சவூதி வாழ் இந்தியர்களுக்கு இந்தியத்தூதரின் முக்கிய செய்தி அறிக்கை!


nitaqatரியாத்: சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர் தம் சட்ட மீறல்களைச் சரி செய்து சட்டத்திற்குட்பட்ட வகையில் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ள சவூதி அரசாங்கத்தின் பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ரியாத்திலுள்ள இந்தியத்தூதர் கேட்டுக்கொண்டுள்ளார். தற்காலிக கடவுச்சீட்டுகளை ப் பெறவும், தங்களின் பணி சார்ந்த பிற விவகாரங்களை தீர்த்துக்கொள்ளவும்,  இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தினமும் தூதரகத்தை அணுகி வருகின்றனர், அவர்களுக்கு உதவும் நோக்கில் சவூதி அரேபியாவில் பணிபுரியும் நம்மில் யாரும் தன்னார்வலர்களாக தூதரகப்பணியை எடுத்துச் செய்யலாம் என்றும் இந்தியத்தூதர் ஹமீதுராவ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் விடுத்த செய்தி அறிக்கையின் தமிழாக்கம்:-

இந்தியத் தூதரின் செய்தி அறிக்கை

சவூதியில் வசிக்கும்  அனைத்து இந்தியர்களுக்கும்!

தன்னார்வத் தொண்டர்களுக்கான குறிப்புரைகள்:

"சவூதி அரேபியாவில் சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்பவர்கள் தங்கள் நிலைமையைச் சரி செய்துகொள்ளுவதற்கு ஏதுவாக, சவூதி அரசு அறிவித்துள்ள சலுகைக் காலத்திற்குள் இந்தியப் பணியாளர்களின் குடியுரிமை,(இக்காமா) பணியனுமதி (விசா/வொர்க் பெர்மிட்) நிலைகளை சரிசெய்துகொள்ள உதவும் நற்பணியின் நடுவே நாம் இருந்துவருகிறோம். குடியுரிமை, பணியனுமதி நிலைமைகளை எந்தவிதமான அபராதமும் இல்லாமல் சரி செய்துகொள்ளவும், வேண்டுபவர்கள் நாடு திரும்பவும் இந்தச் சலுகைகளும், பொது மன்னிப்புக் காலமும் நல்ல வாய்ப்புகளாக  உள்ளன.

சவூதி அரசர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் அறிவித்துள்ள இந்தச் சலுகைகளுக்காகவும், மூன்று மாத காலத் தவணைக்காகவும் இந்தியத் தூதரகம் அரசர் அவர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறது.

இது தொடர்பான இலவச நற்சேவைகளுக்காக, தன்னார்வலர்கள் தங்கள் பெயரை ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்திலோ, ஜெத்தாவிலுள்ள துணைத் தூதரகத்திலோ பதிவுசெய்துகொள்ளும்படி பெருமதிப்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  தன்னார்வமான  சமுதாய சேவகர்களின் பெயரை நாங்கள் தொடர்ந்து  பட்டியலிட்டுக்கொண்டு வருவோம். இந்த நற்பணியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி காண்போம். மேலும், சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரிடத்திலும் இந்தச் சலுகைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக செய்தியளிக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் நான் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த நற்பணியில் முன்னேற்றம் கண்டு வருகிறோம். நாம் இணைந்தே இதை வெற்றி பெறச் செய்யலாம்.

பொதுவான அறிவுரைகள்:

தொடக்கமாக, கடந்த மே 11, 2013 அன்று சவூதி ஊழியர் நலத்துறை அமைச்சகம், வெளிநாட்டுத் தூதர்களுக்கு இந்தத் திட்டம் பற்றி காண்பித்த காட்சியுரைகளை (Presentations) தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் அனைவரும் காணும்படி கேட்டுக்கொள்கிறேன். அவற்றை நீங்கள் www.indianembassy.org.sa என்ற தளத்திலோ அல்லது www.cgijeddah.com என்ற தளத்திலோ சென்று காணலாம். நம் இந்தியச் சகோதரர்கள் சிலரின் துயரத்திலிருந்து மீளும் வழிவகைகளை அந்த காட்சியுரைகளில் காண முடியும். குடியுரிமை (இக்காமா) சரிசெய்துகொள்வதாக இருந்தாலும், வேறு புதிய வேலை தேடிக்கொள்வதாக இருந்தாலும், அல்லது நாடு திரும்ப  நினைத்தாலும், அது அதற்குரிய வழிமுறைகளை அந்த காட்சியுரைகளில் காணமுடியும். மேலும் இது பற்றிய விளக்கங்களை ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்திலோ, ஜெத்தாவிலுள்ள துணைத் தூதரகத்திலோ பெற்றுக்கொள்ளலாம். அல்லது, wel.riyadh@mea.gov.in என்கிற மின்னஞ்சலுக்கும் விளக்கம் கேட்டு மடல் அனுப்பலாம். அப்படி அனுப்பும்போது, dcm.riyadh@mea.gov.in அல்லது cons@cgijeddah.com, welfare@cgijeddah.com, conscw@cgijeddah.com ஆகியவற்றுக்கு பிரதி (CC) அனுப்பவேண்டும். மேலும் வழமையாக, இந்தியத் தூதரகத்தின் வலைத்தளத்தையோ, துணைத் தூதரகத்தின் வலைப்பக்கத்தையோ, ஃபேஸ்புக் பக்கங்களையோ, மேலதிகத் தகவல்களுக்காக, அவ்வப்போது பார்த்துவரவேண்டும். தூதரகமோ, துணைத்தூதரகமோ தனக்கு வரும் எல்லா மடல்களுக்கும் பதிலளிக்க இயலாதுதான். ஆனால், எல்லா மடல்கள் மீதும் , தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். வரும் வாரங்களில் எங்கள் தூதரக அலுவலர்கள் நீங்கள் இருக்கும் நகரங்களுக்கே வந்து முகாமிட்டும் உங்களைச் சந்திக்க முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனால், தூதரகம், துணைத்தூதரகம் ஆகியன தானிருக்கும் நாட்டின் சட்ட த்திட்டங்களை மதித்து, அதற்கேற்பவே நடந்துகொள்ளும். இந்தியத் தூதரகமோ, அதன் துணைத் தூதரகமோ சவூதி அரசின் சட்டத்திட்டங்களுக்கு மாறாக ஒருபோதும் நடந்துகொள்ளாது.

இன்னொரு முக்கியமான செய்தி, இந்தியத் தூதரகமோ, துணைத் தூதரகமோ  செய்யும் இந்த நற்பணிகள் யாவும் முழுக்க முழுக்க இலவசமே ஆகும். எந்தவொரு சேவைக்கும் எந்தக் கட்டணமும் கிடையாது. கட்டணம் வசூலிக்க யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. இந்த அறிவிப்பையும் மீறி, எந்த சமூக சேவகராவது, தன்னார்வலராவது கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், அதை யாரும் உடனடியாக தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும்படி கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட wel.riyadh@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு புகார் அனுப்பி dcm.riyadh@mea.gov.in அல்லது cons@cgijeddah.com என்ற முகவரிகளுக்கும் பிரதி (CC) அனுப்பவேண்டும். அவ்வாறு கட்டணம் வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகமும், ஜெத்தாவிலுள்ள துணைத்தூதரகமும் தங்களது உதவிமையங்களில் 24 மணி நேரமும் பணி செய்ய ஆட்களையும் தொலைபேசி எண்களையும் அதிகரித்துள்ளது. அந்த எண்கள் 011 4884697, 011 4881982, 0501699879, 0501700106, 0501699895, 0501699894. துணைத் தூதரகம், ஜெத்தா வுக்குரிய எண்கள்  02-2611483, 02-2614093, 0596810574 ஆகும். 
சவூதி அதிகாரிகளும், இந்த விதயத்தில் தொடர்ந்து தங்கள் சேவைகளை மேம்படுத்தித் தகவல் அளித்துவருகிறார்கள். இணைய தளம் வழியாகப் பெறப்படும் சேவைகளும் இதில் அடங்கும். ஊழியர்நலத்துறை அமைச்சகம் (லேபர் மினிஸ்ட்ரி) வழங்கும் சேவைகளான தொழில் மாற்றம் செய்வது, குடியுரிமை நிலையை ஆராய்தல், போன்ற  இன்னும் வரவிருக்கிற பல பணிகள் குறித்தும் தொடர்ந்து தகவல் பெற்று வருகிறோம். மேலும் சவூதி அரசின் ஊழியர்நல (லேபர்) அலுவலகங்கள், குடியுரிமைத்துறை (ஜவாஸாத்) ஆகியவை இதன் பொருட்டு மேலதிகப் பணிநேரங்கள் (ஓவர்டைம்) வேலைசெய்ய இருப்பதாகவும் தெரியவருகிறோம். இந்த சேவைகளை, நம் இந்தியர்கள் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அலுவலகங்களின் தொடர்பு எண்கள் எங்கள் தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.  எங்கள் தன்னார்வலர்கள் இந்த அலுவலகங்களில் அவ்வப்போது வருகைப் புரிந்து, நிறுவன மாற்றம், தொழில் மாற்றம், அல்லது நாடு திரும்ப நினைக்கும் இந்தியர்களுக்கு வேண்டிய வழிகாட்டுதல்களைச் செய்து வருகிறார்கள்.

எங்கள் முக்கிய நோக்கம், இந்தச் சலுகைகள் பற்றியும், பொது மன்னிப்புக் காலமான ஜூலை 3 வரை இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது பற்றியும் சவூதியில் வசிக்கிற எல்லா இந்தியர்களையும் அறியச் செய்வது தான். சவூதியில் உள்ள ஒரு இந்தியர் கூட இந்தச் செய்தியை அறியாதவராக இருக்கக் கூடாது. சிறு வணிக நிறுவனங்கள், ஊழியர் முகாம்கள், பேரங்காடிகள், பெட்டிக்கடைகள், உணவகங்கள், முடிதிருத்தகங்கள், சந்தைகள், பண்ணைகள்  உட்பட எல்லா இடங்களிலும் உள்ள இந்தியர்களுக்கு சவூதி அரசின் இந்தச் சலுகைச் செய்தியைக் கொண்டுச் செல்ல எங்களுக்கு உதவுங்கள். சவூதி சிறைகளில் வாடும் இந்தியர்கள், நாடு திருப்பும் மையங்களில் உள்ள இந்தியர்கள் ஆகியோருக்கும் நாம் உதவ வேண்டும். மொழிப் பிரச்னை இருக்குமிடங்களிலும், அங்கேயும் நமது தன்னார்வலர்கள் உதவ உள்ளார்கள்.  இந்த எல்லா உதவிகளும் சவூதி அரசின்  சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் தான் அமையும். எந்தச் சூழலிலும் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களை நாம் மீறக்கூடாது. சவூதி அரசின் சட்டத்திட்டங்களை மீறித் துயருறும் நம் சகோதரர்கள் தற்போது தங்கள் நிலைமையை சட்ட ரீதியாகவும், எவ்வித பணச்செலவுமின்றியும் சரிசெய்ய அனுமதித்துள்ள சவூதி அதிகாரிகளுக்கு நாம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

இந்த நாட்டில் (சவூதியில்) இந்தியர்கள் எல்லா வகைப் பணிகளிலும் இருந்துவருகிறார்கள். வீட்டு வேலைக்காரர்கள், பெரும் வணிகர்கள், உயர்நிலை விஞ்ஞானிகள் என்று பல இந்தியர்கள் இங்கே இருக்கிறார்கள்.  அவர்களில் பலருக்கும் தங்கள் பணியனுமதி நிலைப்பாடு பற்றி தெரியாது. பல வருடங்களாக இருந்தாலும், குடியுரிமை (இக்காமா) நிலைப்பாடு என்ன, பணியனுமதி (வொர்க் பெர்மிட்) நிலை என்ன என்பது பற்றி அவர்கள் அறியாமல் இருக்கக் கூடும். அத்தகையவர்களிடமும் அது பற்றி ஆய்ந்து சரி செய்து கொள்ளும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களில் சிலருக்கு, விவரங்களை எடுத்துச் சொல்லிப் புரியவைக்க வேண்டியிருக்கலாம். இந்தச் சலுகைக் காலத்திற்குள் தங்கள் நிலைமையைச் சரிசெய்யும் படி அவர்களிடம் நாம் சொல்ல வேண்டும். அதற்கான உதவிகளைப் புரிய வேண்டும். நம்மில் நிறைய பேர், தேவைப்படும் மற்ற சகோதரர்களுக்கு உதவும் நிலையில் தான் இருக்கிறோம். உதவி தேவைப்படும் சக இந்தியச் சகோதரர்களுக்கு உதவ முன்வரும்படியும், இந்தியத் தூதரகமும், துணைத் தூதரகமும்  அவர்களுக்கு உதவுவதற்கு உதவும்படியும் தன்னார்வலர்களையும், சமூக சேவகர்களையும் நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

சவூதி அரேபியாவிலுள்ள இந்தியச் சமூகத்திற்கு இங்கே நற்பெயர் உள்ளது. இந்தியர்கள் பொதுவாக, அமைதியை விரும்புபவர்கள், கடின உழைப்பாளிகள், சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்று சவூதி அரேபியா நல்லெண்ணம் கொண்டு இந்தியர்களுக்கே முன்னுரிமை அளித்துவந்துள்ளது. பல்லாண்டுகளாக நாம் கட்டிக் காத்துவரும் இந்த நன்மதிப்பைக் காப்பாற்றும்வகையில் நமது செயல்கள் அமைய வேண்டும். இதை ஒவ்வொரு இந்தியரும் உறுதிபடுத்த வேண்டும்.

இந்தியா – சவூதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவு வலிமையானது. அரசின் மேல்நிலையாளர்கள் பரஸ்பர பரிமாற்றத்தின் வழி இந்த உறவு மேலும் வலுவடைந்துவந்துள்ளது. இரு புனிதப் பள்ளிகளின் சேவகர் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகைப் புரிந்ததும், நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு மன்மோகன்சிங் 2010 பிப்ரவரியில் சவூதி அரேபியாவுக்கு வருகையளித்த்தும் இந்த இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தியது. இந்த உறவுகள் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, மற்றும் தற்காப்பு நிலைகளில் சிறந்து விளங்குகிறது. இந்த உறவின் நன்மதிப்பை நாம் பெரிதும் போற்ற வேண்டியவர்களாக உள்ளோம். இந்த நாட்டின் தலைவர்களுடன் உயர்வான ந்ந்நிலையில் நாம் தொடர்புகளைப் பேணி வருகிறோம். வரும் வாரங்களிலும், மாதங்களிலும்  மேலும் பல உயர்நிலைச் சந்திப்புகள் நடக்க உள்ளன.  இந்த நல்லுறவை பேணும் வகையிலேயே நமது செயல்கள் இருக்க வேண்டும். அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது.

இந்தியர்களுக்குப் பிரதானமான விவகாரங்களில் இந்தியத் தூதரகம், சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. சமூக நலனை முன்னிடும் எல்லா விவகாரங்களும், சவூதி அதிகாரிகளுடனான எங்கள் வழமையான சந்திப்புகளில் பேசப்பட்டு வருகின்றன.  வழமையான இந்தச் சந்திப்புகளில் சவூதி வெளியுறவுத்துறை, ஊழியர்நலத்துறை, உள்துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். நம்முடைய எந்தப் பிரச்னைக்கும், தூதரகத்தின் வாயிலாக, தொடர்ந்து பின்தொடர்வுகள்  செய்து வருகிறோம். இந்தச் சலுகைகளை முன்னிட்டும், தூதரகமும், துணைத் தூதரகமும் தங்களது பணி நேரத்தை இரவு 08:30 மணி வரை, வியாழக்கிழமை உட்பட நீட்டித்துள்ளன.  மேலும் தேவைக்கேற்ப சட்ட ஆலோசனைகளையும், உரிய சட்டக் குழுமங்களிலிருந்து பெற்று வருகிறோம்.  குறிப்பாக, சவூதி வாழ்  இந்தியர்களின் விவகாரங்களுக்காக, ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ளும் வகையில் நான்கு சட்ட நிறுவனங்களை சட்ட ஆலோசனைகள் பெறவும், சட்ட உதவிகள் பெறவும் தூதரகம் பட்டியல் வைத்துள்ளது.

தூதரகமும்,துணைத் தூதரகமும் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு விவரங்களை பல்வேறு இந்திய, சவூதி நிறுவனங்களிலிருந்து பெற்று வருகின்றன. அந்த விவரங்களை உடனடியாக தூதரகம் மற்றும் துணைத்தூதரக வலைத்தளங்களில் ஏற்றி வைக்கிறோம். தன்னார்வலர்கள், பணி தேவையிலிருக்கும் சக இந்தியர்களுக்கு இந்த விவரங்களைத் தெரிவித்து உதவ வேண்டும். அதன்பொருட்டு தூதரகம் மற்றும் துணைத்தூதரகங்களில் வலைத்தளங்களை அன்றாடம் பார்வையிட்டு வரவேண்டும்.  பெரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களிலிருந்தும் வேலைவாய்ப்புகள் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. சமூக சேவகர்களும் தன்னார்வலர்களும் தேவைப்படும் சக இந்தியச் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் வேலை தரும் நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு, அதை வலுப்படுத்த வேண்டும், ஆயினும் வேலை வாய்ப்பைப் பெற வழிகாட்டும் அதே சமயம், வேலை உத்தரவாதங்களை தூதரகமோ இந்தியத் தூதரகமோ வழங்கிட இயலாது. அது அந்தந்த நிறுவனங்களின் தனிப்பட்ட உரிமையின் பாற்பட்டதாகும்.

சலுகைக் காலம் இன்னும் குறைந்த காலமே உள்ளது. இந்தச் சலுகைக் காலத்திற்கும் பிறகும் தங்களின் பிழையான குடியுரிமையைத் திருத்திக்கொள்ளாமலோ, அல்லது இக்காலத்திற்குள் நாடு திரும்பிடாமலோ இருப்பவர்கள் கைதாகவும் சிறைப்படவும், பெரும் தொகை அபராதம் விதிக்கப்படவும் செய்வார்கள். சலுகைக்காலம் ஜூலை 3 அன்று முடிவடைகிறது. இக்காலத்திற்குப் பிறகு கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் பிறகும் சட்ட மீறல் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் சவூதி அதிகாரிகள் எங்களிடம் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.

சவூதி அரசின் இந்தச் சலுகை இந்த மே மாதம் 10 ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 6, 2013க்கு முந்தைய எல்லா சட்ட மீறல்களையும் (இகாமா, வொர்க் பெர்மிட் உட்பட) இக்காலத்தில் பொதுமன்னிப்புடன் சரி செய்துகொண்டு சட்டப்படி ஆகிவிடலாம். இந்தப் பெரும் வாய்ப்பிற்குப் பின்னும் இந்தியர்கள் யாரும் எவ்வித சட்ட மீறலும் செய்ய மாட்டார்கள் என்பது உறுதிப்படுத்தப் படவேண்டும்.  சவூதி அரேபியாவிற்கு பணிநிமித்தம் வர விரும்பும் இந்தியர்கள் அந்த நுழைவனுமதி (விசா) சட்ட முறைமைகளின் படி உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஃப்ரீ விசா என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதைப் புரிய வேண்டும். மேலும் பணி செய்ய வரும் நிறுவனம் சட்ட முறைமைகளுக்குட்பட்டே இயங்குகிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.  தன்னார்வலர்களும், சமூக சேவகர்களும் இந்தப் புதிய விதிகள்,சட்டங்கள் குறித்த பொது விழிப்புணர்வை இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி,  ஜெய்ஹிந்த்"
இவ்வாறு இந்தியத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

தமிழாக்கம்: இப்னு ஹம்துன்
நன்றி- இந்நேரம் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger