அற்புதம் நிகழ்த்த முடியாத இயேசு
இயேசு சில அற்புதங்களை நிகழ்த்தியதாக பைபிள் கூறுவது போல் அவரால் அற்புதம் நிகழ்த்த முடியவில்லை எனவும் சொல்லிக் காட்டுகிறது.காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில் அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு அதனிடத்திற்போய் அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல் "இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது'' என்றார். உடனே அத்தி மரம் பட்டுப்போயிற்று. - (மத்தேயு 21:18,19)
அற்புதம் நிகழ்த்தியதால் அவர் கடவுளாகி விடவில்லை என்பதற்கும் தான் விரும்பக் கூடிய அற்புதத்தைச் சுயமாக நிகழ்த்தும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதற்கும் இதை விடச் சான்று வேறு என்ன வேண்டும்? அற்புதம் நிகழ்த்தியதால் இயேசு கடவுளாகி விட்டார் என்றால் அவருக்குப் பசி எடுத்தது எப்படி? கடவுளுக்குப் பசிக்குமா? அத்தி மரத்தில் கனி இருக்குமா? இருக்காதா என்பது கடவுளுக்கு முன் கூட்டியே தெரியாமல் போகுமா? ஏமாறுவதும், அறியாமையும் கடவுளுக்குரிய பண்புகளாக இருக்க முடியுமா?
அத்தி மரத்தைக் கனியுடையதாக்கியதும், கனியில்லாமல் செய்ததும் அந்த மரத்தின் செயலன்று. கடவுள் தாம் அவ்வாறு ஏற்படுத்துகிறார். இயேசுவே கடவுள் என்றால் மரத்தில் கனியில்லாமலாக்கியதும் அவர் தாமே? பிறகு ஏன் அத்தி மரத்தைச் சபிக்க வேண்டும்? அவ்வாறு சபிப்பது தம்மையே சபிப்பதாக ஆகாதா?
ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும் போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுடைய பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை இது விளக்கவில்லையா?
அது தான் போகட்டும் விட்டு விடுவோம்! தெரியாமல் கனியில்லாத மரத்திடம் வந்து விட்டார். வந்தவர் கடவுள் அல்லவா? அவர் வந்த உடனே அம்மரத்தில் கனி உண்டாகியிருக்க வேண்டாமா? அப்படியும் நடக்கவில்லையே? ஊராரின் பசியைப் போக்கியவருக்குத் தனது பசியை நீக்கும் வகையில் அற்புதம் நிகழ்த்த முடியாமல் போனது ஏன் என்பதையாவது கிறித்தவர்களே நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
"காகங்கள் அவனுக்கு (எலியாவுக்கு) விடியற்காலத்தில் அப்பமும், இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்." - (முதலாம் ராஜாக்கள் 17:6)
கனி தருவது மரங்களின் இயல்பு. அந்த இயல்பே இயேசு விஷயத்தில் எதிராக மாறி அவரைச் சிரமப்படுத்தியிருக்கிறது. பிறரது உணவைத் தட்டிப் பறிப்பது காகங்களின் இயல்பு. அந்த இயல்புக்கு மாற்றமாகக் காகங்கள் எலியாவுக்குத் தினமும் உணவு கொண்டு வந்து உபசரித்திருக்கின்றன.
இவ்விரண்டில் எதை அற்புதம் என்று கிறித்தவர்கள் சொல்லப் போகிறார்கள்? இவ்விருவரில் யாரைக் கடவுள் என்று நம்புவதற்கு அதிகத் தகுதி இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள்!
தொழுநோயைக் குணப்படுத்திய அற்புதம்
இயேசு அற்புதமான முறையில் தொழுநோயளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார் என்றால் அதே அற்புதத்தை மற்றவர்களும் கூடச் செய்துள்ளனர்.
அப்பொழுது எலிஷா அவனிடத்தில் ஆளனுப்பி "நீ போய் யோர்தானில் ஏழு தரம் ஸ்நானம் பண்ணு! அப்பொழுது உன் மாம்சம் மாறி நீ சுத்தமாவாய்'' என்று சொல்லச் சொன்னான். - (இரண்டாம் ராஜாக்கள் 5:10)
"அப்பொழுது அவன் இறங்கி தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழு தரம் முழுகின போது அவன் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப் போல மாறி அவன் சுத்தமானான்." - (இரண்டாம் ராஜாக்கள் 5:14)
குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்த அற்புதம்
இயேசு சில குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்திருக்கிறார் என்றால் அதையும் கூட மற்றவர்களும் செய்துள்ளனர்.
"அப்பொழுது எலிஷா விண்ணப்பம் பண்ணி கர்த்தாவே இவன் பார்க்கும் படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான். உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்..." - (இரண்டாம் ராஜாக்கள் 6:17)
"அவர்கள் சமாரியாவில் வந்த போது எலிஷா "கர்த்தாவே! இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும்'' என்றான். பார்க்கும் படிக்கு கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும் போது இதோ அவர்கள் சாமாரியாவின் நடுவே இருந்தார்கள்." - (இரண்டாம் ராஜாக்கள் 6:20)
தண்ணீரில் நடந்து காட்டிய அற்புதம்
"இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலது புறத்திலும், அவர்கள் இடது புறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக இருந்தது." - (யாத்திராகமம் 14:22)
தண்ணீரில் இரும்பு மிதந்த அற்புதம்
எலிஷா இரும்புக் கோடாலியைத் தண்ணீரில் மிதக்கச் செய்திருக்கிறார். பார்க்க : இரண்டாம் ராஜாக்கள் 6:6.
இயேசு எந்த அற்புதத்தை நிகழ்த்தியதாகக் கூறி அவரைக் கடவுள் என்று வாதம் செய்தாலும் அந்த அற்புதங்களை அவருக்கு முன்பே மற்றும் பலர் செய்திருப்பதாகப் பைபிளில் காண முடிகின்றது. இயேசுவை விடச் சிறப்பாகச் செய்திருப்பதையும் காண முடிகின்றது. அவர்களையெல்லாம் கடவுள் என்று கிறித்தவர்கள் நம்பினால் இயேசுவைக் கடவுள் என்று நம்புவதில் ஓரளவாவது நியாயமிருக்கும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
நன்றி - jesusinvites
Post a Comment