விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?


ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும் திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.
அல்லாஹ்வை இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாது என்பதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் சான்றுகள் நிறைந்துள்ளன.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்42:51)
இவ்வசனத்தில் அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று வழிகளில்தான் பேசுவான் என்று தெளிவாக கூறுகிறான். இவை அல்லாத வேறு வழிகள் இல்லை என்பதை விளக்கமாகக் குறிப்பிடுகிறான்.
இறைவன் மனிதர்களிடம் பேசும் முறைகள் மூன்று. அவை. 1. வஹீயின் மூலம் 2. திரைக்கு அப்பால் இருந்து 3. ஒரு தூதரை அனுப்பி இந்த வழிகளில் நேரடியாக பேசுவதைப் பற்றி கூறாததிருந்து அல்லாஹ் அவ்வழியை அடைத்து விட்டான் என்பதை விளங்கலாம். ஏனெனில் நமது கண்களுக்கு அவனைப் பார்க்கும் அளவிற்கு சக்தி கிடையாது.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103)
இக்கருத்தை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான். உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகல் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகல் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம் 293, அஹ்மத் 18765,18806
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது அல்லாஹ் கூறிய வார்த்தையிருந்தும் அந்தச் சம்பவத்திருந்தும் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை அறியலாம்.
நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது “என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். அதற்கு (இறை வன்) “என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்” என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது “நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்” எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)
மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் உன்னை நான் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது “என்னை நீர் பார்க்கவே முடியாது” என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.
இச்சம்பவம் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகத்தில் நேரடியாக அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகிறது.
யாரும் இறந்து மறு உலகை அடையாமல் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
உங்களில் எவரும் தன் இறைவனை அவர் இறக்காத வரை பார்க்க முடியாது என்பதை அறிந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்ம் 5215)
மேலும் நபி (ஸல்) அவர்களே மிகத் தெளிவாக நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறிய செய்தி ஹதீஸ் நூற்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு “அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204, அஹ்மத் 20427, 20522, 20547
நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாகத் தீôப்பளித்திருக்க பல ஆம் பெருந்தகைகள் தங்கள் பயானில் நபி (ஸல்) அவர்கள் மிராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் இதே கருத்தை கூறியுள்ளதை ஸஹீஹுல் புகாரியில் பார்க்க முடிகிறது.
முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை நேரில் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தோற்றத்திலும் அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3234
இதே செய்தி ஸஹீஹ் முஸ்மில் மிகத் தெளிவாக விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) “அபூ ஆயிஷாவே, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார். என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன் அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்” என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே, நிதானித்துக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்” (81:23) என்றும் “அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ர) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?
“வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.” (42:51)
(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் 287
அறிவுச் சுடராக இருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று யாராவது கூறினால் அவர் “அல்லாஹ் பொய்யைக் கூறி விட்டான்” என்ற அபாண்டத்தைச் சுமத்தி விட்டார் என்று திருமறை குர்ஆன் சான்றுகளுடன் கூறியிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்கவில்லை என்பதற்கு இதை விட வமையான சான்றுகள் எதுவும் தேவையில்லை.
அன்னை அயிஷா (ரலி) அவர்கள் எடுத்து வைக்கும் வமையான சான்றுகள் நபி (ஸல்) அவர்களும் மற்ற எவரும் இவ்வுலகில் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்க முடியாது என்பதை எடுத்துரைக்கிறது.
இத்தனை சான்றுகள் இருந்தும் சிலர் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்தார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸைச் சான்றாகக் கூறுகின்றனர்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது “அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் கூறவில்லையா?” என்று நான் கேட்டேன். “நாசமாய் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்” என்று கூறி விட்டு “இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்கு காட்டப்பட்டது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: திர்மிதீ 3201
இச்செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல. மேலும் நபி (ஸல்) அவர்களே நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.
நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தால் அல்லாஹ்வைக் கண்டார்களா?
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள்; அதற்குச் சான்றுகள் உள்ளன என கூறி சில ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 284
(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள்
அறிவிப்பவர்: அபுல் ஆயா, நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203, அஹ்மத் 1855
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை. ஏனெனில் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 53:13) வசனத்தின் விளக்கமாகத் தான் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். முஸ்ம் (287) செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான். இதை நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் நபி (ஸல்) அவர்களின் விளக்கவுரையே சரியானது. எனவே இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல.
நபி (ஸல்) அவர்கள் கனவில் அல்லாஹ்வைக் கண்டார்களா?
சிலர் நபி (ஸல்) அவர்கள் கனவில் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று கூறுகின்றனர். அதற்குச் சில சான்றுகளைச் சமர்ப்பிக்கின்றனர். அவை சரியா எனப் பார்ப்போம்.
நாங்கள் சூரிய உதயத்தைப் பார்த்து விடுவோமோ என்ற அளவிற்கு ஒரு நாள் காலை சுப்ஹுத் தொழுûக்கு வராமல் நபி (ஸல்) அவர்கள் தடங்கலுக்கு உள்ளானார்கள். பின்னர் விரைவாக வந்தார்கள், தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அத்தொழுகையை சுருக்கமாகத் தொழுதார்கள். ஸலாம் கூறிய போது உயர்ந்த சப்தத்தில், “உங்கள் வரிசையிலேயே நில்லுங்கள்” என்று கூறி எங்கள் பக்கம் திரும்பினார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்.
காலையில் உங்களிடம் வருவதை விட்டும் தடங்கலான விஷயத்தை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் இரவில் எழுந்து உளூச் செய்தேன். எனக்கு விதியாக்கப்பட்ட அளவிற்குத் தொழுதேன். எனக்குத் தொழுகையில் சிறு தூக்கம் ஏற்பட்டுப் பின்னர் அதில் ஆழ்ந்து போய் விட்டேன். அப்போது என்னுடைய இறைவன் அழகிய தோற்றத்தில் இருக்கக் கண்டேன். “முஹம்மதே” என்றான். நான், “என் இறைவா, லப்பைக் (ஆஜராகி விட்டேன்)” என்றேன். “உயர்ந்த (வானவர்) கூட்டத்தினர் எதற்குச் சண்டையிடுகிறார்கள் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டான். நான், “தெரியாது” என்றேன். இவ்வாறு மூன்று முறை கேட்டான். பின்னர் அவன் முன் கையை என் தோள் புஜத்தில் வைத்தான். அவனின் விரல்களின் குளிர்ச்சியை என் நெஞ்சில் உணர்ந்தேன். ஒவ்வொரு பொருளும் எனக்காகக் காட்சியளித்தது, நான் அறிந்து கொண்டேன்…
அறிவிப்பவர்: முஆத் (ரலி), நூல்: திர்மிதீ 3159, அஹ்மத் 2103
இச்செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. இச்செய்தி முரண்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இக்கருத்து தொடர்பாக வரும் எதுவும் ஆதாரப்பூர்வமானது அல்ல. அனைத்தும் குழப்பம் நிறைந்ததாகும் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தனது இலல் என்ற நூல் அனைத்து அறிவிப்புகளை எடுத்தெழுதி ஆய்வு செய்து இவ்வாறு கூறியுள்ளார்கள். (பார்க்க: இலல் தாரகுத்னீ, பாகம் 6, பக்கம் 56)
எனது இறைவனைக் கனவில் கம்பீரமான இளைஞன் தோற்றத்தில் பசுமையானதில் பார்த்தேன். தங்கத்தாலான செருப்பு இருந்தது. அவன் முகத்தில் தங்கத்தாலான திரை இருந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: உம்மு துஃபைல் (ரலி), நூல்: தப்ரானீ கபீர் (பாகம் 25, பக்கம் 143)
இச்செய்தியில் இடம் பெறும் அம்மாரா என்பவர் உம்மு துஃபைல் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. எனவே இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகிறது.
“நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?” என்று நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என கூறி, முத்துக்களாலான முடிகளுடன் இளைஞர் தோற்றத்தில் அவனைப் பார்த்தார்கள். அவனுடைய இரண்டு பாதங்களும் பசுமையான (தோட்டத்)தில் இருந்ததைப் போன்றிருந்தது.
அறிவிப்பவர்: இக்ரிமா, நூல்: தப்ரானீ அவ்ஸத் (பாகம் 5. பக்கம் 93)
இச்செய்தியில் இடம் பெறும் ஜைத் பின் அஸ்ஸகன் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அஸ்தீ அவர்கள் குறிபிட்டுள்ளார்கள். (ஸானுல் மீஸான் பாகம் 2, பக்கம் 507)
“நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் விசாரித்து வருமாறு (ஒரு மனிதரை) அனுப்பினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆம் என்று சொல் அனுப்பினார்கள். “எப்படிப் பார்த்தார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “மனித தோற்றத்தில் தங்தத்தாலான நாற்காயில் அமர்ந்திருந்தான். அதை நான்கு வானவர்கள் சுமந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மனிதத் தோற்றத்திலும் இன்னொரு வானவர் சிங்கத் தோற்றத்திலும் இன்னொரு வானவர் காளைத் தோற்றத்திலும் இன்னொரு வானவர் இராஜாளி பறவைத் தோற்றத்திலும் இருந்தனர். அவன் பசுமையான பூங்காவில் இருந்தான். அவன் மேல் தங்கத்தாலான திரை இருந்தது” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ ஸலமா, நூல்: அல்இலலுல் முத்தநாஹியா (பாகம் 1, பக்கம் 38), அஸ்ஸுன்னா (பாகம்1, பக்கம் 176)
இச்செய்தியை அஸ்ஸுன்னா என்ற நூல் பதிவு செய்த இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அவர்கள் இச்செய்தியின் இறுதியில் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும். மேலும் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: அஸ்ஸுன்னா பாகம் 1, பக்கம் 176)
யார் தனது இறைவனைக் கனவில் பார்க்கிறாரோ அவர் சுவர்க்கம் சொல்வார்.
அறிவிப்பவர்: இப்னு ஸீரீன், நூல்: தாரமீ 2057
இச்செய்தியில் இடம்பெறும் யூஸூஃப் பின் மைமூன் என்பவர் பலவீனமானவர். இவரை இமாம் புகாரீ, அபூ ஹாத்தம் ஆகியோர் உட்பட பலர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 11, பக்கம் 375) மேலும் இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல. இதை அறிவிக்கும் இப்னு ஸீரீன் என்பவர் தாபியீ (நபித் தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) ஆவார்.
சிலர் தங்கள் இமாமின் மதிப்பை மக்கள் மத்தியில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்கள் இமாம் அல்லாஹ்வைக் கனவில் பல தடவை பார்த்துள்ளார்கள் என்று பொய்யான செய்திகளையும் கூறியுள்ளனர்.
அபூஹனீபா அவர்கள் கனவில் இறைவனைப் பார்த்தது தொடர்பாக பிரபலமான கதை ஒன்று உள்ளது. இதை ஹாபிழ் அந்நஜ்முல் கைத்தீ அவர்கள் கூறியுள்ளார்கள். அந்தக் கதை இதோ:
இமாம் அபூஹனீபா அவர்கள் கூறுகிறார்கள்: நான் இறைவனை 99 தடவை கனவில் பார்த்தேன். பின்னர் 100வது தடவை பார்த்தால் மறுமை நாளில் உன்னுடைய வேதனையிருந்து படைப்பினங்கள் எதைக் கொண்டு வெற்றியடையும்? என்று கேட்பேன் என்று நான் மனதில் கூறிக் கொண்டேன்…
(ரத்துல் முக்தார், முன்னுரை)
இவ்வாறு பல கதைகள் மக்கள் மன்றத்தில் உலா வருகின்றன. நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்? எப்படி இப்படிப்பட்ட கதைகள் உலா வருகின்றன?
இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாவிட்டாலும் மறுமையில் அனைவரும் பார்க்க முடியும் என்பதற்கு திருமறைக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி - tntj.net 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger