அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் (35:28) கூறுகின்றான்.
ஆனால் அல்லாஹ்வை அஞ்சாதவர்கள் ஆலிம்கள் தான் என்பதை தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான சுன்னத் வல்ஜமாஅத் ஆலிம்கள் நிரூபித்து வருகின்றனர்.
அல்லாஹ்வை விட்டு விட்டு அவனது அடியார்களான முஹம்மத் (ஸல்), முஹ்யித்தீன் அப்துல் காதிர், காஜா முஈனுத்தீன், ஷாகுல் ஹமீத் போன்றோரை அழைத்துப் பிரார்த்தனை செய்யும் இணை வைப்பை இவர்கள் எந்தவித அச்சமுமின்றி செய்து வருவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
இங்கே இந்தத் தலைப்பையொட்டிய எடுத்துக்காட்டு,
இவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது அள்ளி, அளந்து விடுகின்ற பொய்யான ஹதீஸ்களாகும்.
நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் இந்தச் செய்தி புகாரி 106, 107, 108, 109, 110 ஆகிய எண்களிலும் புகாரியிலேயே வேறு பல இடங்களிலும், இன்னும் முஸ்லிம் உள்ளிட்ட ஏராளமான ஹதீஸ் நூற்களிலும் பதிவாகியுள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்: மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார். இதை முஃகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி புகாரி 1291, முஸ்லிம் 5 ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது பொய் சொன்னால் நரகம் தங்குமிடம் ஆகிவிடும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான செய்திகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தி துணுக்காக ஒருவர் அறிவித்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையும் ஆவணப்படுத்தப்பட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்தது அல்லாஹ்வின் அச்சம் தான்.
அந்த அச்சத்தின் காரணமாகவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதில் அதிகக் கவனம் செலுத்துகின்றது. இந்த ஜமாஅத்தில் உள்ள ஆலிம்களும், அழைப்பாளர்களும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை தங்கள் உரைகளில் ஆதாரமாகக் காட்டுவதில் அதிகபட்சக் கவனத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கின்றது. ஹதீஸ்களை தங்கள் சொற்பொழிவுகளில் ஆள்கின்ற போது அதிக அக்கறை எடுக்கச் சொல்கின்றது. சில ஹதீஸ்களில் அடங்கியிருக்கின்ற சம்பவங்கள், கேட்பவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்ற சுவையும், சுண்டியிழுக்கின்ற ரசனையும், ஒரு சில கட்டங்களில் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்ற அளவுக்கு உள்ளங்களை உருக்கும் உணர்ச்சி மிகு நிகழ்வுகளும் இருக்கும். ஆனால் சுவைமிக்க அந்தக் செய்தியின் அறிவிப்பாளர் தொடர் அடி வாங்கியிருக்கும். அதாவது பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் அந்த ஹதீஸ் அமைந்திருக்கும்.
ஒரு ஜும்ஆ உரைக்காக ஹதீஸ்களைத் தேடும் போது, ஒரு குறிப்பிட்ட தலைப்பின் மொத்த சாரமும், சக்கரமும் எடுப்பான அந்தச் சம்பவத்தை அச்சாணியாகக் கொண்டு சுழன்றிருக்கும். அச்சாணி கழன்று விடும் போது சக்கரம் எப்படிச் சுழல முடியும்? அந்தச் சம்பவம் பலவீனமான ஹதீஸின் அடிப்படையில் அமைந்தது என்று தெரிந்து விடும் போது அதை விட்டு விட்டு வேறு தலைப்புக்கு மாறுவதைத் தவிர அந்தப் பேச்சாளருக்கு வேறு வழியில்லை. இந்த அளவுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளர்கள் கவனம் எடுக்கையில், சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் அணுவளவும் அல்லாஹ்வின் அச்சமின்றி, நபி (ஸல்) அவர்கள் சொல்லாததை, ஹதீஸ்களில் இல்லாததை, ஏனோ தானோவென்று அடித்து விடுகின்றனர். அது அவர்களை ஆதரிக்கின்ற, அல்லது அவர்களது ஆதரவில் உள்ள மாத இதழ்களில் எழுத்து வடிவத்திலும் வருகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மீது யார், எங்கிருந்து, எப்போது பொய்யை அவிழ்த்து விட்டாலும் அதைத் தட்டிக் கேட்கவும் சுட்டிக் காட்டவும் வேண்டிய பொறுப்பு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மட்டுமே இருக்கின்றது. தவ்ஹீத் ஜமாஅத்தின் தலையாய பணிகளில் இதுவும் ஒன்று. எனவே ஹதீஸ்களின் பெயரால் இவர்கள் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்துவதற்காக, இதற்கென ஒருசில பக்கங்களை ஒதுக்கி, இந்த அரும்பணியை ஏகத்துவம் செய்யவிருக்கின்றது.
ஆலிம்கள் எனப்படுவோர் இட்டுக்கட்டிக் கூறுகின்ற பொய்யான ஹதீஸ்கள் இங்கு போட்டு உடைக்கப்பட்டு, மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புராக்குகளிடம் ஒரு நேர்முகத் தேர்வு நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தில புராக் வாகனத்தில் செல்வார்கள் என்ற நிலைப்பாடு இருந்தது. அப்போது ஜிப்ரயீல் அவர்கள் புராக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வந்த நேரத்தில் எல்லா புராக்குகளும் அவர்கள் வந்ததற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு மிடுக்காகவும், துடிப்பாகவும் இருந்த நிலையில் ஒரு புராக் மட்டும் மெலிந்து நலிந்து கடைசியாக ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த புராக்கிடம், ”நான் இங்கு வந்ததற்கான காரணம் தெரியுமா?' என்று ஜிப்ரயீல் கேட்டார்கள். ”ஆம், என்னைப் போன்ற புராக்கில் தான் நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் செய்வார்கள் என்றும், அதற்காகத் தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்றும் எனக்கு நன்றாகவே தெரியும்' என்று அது சொன்னது. ”மகத்தான அந்தப் பாக்கியம் என்னைப் போன்று நலிந்து மெலிந்து போய் இருப்பவர்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறது என்ற கவலையிலும் மனவாட்டத்திலும் இருக்கிறேன்' என்று அந்த புராக் சொன்னதும், ”உனக்கே அந்த வாய்ப்பைத் தருகிறேன்' என்று சொல்லி ஜிப்ரயீல் (அலை) அதை உற்சாகப்படுத்தி நபி (ஸல்) அவர்கள் பயணிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்தார்கள். இப்படி ஒரு ஹதீஸை (?) மவ்லவி டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி என்பவர், தான் ஒரு சொற்பொழிவில் குறிப்பிட்டதாக இஸ்லாமிய இதழ் ஒன்றில் எழுதியுள்ளார். விண்ணுலகப் பயணம் செல்வதற்காக நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது ஒரு புராக் தான். இதை புகாரி 3207, 3887, முஸ்லிம் 234, திர்மிதி 3056 உள்ளிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காண முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் விண்ணுலகப் பயணம் தொடர்பான ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவாகியுள்ளன. ஆனால் டி.ஜே.எம். ஸலாஹுத்தீன் ரியாஜி சொல்வது போன்ற சம்பவத்தை ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் பார்க்க முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் தொடர்பான ஒரு செய்தியைச் சொல்லும் போது அறிவிப்பாளர் தொடருடன் சொல்ல வேண்டும். தற்போது ஹதீஸ்கள் நூல் வடிவத்தில் வந்து விட்டதால் அறிவிப்பாளர் தொடரைக் குறிப்பிடாவிட்டாலும் குறைந்தபட்சம் நூல் பெயரையாவது குறிப்பிட வேண்டும். இப்படி எந்தவோர் ஆதாரமும் இல்லாமல் சொன்னால், இதுவும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் என்று சொன்னால் அது நபி (ஸல்) அவர்கள் மீது திட்டமிட்டுப் பொய் சொல்வதைத் தவிர்த்து வேறென்ன? இப்படிச் சொல்பவர் இறையச்சமுள்ள ஒரு ஆலிமாக இருக்க முடியுமா? இதுபோன்றவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்ற நரக தண்டனைக்குரியவர்கள்; அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்
சப்வான் லங்கா
Post a Comment