உத்தரகாண்டில் சிக்கித்தவிக்கும் 399 தமிழர்களை: பத்திரமாக மீட்க அரசு ஏற்பாடு- விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஜெயலலிதா நடவடிக்கை

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழக பயணிகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் அங்கு பெய்த பெருமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இதுகுறித்தும், அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தகவல் மையம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழகத்தை சேர்ந்த யாத்திரிகர்கள் சிக்கித்தவிக்கின்றனர் என்ற செய்தி அறிந்தவுடன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் ஒரு தகவல் மையத்தை திறக்குமாறு நான் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தேன். எனது உத்தரவின் பேரில், நேற்று முதல் இந்தத் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.
399 பயணிகள் தவிப்பு
இந்த சூழ்நிலையில் கூட்டத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த 37 பேர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 பேர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 37 பேர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த 41 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 62 பேர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 64 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 105 பேர் என மொத்தம் தமிழ்நாட்டை சேர்ந்த 399 யாத்திரிகர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவிப்பது தெரியவந்தது.
உயர்மட்டக்குழு
தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் யாத்திரிகர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்பு பிரதிநிதியின் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்லத் தலைமை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த்துறை செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்ட குழு உத்தரகாண்ட் மாநில தலைமையகமான டேராடூனுக்கு உடனடியாக செல்ல நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த உயர்மட்ட குழு, உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித்தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த யாத்திரிகர்களை உடனடியாக அரசு செலவில் ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் அழைத்து வரவும், அங்கிருந்து அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, பின் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
டெல்லியில் உதவி மையம்
இது மட்டுமல்லாமல் யாத்திரிகர்களின் உறவினர்கள் சிக்கித்தவிக்கும் பயணிகள் குறித்த தகவல் அறிந்து கொள்ள டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓர் உதவி மையத்தினை அமைத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த உதவி மையத்தில் 011–24193455, 011–24193456 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று, சென்னையில் உள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையும் யாத்திரிகர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் சிக்கித்தவிக்கும் யாத்திரிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் என்பதையும், இதுகுறித்து யாத்திரிகர்களின் உறவினர்கள் எவ்வித கவலையும் கொள்ள தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger