இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 2


கட்டாயக் கல்யாணம்

முஸ்லிம் பெண் ஒரு முஸ்லிமான ஆணை மணமுடிக்க விரும்பினால் அவளது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது பெற்றோரின் கடமையாகும். பணம், பதவி, குலம், அந்தஸ்து போன்ற எந்தக் காரணத்தையும் கூறி பெண்களின் விருப்பத்தை நிராகரிப்பது மறுமையில் கடுமையான குற்றமாகும். 

பெண்களை விவாக ரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. 

இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வேஅறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232) 

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தையை இறைவன் பயன்படுத்தியுள்ளான். பெண்களின் இந்த உரிமையைப் பறிப்பவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வால் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காகவே இவ்வாறு கூறுகிறான்.

பெண்கள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதைக் கூட பாவச் செயலாகக் கருதும் நிலை சமுதாயத்தில் நிலவுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண்கள் இது போன்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து அல்லாஹ்வின் தூதரே என்னை மணமுடித்துக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மணமுடிக்க விரும்பாததால் மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். நூல்: புகாரி 2311, 5029, 5120.


வெட்கமில்லாமல் இப்படிக் கேட்கலாமா? என்று அவரை நபிகள் நாயகம் (ஸல்) கண்டிக்கவில்லை. விபச்சாரம் செய்வதற்குத் தான் வெட்கப்பட வேண்டுமே தவிர திருமணம் செய்யுமாறு கேட்க எந்த வெட்கமும் தேவையில்லை.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். நூல்: நஸயீ 3288

பெண்கள் தமது வாழ்க்கைத் துணைவரைத் தேர்வு செய்யும் உரிமை பெற்றுள்ளார்கள் என்பதற்கு இவை சான்றுகள்.

ஆனாலும் அவர்கள் பொறுப்பாளர்கள் வழியாகத் தான் திருமணத்தை நடத்திட வேண்டும். பொறுப்பாளர்கள் மறுக்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

மஹரும் ஜீவனாம்சமும்

திருமண முறிவு ஏற்படும் போது பெண்களுக்கு ஜீவனாம்சம் என்ற தொகை வழங்கப்பட்டு வருவது பல சமுதாயங்களில் பரவலாக உள்ளது. இஸ்லாம் இத்தகைய ஜீவனாம்சத்தை வழங்கச் சொல்லவில்லை. மாறாக திருமணத்திற்கு முன்பே பெண்களுக்குக் கணிசமான ஒரு தொகையை வழங்கி விடுமாறு இஸ்லாம் கூறுகிறது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

இன்றைய நடைமுறையில் உள்ள ஜீவனாம்சத்தை விட இஸ்லாம் வழங்குகின்ற முன் ஜீவனாம்சம் என்ற மஹர் பாதுகாப்பானது; உத்திரவாதமானது.

பெண்களுக்கு அவர்களின் மஹர் தொகையை மனமுவந்து வழங்கி விடுங்கள் என்பது குர்ஆனின் கட்டளை. (அல்குர்ஆன் 4:4)

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்குக் கொடுத்தாலும் அதனைத் திரும்பப் பெறலாகாது எனவும் குர்ஆன் கட்டளையிடுகின்றது. (அல்குர்ஆன் 4:20)

மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத் தரலாம்; அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம். (பார்க்க.. அல்குர்ஆன் 2:237)

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சனை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள் கேட்டுப் பெறக் கூடிய அளவுக்கு மானமிழந்து விட்டனர். வரதட்சணை வாங்காதீர்கள் என்பதை விட நீங்கள் கொடுங்கள் என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

வரதட்சணை ஓர் வன் கொடுமை

ஆண்கள் தான் பெண்களுக்கு மஹர் கொடுக்க வேண்டும்; பெண்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது என்று இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுகிறது.

இது தான் அறிவுப்பூர்வமானதும், நேர்மையானதுமான தீர்ப்பாகும்.
  • இல்லற வாழ்வில் ஆணும், பெண்ணும் இன்பம் அனுபவிக்கிறார்கள். இருவருமே ஒருவரிடமிருந்து மற்றவர் இன்பத்தை அனுபவிப்பதால் யாரும் யாருக்கும் எதனையும் கொடுக்கத் தேவையில்லை தான்.
  • ஆனாலும் இந்த இன்பத்தை அடைவதற்காக பெண்கள் தாம் அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.
  • ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே இருக்கிறான். தனது தாய், தந்தையர் மற்றும் உறவினருடன் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும், சொந்தங்களையும் துறந்து விட்டு கணவன் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். இந்தத் தியாகத்திற்காக பெண்களுக்குத் தான் ஆண்கள் வழங்க வேண்டும்.
  • திருமணத்திற்குப் பின் மனைவிக்காக கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகபட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காக சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்து பணிவிடை செய்தல் என்று ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் காரணத்துக்காகவும் ஆண்கள் தாம் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண் தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்கு கோடி கொடுத்தாலும் போதாது.
  • பிரசவித்த பின் குழந்தைக்காக தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும், சீராட்டுவதும், கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீது தான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பது தான் நேர்மையானது.
  • அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து விட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.

பெண்களுக்கு ஆண்கள் தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
நன்றி - துபாய் tntj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger