நாமும் நமது மரணமும்

மகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 'நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!
 (அல்குர்ஆன் 4: 78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு 'லா இலாஹ இல்லல்லாஹூ'என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)

மரணம்! நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை! இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.

நிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும்? எப்போது நேரும்? எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.


மனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும்! ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்லாஹ் கூறுகிறான். 

ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)

அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள். 

வல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான்,  ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள்,  பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)

மேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் 'இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென்றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.

உண்மையில் 'இஸ்ராயில்' என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ' என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)

ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.

இந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.

உயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்

உம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமின்' என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)

நல்லோர்களின் உயிர்களை கைப்பற்றுதல்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.

நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, 'உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)

மறுப்போரின் உயிர்கள்

படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள். 

திருமறையில் வல்ல அல்லாஹ், 
(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது,  சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்;! என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)

கண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க   துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)

ஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.

நன்றி - ததஜ துபை
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger