அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்....!!

பிறப்பு இறப்பு அடிப்படையில் யாருக்கும் நினைவு நாட்கள் எடுப்பது இஸ்லாத்தில் 
கிடையாது. இஸ்லாம் ஒரு போதும் அதை ஆதரிக்கவும் இல்லை. 

ஆனால் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் இஸ்லாம் நினைவு நாளை எடுக்கின்றது. 
அது தான் புனித குர்ஆன் இறங்கிய நாள். 

அந்நாள் இப்போது நம்மை ஆரத் தழுவி அரவணைத்து நிற்கின்ற ரமளான் மாதத்தில் 
அதிலும் குறிப்பாக பிந்திய 10 நாட்களில் அமைந்திருக்கின்றது. 

அந்த ஒரு நாள் புனித ரமளானில் அமைந்திருப்பதால் அல்லாஹு தஆலா அம்மாதம் 
முழுவதும் தன் அடியார்களை நோன்பிருக்கும் படி கட்டளையிடுகின்றான். 

அதன் கடைசி பத்தில் அமைந்திருக்கும் லைலத்துல் கத்ர் என்ற குர்ஆன் இறங்கிய அந்நாள் இரவில் நின்று வணங்குவோருக்கு ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கியதை விட 
அதிகமான நன்மைகளைப் பரிசாக வழங்குகின்றான். 

குர்ஆன் இறங்கிய நோக்கமே மனிதர்களை சுவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகத் தான். அதனால் தான் குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தில் "சிம்பாலிக்காக' அல்லாஹ் சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை அடைத்து விடுகின்றான். 

இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனுக்கு அளிக்கும் மதிப்பும், மாண்புமாகும். குர்ஆன் இறங்கியதையொட்டி ரமளான் மாதத்தின் இரவுகளில் குர்ஆனின் வசனங்கள் 
அல்லாஹ்வின் வீடுகளிலும் அவனை நம்பிய அடியார்களின் வீடுகளிலும் 
ரீங்காரமிடுகின்றன. 

வேதம் என்றால் மனிதனின் இறுதிச் சடங்கில் ஓதப்படும் மந்திரச் சொற்கள் என்ற 
நிலையை மாற்றி மக்களின் ஐந்து நேரத் தொழுகைகளிலும் அவர்களின் அன்றாட 
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அதிலும் குறிப்பாக ரமளான் மாதத்தில் ஆட்சி 
செய்யும் இயந்திரமாக இக்குர்ஆன் திகழ்கின்றது. 
"தான் ஓர் உயிரோட்டம் மிக்க வேதம்' என்று இதன் மூலம் உலகுக்குப் பறை சாற்றுகின்றது.

வேதங்கள் எத்தனையோ உள்ளன; அவற்றில் இந்தக் குர்ஆனும் ஒன்று என்று தன்னைக் 
கண்டு கொள்ளாமல் செல்வோருக்கு அது விடுக்கும் அறைகூவல் இதோ! 

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:23) 

"இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? 
"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது 
போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 11:13) 

"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:88) 

"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர் வழி காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக! 
(அல்குர்ஆன் 28:49) 

அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். (அல்குர்ஆன் 52:34) 

குர்ஆனிலுள்ள பத்து அத்தியாயங்கள் அல்லது ஓர் அத்தியாயம் அல்லது ஒரேயொரு வசனத்தைக் கூட 14 நூற்றாண்டுகளாக மனித சமுதாயம் கொண்டு வர முடியவில்லை. 

காரணம் இது அல்லாஹ்வின் வேதமாகும். இந்தக் குர்ஆன் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகின்றது. வேதமென்றால் அதற்குப் பல இலக்கணங்கள் இருக்க வேண்டும். 

ஒருபோதும் அதில் முரண்பாடு இருக்கக் கூடாது. பொய் இருக்கக் கூடாது. கற்பனை, கலப்படங்கள் இருக்கக் கூடாது. அது தெரிவித்த முன்னறிவிப்புகள் பலிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அது இறை வேதம் தான் என்பதற்கு உடைக்க முடியாத சான்றுகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். 

திருக்குர்ஆன் அப்படிப் பட்ட சான்றுகளைக் கொண்டிருக்கின்றதா? என்று கேட்டால் 
நிச்சயமாக பல்லாயிரக்கணக்கான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று அடித்துச் சொல்லலாம். 

இதற்கு உதாரணமாக அறிவியல் சான்றுகளைக் குறிப்பிடலாம். அந்த அறிவியல் 
சான்றுகளைப் பார்க்கும் போது எந்தக் கொம்பனாலும் இதை மனிதச் சொல் என்று ஒரு போதும் கூற முடியாது.

இந்த வேதத்தை எதிர்த்து எந்த வித்தகனும் வந்ததில்லை. இனி வரப் போவதுமில்லை. 

அல்குர்ஆனின் இந்த அறைகூவலை எவராலும் எதிர் கொள்ள முடியாது. எனவே இது 
இறை வேதம் தான் என்ற நம்பிக்கை இதன் மூலம் மேலும் பலப்படும். 

இந்த உண்மையான வேதம் கூறும் மறுமை வாழ்க்கைக்காக நாம் என்ன முற்படுத்தியிருக்கின்றோம் என்று சிந்திப்போமாக!

நன்றி - சங்கை அப்துல் அஜீஸ்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger