச்சை மரகதங்களாக அல்லது அவற்றைப் போன்றதாக அது மாறி விட்டது.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: அஹ்மத் 11853)
அதன் வேர் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர், “உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்.
(புகாரி 3207)
மூன்று பாத்திரங்களில் மூன்று பானங்கள்.
அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து அருந்தினேன். அப்போது என்னிடம், “நீங்களும் உங்களுடைய சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்” என்று சொல்லப்பட்டது.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: புகாரி 5610)
சிரிக்க வைக்கும் ஜிப்ரீன் இயற்கைத் தோற்றம்.
நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.
அழகிய தோற்றமுடைய வமை மிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:1-18)
(இங்கு நபி (ஸல்) அவர்கள் பார்த்தது அல்லாஹ்வைத் தான் என்ற கருத்தில் மஸ்ரூக் என்பார், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவிய போது ஆயிஷா (ரலி) கூறியதாவது) இந்தச் சமுதாயத்தில் முதன் முதல் விசாரித்தது நான் தான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் ஜிப்ரீல் தான். ஜிப்ரீலை அவர் படைக்கப்பட்ட அந்த இயற்கையான தோற்றத்தில் மேற்கண்ட அந்த இரு சந்தர்ப்பங்களில் தவிர வேறு சந்தர்ப்பத்தில் நான் கண்டது கிடையாது” என்று சொன்னார்கள்.
(அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் 259)
(புகாரியில் 4855வது ஹதீஸிலும் இது கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்களா? என்ற தலைப்பில் விரிவாகப் பார்ப்போம்)
நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல்: புகாரி 4856)
பச்சை இலைகளில் மழைத் துளிகள் நிற்பது போல், முத்தைப் போன்று ஜிப்ரீல் தன் கால்களின் சுவடு தரையில் படியாதவாறு நின்றார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: இப்னுஜரீர்)
சுவனத்தில் நுழைக்கப்படுதல்.
பின்னர் நான் சுவனத்தில் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் ஆன கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: புகாரி 349)
அல்கவ்ஸர் தடாகம்.
நான் சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர், “இது தான் உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்கிய அல்கவ்ஸர்” என்று கூறினார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணம் மிக்க கஸ்தூரியாகும்.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),
நூல்: புகாரி 6581, அஹ்மத் 11570)
நான் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி),
நூல்: புகாரி 3241, 5198, 6449, 6546, முஸ்லிம் 4920, திர்மிதீ 2527, 2528, அஹ்மத் 1982
மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),
நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861
இறுதி எல்லையும் இறை அலுவலகமும்.
ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்த போது, அங்கு நான் (வானவர்களின்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 3342)
ஸித்ரத்துல் முன்தஹா ஒரு விளக்கம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஸித்ரத்துல் முன்தஹா வரை கொண்டு செல்லப்பட்டார்கள். இது ஆறாவது வானத்தில் அமைந்திருக்கின்றது. பூமியிருந்து வானத்திற்கு ஏற்றிச் செல்லப்படுபவை இங்கு வந்து சேர்ந்ததும் கைப்பற்றப்படுகின்றன. அதற்கு மேருந்து இறங்குபவை இங்கு வந்து சேர்ந்ததும் கைப்பற்றப்படுகின்றன. ஸித்ரத்துல் முன்தஹாவை தங்க விரிப்பு மூடியிருக்கும்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி),
நூல்: முஸ்லிம் 252)
(குறிப்பு: முஸ்ம் 234வது ஹதீஸில் ஸித்ரத்துல் முன்தஹா 7வது வானத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு 6வது வானத்தில் என்று இடம் பெறுகின்றது. இதற்கு ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரியில், ஸித்ரத்துல் முன்தஹா ஆறாவது வானத்தில் தொடங்கி ஏழாவது வானத்தில் அதன் கிளைகள் விரிந்து கிடக்கின்றது என்று கருத்துக் கொள்ளலாம் என்று விளக்கமளிக்கின்றார்கள்)
அல்லாஹ் விதித்த கடமை.
பிறகு என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப் பட்டுள்ளன” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உமது இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
நான் திரும்பச் சென்று இறைவனிடம் அவ்வாறே கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதல் சொன்னவாறே நடந்தது. மீண்டும் முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க இறைவன் இருபதாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல, (இறைவனிடம் நான் மீண்டும் குறைத்துக் கேட்ட போது) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.
பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், “என்ன செய்தீர்கள்?” என்று கேட்க, “அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான்” என்று கூறினேன். அதற்கு அவர்கள் முன்பு கூறியதைப் போலவே கூறினார்கள். அதற்கு, “நான் ஒப்புக் கொண்டு விட்டேன்” என்று பதிலளித்தேன்.
அப்போது, “நான் எனது விதியை அமல் படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது.
(புகாரி 3207)
“ஒவ்வொரு பகல், இரவிலும் அவை ஐந்து நேரத் தொழுகைகள்! ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் (வீதம்) ஐம்பதாகும். ஒருவர் ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே – அவர் அதைச் செய்யாவிட்டாலும் – அவருக்காக ஒரு முழு நன்மை பதிவு செய்யப்படுகின்றது. அதைச் செயல்படுத்தி விட்டால் அவருக்கு அது பத்து நன்மைகளாகப் பதியப்படுகின்றது.
ஒருவர் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று எண்ணி அதைச் செய்யாமல் விட்டு விட்டால் எதுவும் பதியப்படுவதில்லை. அவர் அந்தத் தீமையைச் செய்து விட்டால் அதற்காக ஒரேயொரு குற்றமே பதிவு செய்யப்படுகின்றது” என்று அல்லாஹ் கூறினான்.
(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),
நூல்: முஸ்லிம் 234)
அப்போது அவன் தன் தூதருக்கு மூன்றை வழங்கினான்.
  1. ஐந்து நேரத் தொழுகைகள்.
  2. சூரத்துல் பகராவில் இறுதி வசனங்கள்.
  3. நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தைச் சார்ந்த, அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காதவருக்கு பெரும் பாவங்கள் மன்னிப்பு.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 252, திர்மிதீ 3198, நஸயீ 448, அஹ்மத் 3483
குறைஷிகள் நம்ப மறுத்தல்.
என்னை குறைஷிகள் நம்ப மறுத்த போது நான் கஅபாவின் ஹிஜ்ர் பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் முகத்தஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 3886
நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காலையில் மக்காவில் இருந்த போது என்னுடைய இந்த (பயண) விஷயமாக நான் தாங்க முடியாத கவலை கொண்டிருந்தேன். மக்கள் என்னைப் பொய்யராக்கி விடுவார்கள் என்று அறிந்திருந்தேன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) தனியாகக் கவலையுடன் அமர்ந்திருக்கும் போது, அங்கு சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.
நபி (ஸல்) அவர்களிடம், “என்ன? ஏதேனும் புதுச் செய்தி உண்டா?” என்று கிண்டலாகக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் கேட்டான். “இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்” என்று கூறினார்கள். எங்கே? என்று அவன் வினவிய போது, “பைத்துல் முகத்தஸ்” என்று பதிலளித்தார்கள். “அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?” என்றான். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
தனது கூட்டத்தாரை அழைத்து வந்ததும் (அவர்களது முன்னிலையில்) நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்து விடுவார்களோ என்று பயந்த அவன், அந்தச் செய்தியைப் பொய்ப் படுத்துவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
“உம்முடைய கூட்டத்தாரை நான் அழைத்துக் கொண்டு வந்தால் என்னிடம் அறிவித்ததை அவர்களிடமும் அறிவிப்பீரா?” என்று கேட்டான். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
உடனே அபூஜஹ்ல், “பனீ கஅப் பின் லுவை கூட்டத்தாரே! வாருங்கள்!” என்று கூறினான். அவனை நோக்கி சபைகள் கிளர்ந்தெழுந்து வரத் துவங்கி அவ்விருவருக்கும் மத்தியில் அமர்ந்தனர். “என்னிடம் அறிவித்ததை உம்முடைய கூட்டத்தாரிடம் அறிவியுங்கள்” என்று அபூஜஹ்ல் கூறினான்.
“இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்” என்று கூறினார்கள். எங்கே? என்று அவர்கள் வினவிய போது, “பைத்துல் முகத்தஸ்” என்று பதிலளித்தார்கள். “அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?” என்று அக்கூட்டத்தினர் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
சிலர் கை தட்டியவர்களாகவும், சிலர் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டும், “நீர் அந்தப் பள்ளியை எங்களிடம் வர்ணனை செய்ய முடியுமா?” என்று கேட்டனர். அந்த ஊருக்குச் சென்று பள்ளியைப் பார்த்தவரும் அந்தச் சபையில் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது. (இதைக் கேட்ட) மக்கள், “வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார்” என்று கூறினர்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அஹ்மத் 2670)
நன்றி - SLTJ 
இதனுடன் தொடர்புடையவை 

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்



Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger