பாதிரியார்களுக்கான ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி!



நாகர்கோவில்,ஏப்.11: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ளது கிறிஸ்டியன் அக்காடமி ஃபார் அட்வான்ஸ் தியாலஜிக்கல் ஸ்டடி என்ற கல்லூரி. இந்தக் கல்லூரியானது பாதிரியார்களை உருவாக்கக்கூடிய இறையியல் கல்லூரியாகும்.

இந்தக் கல்லூரியின் நிறுவனர் ஜேம்ஸ் செல்லப்பா அவர்கள் தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு கடந்த 19.03.2013 அன்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அவர் தனது கடிதத்தில் ஃபேஸ்புக் (Facebook) மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற உங்களது அமைப்பு குறித்து தகவல் தெரிந்து கொண்டேன்.


இஸ்லாம் குறித்து எங்களது இறையியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கேள்வி பதில் வடிவில் சந்தேகங்களைப் போக்க அரை நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துதரும்படிக் கோரிக்கை விடுத்திருந்தார். முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே இந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை ஏற்று டிஎன்டிஜே மாநிலத்தலைமையகத்திலிருந்து மாநிலத் தணிக்கைக் குழுத் தலைவர் கலீல் ரசூல் மற்றும் சான் அமைப்பினருடனான கிறித்தவ விவாதங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பாளராக செயல்பட்ட பெங்களூர் கனி ஆகியோர் ஆங்கிலத்திலான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உதவியாக தாங்கல் ஹபீபுல்லாஹ் அவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹாஜா நூஹ் மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


கடந்த 03.04.13 புதன் கிழமையன்று நாகர்கோவிலில் உள்ள இறையியல் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. கல்லூரியில் பயிலக்கூடிய வளர்ந்துவரும் பாதிரிகளாக மாற உள்ள மாணவ, மாணவிகள் 35க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதலில் பெங்களூர் கனி அவர்கள் சிறிய அறிமுக உரையுடன் நிகழ்ச்சியைத் துவங்கினார். இஸ்லாம் 6 விஷயங்களை நம்புவதை அடிப்படையாக கற்றுத் தருகின்றது. படைத்த இறைவன் ஒருவன்தான் என்பதை நம்புவது அதில் முதலாவதாகும். வானவர்களை நம்புவது, வேதங்களை நம்புவது, இறைத்தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது, விதியை நம்புவது ஆகிய நம்பிக்கைகள் குறித்து விவரித்தார். 
இறைவனை எப்படி நம்ப வேண்டும் என்பதை சூரத்துல் இக்லாஸ் மற்றும் ஆயத்துல் குர்ஸியில் இடம்பெறக்கூடிய வசனங்களை வைத்து ஆங்கிலத்தில் எளிய நடையில் அனைவருக்கும் புரியும் விதமாக எளிமையாக விளக்கினார்.
படைத்த இறைவன் ஒருவன்தான். அவனுக்கு எந்தத் தேவையுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. அவன் நித்திய ஜீவன். அவனுக்கு தூக்கம் வராது. ஓய்வு தேவைப்படாது. அனைத்தையும் அவன் அறிந்துவைத்துள்ளான் என்று இறைவன் குறித்து திருக்குர்ஆன் சொல்லக்கூடிய இலக்கணங்கள் ஒருகனம் பாதிரிமார்களாக வரவுள்ளவர்களது உள்ளத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்திருக்கும்.
அறிமுக உரைக்குப் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது. சகோதரர்
கலீல் ரசூல் அவர்கள் கிறித்தவ தரப்பினரது கேள்விகளுக்கு ஆங்கில மொழியில் பதிலளித்தார். கனி அவர்களும் சில கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

  • குர்ஆன் நிறைவு செய்யப் பெற்றதும், தொகுக்கப் பெற்றதும் எப்போது மற்றும் எவ்வாறு?
  • பிற மதத்தினர் கொண்டுள்ள வேத புத்தகங்களிலிருந்தும் குர்ஆன் எவ்வாறு மாறுபடுகிறது?
  • பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்களில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்பதை எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?
  • குர்ஆனில் கூறப்பட்டுள்ள வேதக்காரர்களுக்கு இன்றைய இஸ்லாமியர்கள் வழங்கும் முக்கியத்துவம் என்ன?
  • மறுமை நாளின் அடையாளமாக இஸ்லாமியர்களால் கருதப்படும் ஈஸா (அலை) மீண்டும் இறங்குவதற்கு ஆதாரங்கள் என்ன?
  • ஈஸா (அலை) அவர்களை இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்கு பொதுவான இயேசு என்ற ஓர் சொல்லில் ஏன் அழைப்பதில்லை?
  • பைபிளில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுதான் இஸ்லாம் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் கூறப்பெற்றதா?
  • இஸ்லாமிய மார்க்கத்தில் காணப்பெறும் பிரிவுகள் என்ன? அவற்றில் சரியானதை எவ்வாறு கண்டு கொள்வது?
  • இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்காதவர்களைக் கொல்லுமாறு குர்ஆனில் வசனங்கள் உள்ளதா?
  • உலகின் பல பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் இஸ்லாம் போரின் மூலமாக வாள் முனையில் உருவானதா?
  • இந்தியாவில் காணப்பெறும் பழமை வாய்ந்த வேதங்கள் குறித்து இஸ்லாம் கூறுவதென்ன?
  • அரபுலகத்திற்கு மட்டுமே வழங்கப் பெற்ற இஸ்லாமிய கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் எவ்வாறு பொருந்தும்?
  • இறைவனின் வழிகாட்டு தலுக்கும், தூதரின் வழிகாட்டுதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? எதை ஏற்க வேண்டும்?
  • குர்ஆன் இறை வேதம்தான் – முரண்பாடுகளே இல்லை என்பதை எவ்வாறு மதிப்பீடு செய்வது?
  • முற்காலத்தில் கூறப்பெற்ற குர் ஆனின் கருத்துக்கள் எவ்வாறு இன்று காணப்பெறும் அனைத்து கலாச்சார மக்களின் வாழ்க்கை நெறிக்குப் பொருந்தும்?
  • இஸ்லாம் மட்டும்தான் உண்மை மார்க்கம் என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?
  • இஸ்லாமிய மார்க்கத்தின் விளக்க நூல்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்த தகவல்கள் என்ன?
என்பன உள்ளிட்ட பலகேள்விகளை வளர்ந்துவரும் பாதிரிமார்கள் கேட்டனர்.
அனைத்து கேள்விகளுக்கும் அழகான முறையிலும், தர்க்க ரீதியாகவும், குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையிலும் பதிலளிக்கப்பட்டது கிறித்தவ தரப்பினரை வெகுவாக ஈர்த்தது.
முஸ்லிம்கள் ஏன் தீவிரவாதச் செயல்களைச் செய்கின்றனர் என்பது குறித்த
கேள்விக்கு இஸ்லாத்திற்கும் இஸ்லாமியப் பெயர்தாங்கிகள் செய்யும் தீவிரவாதச் செயல்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை கலீல் ரசூல் விளக்க அதை இடைமறித்து மாணவர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு மறுபடியும்  சிறப்பான முறையில் விளக்கமளிக்க இந்தக் கேள்வி பதில் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்தது.
நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைந்தது. கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவியருக்கும் மாமனிதர் ஆங்கில மொழியாக்கம் நூல் இலவசமாக வழங்கப்பட்டது.
கிறித்தவ பாதிரிமார்களாக மாற இருக்கின்ற மாணவ, மாணவியரிடத்தில் தூய இஸ்லாத்தை எடுத்துரைத்த முழு திருப்தியுடன் நமது நிர்வாகிகள் திரும்பினர். இதுபோன்ற கிறித்தவம் குறித்த சந்தேகங்களை நாங்கள் கேட்டுத்
தெளிவு பெறும் வகையில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை முஸ்லிம்களுக்காக ஏற்பாடு செய்யுங்கள் என்று கோரிக்கையும் அவர்களுக்கு வைக்கப்பட்டது.
கிறித்தவ மக்கள் அதிகம் வாழக்கூடிய குமரி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு
முன்பாக நாகர் கோவிலில் கிறித்தவ பாதிரியார்களுடனான அனல் பறந்த விவாதம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகளின் வாயிலாக கிறித்தவ மக்கள் மத்தியில் ஏகத்துவ அழைப்புப்பணி வெகுவாக சென்றடைந்து வருகின்றது.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger