* முதுகு வலியைத் தடுப்பது எப்படி?


நேற்று முழுவதும் ஒரே முதுகு வலி, சரியா தூங்க கூட முடியல என நம்மில் பலர் புலம்புவதை கேட்டிருப்போம். இந்த மாதிரியான முதுகு அல்லது பின்புற வலியுடன் வேலை செய்வதும் ரொம்ப கஷ்டமான செயல். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் கட்டுமானம், தொழிற்சாலை, ஓட்டுனர் மற்றும் செவிலியர் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு, இது போன்ற முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான். ஆனால், இது போன்ற கடுமையான உடல் உழைப்பு இல்லாமல், அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும், முதுகு வலிப் பிரச்சினை பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது. 


முதுகு வலி என்று நாம் பொதுவாக சொன்னாலும், தோள்பட்டை, முதுகு, முதுகின் கீழ்ப்பகுதி, பின்புறம் ஏன் கால்கள் வரை கூட வலி இருக்கலாம். எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டு இணைப்புகள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொருத்தே ஒருவருக்கு முதுகு வலி வரும் வாய்ப்புக்கள் இருக்கும். இது போன்ற முதுகு வலி வருவதற்கான காரணங்கள் எவை? அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போமே..!

முதுகு வலி வருவதற்கான காரணங்கள்: 

1. ஒரே மாதிரியான வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்வது, தசைகளுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்தல் மற்றும் வசதி இல்லாமல் மாறுபட்ட வகையில் உடம்பை வருத்தி அமர்தல், உறங்குதல் போன்றவையும் முதுகு வலியை உண்டாக்கும். 

2. அதிக அளவு எடை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர், தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வர். இதனாலும் முது வலி ஏற்படலாம். 

3. பலவந்தமாக, வேகமாக தள்ளுவது, இழுப்பது, குனிவது, உடம்பைத் வளைப்பது போன்ற செயல்களும் முதுகுப் பகுதியில் அழுத்தம் உண்டாக்கும் செயல்களாகும். 

4. முதுகு மற்றும் பின்புற எலும்புகளுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் பணிகளைச் செய்வது எலும்புகளுக்கும், தசை நார்களுக்கும் காயம் ஏற்படுத்தலாம் அல்லது தசைச் சோர்வை ஏற்படுத்தலாம். இதனால் முதுகு வலி ஏற்படும். 

முதுகு வலியைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன? 

1. உடலுக்கு வேலை கொடுப்பது ரொம்ப அவசியம். அவ்வப்போது நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை முதுகு வலி வராமல் தடுக்கும். அவரவர் உடம்பிற்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்தல் நலம். 

2. சாப்ட்வேர் மற்றும் பிற அலுவலகங்களில் பெரும்பாலும் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்படி வேலையில் இருப்பவர்கள் ஒழுங்காக, நேரான முறையில், வசதியாக அமர்தல் அவசியம். வெகுநேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுப்பது நல்லது. அதே போல, வேறு சில பணிகளில் வெகுநேரம் நிற்க வேண்டி இருக்கும். இவர்கள், அவ்வப்போது கால்களை ஸ்டூல் அல்லது கல் போன்ற பொருட்களின் மீது வைத்துக் கொள்வது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நல்லது. 

3. வலுவான பொருட்களைத் தூக்கும் போது, ஒழுங்கான முறையில், உடல் ஒத்துழைக்கும் வகையில் தூக்க வேண்டும். உடம்பின் இயற்கையான வளைவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அதற்கு ஏற்றார் போல், நம் பணிகளைச் செய்வது சிறப்பு. 

4.அவசியமில்லாமல், தவறான முறையில் உடம்பை வளைப்பது, எசக்குபிசக்காக குனிவது, திரும்புவது போன்ற செயல்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. முதுகு அல்லது பின்புற வலி சாதாரணமாக ஒரு சில நாட்களில் சரி ஆகிவிடும். முதுகு வலி தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றுக் கொள்வது சிறந்தது.

Tamil Boldsky
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger