“அருகிலிருக்கும் கருப்பு ஆட்டை அங்காடியில் தேடும் கதை”
கடந்த சில நாட்களாக இலங்கை மட்டத்தில் அனைத்து இயக்கத்தையும் ஒன்றிணைத்து முஸ்லிம்களின் உரிமைகளுக்காய் போராட வேண்டும், முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துப்பாட்டின் கீழ் தேசிய ஷுரா கவுன்சில் என்ற பெயரில் ஒரு குடையின் கீழ் அனைத்து இயக்கப் பிரமுகர்களும் என்ற மகுடம் சூட்டி ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான முஸ்தீபுகள் ஒரு சில தரப்பால் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கும் அனைத்துத் தரப்பு இயக்கங்களையும், இயக்க அங்கத்தவர்களையும் ஒன்றிணைத்ததாக உருவாக்கப்படவிருக்கும் இந்த தேசிய ஷுரா சபை என்பது உண்மையில் இலங்கைக்கு தேவையானதா? என்பது ஒரு புறமிருக்க தேசிய ஷுரா சபை உருவாக்கப்படும் நோக்கம் உண்மையில் நிறைவேற்றப்படுமா? என்றொரு கேள்வி பதிலில்லாமல் காலத்திற்கும் கேள்விக் குறியுடன் இருக்கப் போகின்றது என்பதில் சந்தேகமில்லை.
இது தொடர்பாக நாம் சற்று விரிவாகவே விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆம் தேசிய ஷுரா சபை என்றொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதற்கான பின்னனியாக இருப்பது இலங்கையில் ஏற்பட்டுள்ள இனவாத பிரச்சினையாகும்.
இனவாதப் பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கப்படும் இச்சபை மூலம் இனிவரும் காலங்களில் முஸ்லிம் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவிருப்பதாக அதன் உருவாக்குணர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பலவிதமான இனவாத செயல்பாடுகள் பௌத்த தீவிரவாத இயக்கங்களினால் கட்டவிழ்த்து விடப்பட்டமையை இலங்கை முஸ்லிம்கள் யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தாக்கப்பட்டமை, ஹிஜாபுக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டமை, தாடி, கத்னா, ஷரீஆ சட்டம், காதி நீதி மன்றங்கள் என்று இஸ்லாமியர்களின் மத நடவடிக்கைகள் தொடர்பான பலவிதமான செயல்பாடுகளுக்கும் பௌத்த இனவாதிகள் பிரச்சினைகளை உண்டாக்கினார்கள்.
ஹழால் பிரச்சினை தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா பல சிக்கள்களை சந்தித்து, இறுதியில் பௌத்த அரசாங்கத்திற்காக அதனை தாரை வார்த்தது.
நிலைமை இப்படியிருக்க……
இப்போது தேசிய ஷுரா சபையின் தேவை உணரப்படுகின்றதாம்.
ஹழால் பிரச்சினைக்கு முன்பு வரை அனைவரும் “அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை” யின் கீழ் ஒன்று படுவோம் என்று பேசிய பலர் இப்போது தேசிய ஷுரா சபை தொடர்பில் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். ஒரு வேலை ஜ. உலமா அன்று இனித்து இப்போது கசப்பாகக் கூட இருக்கலாம்.
ஜம்மிய்யதுல் உலமா என்ற பெயரில் இவ்வளவு காலம் இவர்கள் செய்யாததை தேசிய ஷுரா என்ற பெயரில் இனிமேல் செய்வார்கள் என்று எந்த புத்திசாலியும் நம்பமாட்டான்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளில் பொது பல சேனா என்ற இனவாத இயக்கம் ஈடுபட்ட வேலைகளில் தனி இயக்கமாக இருந்து அதனை தடை செய்யும்படி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் இன்று தேசிய ஷுரா பற்றி பேசும் யாராவது பொது பல சேனாவை தடை செய்யும் படி கோரிக்கை வைக்க வாய் திறந்தார்களா?
மஷுரா செய்து முடிவெடுக்க வேண்டும் என்ற கருத்துப்பட திருமறைக் குர்ஆனில் உள்ள வசனங்களை எடுத்துக் காட்டிவிட்டு இதனடிப்படையில் தேசிய ஷுராவில் அனைவரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தால் மாத்திரம் போதாது. தேசிய ஷுராவை வழி நடாத்துவதற்கான அடிப்படை கொள்கையாக திருமறைக் குர்ஆனும், நபியவர்களின் வழிகாட்டலும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் தேசிய ஷுரா என்ற பெயரில் அமைக்கப்படவிருக்கும் இந்த ஷுரா சபைக்கும் குர்ஆன், சுன்னாவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நாம் தெளிவாக அறியலாம். காரணம் குர்ஆன் சுன்னாவை குழி தோண்டிப் புதைக்கும் பல இயக்கங்கள் இதில் இணைவதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.
அதே போல் தேசிய ஷுரா கவுன்சில் உருவாக்கப்படுவதன் நோக்கங்களில் பிரதானமானது முஸ்லிம்களின் உரிமைக்காக ஒன்றிணைந்து போராடுவது என்று சொல்லப்படுகின்றது. இது சாத்தியமானதா? என்றால் இல்லவே இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கும்.
பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் போது அவர்களுக்கு எதிராக வாய் திறந்து பேசவே பயப்பட்டவர்கள் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பினால் கடைசியில் ச் சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைக்குத் தான் நாம் தள்ளப்படுவோம்.
தேசிய ஷுரா சபையில்… “இலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பலவும் ஒன்றிணைகின்றன” என்று அதன் அமைப்பாளர்களில் ஒருவர் நம்மிடம் கூறிய போது “ஷீயாக்கள் இதில் அடக்கமா?” என்று கேட்டோம். அப்போது “இல்லை” என்றவர்களிடம் “கப்ரு வணங்கும் தரீக்காக்கள் இதில் இணைகின்றனவா?” என்று கேட்ட போது “ஆம்” என்றார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினையில் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து குளிர் காய்பவர்களில் முதல் இடம் வகிப்பது ஷீயா சிந்தனை கொண்ட கப்ரு வணங்கும் தரீக்கா வாதிகள் என்பது ஷுரா கவுன்சில் அமைப்பாளர்களுக்கு தெரியாத விஷயமல்ல.
அப்படியிருக்க இந்த கப்ரு வணங்கிகளையும் கொண்டமைக்கப்படும் ஷுரா சபையினால் இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன நலவு நடக்கப் போகின்றது?
தென்னந் தோப்பு மா மரம் தேங்காய் காய்க்காது என்பது இவர்களுக்கு தெரியவில்லையா என்ன?????
மண்ணுக்குக் கீழ் உள்ளவற்றையும், வானத்திற்கு மேல் உள்ளவற்றையும் பற்றி மாத்திரம் பேசும் தப்லீக் ஜமாத்.
அடுத்த தேர்தலில் ஆட்சி பிடிக்க நினைக்கும் ஜமாத்தே இஸ்லாமி.
அல்லாஹ்வை வணங்குவதை தடுத்து மரணித்தவர்களை வணங்கும் ஷீயாக்களான தரீக்கா வாதிகள். என குர்ஆன், சுன்னாவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாதவர்களுடன் நாமும் ஷுரா கவுன்சில் என்ற பெயரில் சேர்ந்தால் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள்.
கருப்பு ஆட்டை நமக்குள்ளே வைத்துக் கொண்டு வெளியில் தேடுவதா?
கூட இருப்பவனே காட்டிக் கொடுப்பான் அவனையும் வைத்துக் கொண்டு நாம் மஷுரா செய்வதா?
இவற்றை நினைத்தால் சிரிப்பதா? அழுவதா? என்றே புரியவில்லை.
தேவைபடும் போது புரிதல்கள் தொடரும்….
rasminmisc
Post a Comment