"தீவிரவாதத்தை போதிக்கின்றதா இஸ்லாம்?"



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

"தீவிரவாதத்தை

 போதிக்கின்றதா

 இஸ்லாம்?"

உலக மதங்களில் இறுதியாக மறு அறிமுகம் செய்யப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது மறு அறிமுகம் செய்யப்பட்டு 14 நூற்றாண்டுகளில் உலக மக்களில் கால் பகுதியினரைத் தன்னளவில் ஈர்த்துக் கொண்டது.

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்காத மக்கள் கூட இம்மார்க்கத்தின் பல நல்ல அம்சங்களை மனம் திறந்து பாராட்டி வருகின்றனர்.
  • தெளிவான கடவுள் கொள்கை
  • புரோகிதர், இடைத்தரகர் இல்லாமை
  • மூட நம்பிக்கைகளை வலிமையுடன் எதிர்க்கும் தன்மை
  • சாதி மொழி, இனப் பாகுபாடுகளை ஒழித்து அது ஏற்படுத்திய உலகளாவிய சகோதரத்துவம்

என்று பல விஷயங்கள் முஸ்லிமல்லாத மக்களையும் கவர்கின்ற வகையில் அமைந்துள்ளன.

ஆயினும் இஸ்லாம் மீது அவர்களில் சிலருக்கு கடுமையான வெறுப்பும் மற்றும் சிலருக்கு ஆழமான மனக் குறையும் இருக்கின்றன.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது. தீவிரவாதிகளை உருவாக்குகிறது என்ற எண்ணம் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்குரிய காரணங்களில் இதுவே முதன்மையானதாகத் திகழ்கின்றது.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்ற கருத்துடையோர் இரண்டு வகையினராக உள்ளனர்.

ஒரு சாரார் முஸ்லிம்களில் சிலரது நடவடிக்கைகளையும், முஸ்லிம்கள் குறித்த ஊடகங்களில் இடம் பெறும் செய்திகளையும் பார்த்து விட்டு இந்த முடிவுக்கு வந்தவர்கள்.

மற்றொரு சாரார் திருக்குர்ஆனில் போர் செய்வது குறித்த வசனங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையேற்று பல போர்களை நடத்தியதையும் அறிந்து அதன் அடிப்படையில் இவ்வாறு முடிவுக்கு வந்தவர்கள்.

இரண்டாவது சாராரின் முடிவு சரியானது தானா? என்பதை முதலில் காண்போம்.

திருக்குர்ஆனில் போர் செய்யுமாறு வலியுறுத்திக் கட்டளையிடும் பல வசனங்கள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல போர்களை தலைமை ஏற்று நடத்தியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஆனால் இதைப் புரிந்து கொள்ள வேண்டிய விதத்தில் புரிந்து கொண்டால் தாங்கள் தவறான முடிவுக்கு வந்து விட்டதை அம்மக்கள் உணர்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாக நாம் பிரிக்கலாம்.

  • அவர்கள் பிறந்தது முதல் நாற்பதாம் வயது வரையிலான வாழ்க்கை முதல் கட்டம்.
  • அவர்கள் இறைவனின் தூதர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நாற்பதாம் வயது முதல் தமது சொந்த ஊரில் வாழ்ந்த 53 வயது வரையிலான 13 வருட வாழ்க்கை.
  • சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு மதீனாவுக்குச் சென்று அங்குள்ள மக்களை வென்றெடுத்து அங்கே ஒரு ஆட்சியை நிறுவி நடத்திய 63 வயது வரையிலான பத்தாண்டு வாழ்க்கை.

இம்மூன்று காலகட்டங்களில் முதல் கட்டமாகிய நாற்பது வயது வரை அவர்கள் தாமுண்டு தமது வியாபாரம் உண்டு என்று வாழ்ந்தார்கள். எவ்விதக் கொள்கை பிரச்சாரமும் செய்யாத காலகட்டம். அதில் எந்த விமர்சனத்துக்கும் வழி இல்லை.

இரண்டாவது கால கட்டத்தில் தமது சொந்தக்காரர்களாலும், சொந்த ஊர்வாசிகளாலும் பலவிதமான துன்பங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் அவ்வூர் மக்கள் ஊரை விட்டே விலக்கி வைத்தனர். அவர்களை ஏற்றுக் கொண்ட பலரைக் கொன்று குவித்தனர். மற்றும் பலரைச் சித்திரவதை செய்தனர்.

மிக உயர்ந்த குலமாக அம்மக்களால் கருதப்பட்ட குரைஷிக் குலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த போதும் அவர்களையும் அவ்வூரார் சித்திரவதை செய்தனர்.

ஒரு மனிதன் ஆயுதம் ஏந்துவதற்குரிய எல்லா நியாயங்களும் அவர்களுக்கு இருந்தன. நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்ட மக்கள் இத்தகைய கோரிக்கையையும் நபிகள் நாயகத்திடம் முன் வைத்தனர். ஆயினும் இந்தப் பதிமூன்று ஆண்டுகளில் ஒரு தடவை கூட எதிர் தாக்குதல் நடத்துமாறும், தனிப்பட்ட நபர்களைக் கொல்லுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. மாறாக, ‘‘நான் பொறுமையைக் கடைபிடிக்குமாறு தான் கட்டளையிடப்பட்டுள்ளேன்’’ என்பது தான் பதிமூன்று ஆண்டுகளும் அவர்களின் பதிலாக இருந்தது. இன்றைக்கு உலகின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் துன்பங்களை அனுபவிப்பதை விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் அனுபவித்தனர் என்பது முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.

இதன் பின்னர் தமது சொந்த மண்ணில் வாழவே முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு முன்னூறு மைல் தொலைவில் உள்ள மதீனா எனும் நகரை அடைந்து அம்மக்களின் உள்ளங்களை வென்று அங்கே ஒரு ஆட்சியும் நிறுவினார்கள்.

இவ்வாறு ஆட்சி நிறுவப்பட்ட பின்னரும் எதிரிகள் அவர்களை நிம்மதியாக இருக்க விடவில்லை. பலமுறை படை திரட்டி வந்தனர். பல்வேறு கோத்திரத்தாரை நபிகள் நாயகத்திற்கு எதிராகத் தூண்டி விட்டனர். ஒரு கட்டத்தில் நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் தவிர அனைத்து அரபுலகும் கூட்டணிப்படை அமைத்து போரிட வந்தனர். இது இஸ்லாமிய வரலாற்றில் அகழ்ப்போர் எனப்படுகிறது.

இதுபோன்ற போர் அவர்கள் மீது திணிக்கப்பட்ட நேரத்தில் தான் நாட்டின் அதிபர் என்ற முறையில் நாட்டையும், குடிமக்களையும் பாதுகாக்கப் போரில் இறங்கினார்கள்.

எந்த ஒரு நாடும் தன்னைக் காத்துக் கொள்வதற்காக என்ன செய்யுமோ என்ன செய்ய வேண்டுமோ அந்தக் கடமையைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தனர். முஸ்லிமல்லாத மக்களை ஒழித்துக் கட்டுவதற்காக அவர்கள் போர் செய்யவில்லை.

இதனால்தான் அவர்களின் ஆட்சியின் கீழ் யூதர்களும், கிறித்துவர்களும் நிம்மதியாக வாழ்ந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச உடைகளை யூதரிடம் அடமானம் வைத்து அதை மீட்காமலே மரணித்தார்கள். யூதர்களுக்கு இந்த அளவுக்கு பொருளாதாரச் சுதந்திரம் இருந்தது.

யூதர்கள் தமக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளுக்குக் கூட நபிகள் நாயகத்தைத் தேடி வந்து தீர்ப்பு பெற்று வந்தனர்.

திருக்குர்ஆனில் போர் செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் யாவும் இவ்வாறு ஆட்சி அமைந்த பிறகு முஸ்லிம் அரசுக்கு பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் தாம்.

முஸ்லிமல்லாத மக்கள் அனைவருக்கும் எதிராக போரிடுங்கள் என்பதைத் தமது கொள்கையாக அவர்கள் அறிவித்திருந்தால் இஸ்லாத்தை அன்றைய மக்கள் ஏற்றிருக்கவே மாட்டார்கள்.

இது ஆட்சிக்கும், நாட்டுக்கும் இடப்பட்ட கட்டளை என்பதை முஸ்லிமல்லாத மக்களும் புரிந்து வைத்திருந்த காரணத்தால் தான் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வந்தனர்.

எனவே குர்ஆனில் போர் செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கும் வசனங்கள் யாவும் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைதானே தவிர தனி நபர்கள் மீதோ, குழுக்கள் மீதோ சுமத்தப்பட்டதல்ல.

அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளை தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது.

திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்μக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போன்ற சட்டங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. 

இச்சட்டங்களை தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப் படுத்தவேண்டும்.

போர் குறித்த வசனங்களும், அரசின் மீதும் சுமத்தப்பட்ட கடமையே தவிர தனி நபர்கள் மற்றும் குழுக்கள் மீது சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று கூறிக் கொண்டிருக்கிற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? (திருக்குர்ஆன் 4:75)

இவ்வசனத்தில் பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது? என்று கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொனாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு தப்பித்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன.

ஆயினும் அவர்களை அழைத்து போர் செய்யுமாறு கட்டளையிடாமல், அவர்களுக்காக ஏன் போர் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்கு குர்ஆன் கட்டளையிடுகிறது.

பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் அந்த பலவீனர்களுக்குத்தான் போரிடுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே அரசாங்கத்தின் மீது தான் தேவையேற்படும் போது போர் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனவே அரசாங்கத்தின் மீது தான் தேவையேற்படும் போது போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல.

"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்" என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார்கள். "எங்கள் மீது அவர்களுக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை" என்று அவர்கள் கூறினர். "அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்" என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 2:247)

மேற்கண்ட வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் சென்ற ஒரு இறைத் தூதரின் வரலாற்றுச் செய்தியைக் கூறுகின்றது.

அந்த இறைத் தூதரின் சமுதாயத்தவர் எதிரிகளின் சொல்லொனாத் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஊரை விட்டும் விரட்டப்பட்டிருந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டிருந்தாலும் அந்த இறைத் தூதரின் தலைமையில் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடவில்லை.

இந்த நேரத்தில் அவரது சமுதாயத்தவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தங்களுக்கு ஒரு மன்னரை நியமிக்குமாறு அந்த நபியிடம் வேண்டினார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பிறகு இறைவன் தாலூத் என்பரை மன்னராக நியமித்து அவர்கள் மீது போர் செய்வதைக் கடமையாக்கினான் என்பது இவ்வசனங்கள் கூறும் வரலாறு.

படை திரட்டி யுத்தம் செய்வதென்றால் அதற்கு ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் இருப்பது அவசியம் என்பது இதில் பெறப்படும் முதலாவது சட்டம். ஏனெனில் அந்தச் சமுதாயம் மிகப் பெரும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தும், போர் செய்வதற்கான எல்லா நியாயங்களும் இருந்தும் அவர்கள் போர் செய்யவில்லை. அவர்களுக்குத் தலைமை தாங்கிய இறைத் தூதரும் போர் செய்யவில்லை. மாறாக ஒரு மன்னரை நியமிக்குமாறு வேண்டி இறைவன் மன்னரை நியமித்த பிறகு தான் அவர்கள் போரிட்டுள்ளார்கள்.

உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க் குதிரைகளையும் அவர்களுக்கு எதிராகத் தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும், அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 8:60)

இவ்வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார் படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும்.

இஸ்லாமிய அரசு அமைந்து போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது. எதிரிகளின் படை பலத்தில் பத்தில் ஒரு பங்கு தான் போதுமான படை பலமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கிற இருபது பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (திருக்குர்ஆன் 8:65)

பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை பலத்தில் பாதி படை பலமாவது இருந்தால் தான் இஸ்லாமிய அரசின் மீது போர் கடமையாகும். அதைவிடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிப் போக வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதுதான் குர்ஆனுடைய கட்டளை.

இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான். (திருக்குர்ஆன் 8:66)

எதிரி நாட்டின் படை பலத்தில் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூடபோரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாழும் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்?

இதனால் மிகப் பெரிய இழப்புகள் தான் சமுதாயத்திற்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கினான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத்தான் கடைப்பிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்ட போதுதான் போர் செய்தனர்.

இதை முஸ்லிம்கள் சரியாக புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கி தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து சுகங்கள் அனைத்தையும் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள்.

இதன் பிறகும் மக்கா வாசிகள் படையெடுத்து வந்ததாலும் மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சி இருந்தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடமையை இறைவன் விதித்தான்.

எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் நாட்டுடன் கடைபிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப்போக்கை மேற்கொண்டது.

கொல்லுங்கள், வெட்டுங்கள் என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும்.

போர் செய்வதைக் கடமையாக்கும் போது கூட பலவிதமான நிபந்தனைகளையும் முஸ்லிம் அரசுக்கு திருக்குர்ஆன் விதிக்கிறது.

வலிய சண்டை கூடாது :

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 2:190)

இவ்வசனம் வம்புச் சண்டைக்குப் போகக் கூடாது என்றும், அவ்வாறு நடக்கும் சண்டையை வரம்பு மீறக் கூடாது என்றும் தெளிவாகவே கூறுகிறது.

விலகிச் செல்வோருடன் வீரம் காட்டக் கூடாது :

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன். களகம் இல்லாதொழிந்து அதிகாரம் அல்லாஹ்வுக்குரியதாக ஆகும் வரை அவர்களுடன் போர் செய்யுங்கள்! விலகிக் கொள்வார்களானால் அநீதி இழைத்தோர் மீதே தவிர (மற்றவர்கள் மீது) எந்த வரம்பு மீறலும் கூடாது. (திருக்குர்ஆன் 2:192, 193)

போரிலிருந்து எதிரிகள் விலகிக் கொண்டால் அவர்களுடன் போர் செய்யக் கூடாது என்று இவ்வசனங்கள் தெளிவாகக் கட்டளையிடப் பட்டுள்ளன.

சமாதானத்துக்கு இணங்குதல் :

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 8:61)

எதிரி நாட்டவர்கள் சமாதானத்துக்கு வந்தால் நாம் எவ்வளவு வலிமையுடன் இருந்தாலும் சமாதானத்தை நாட வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது.

இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரை சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். (திருக்குர்ஆன் 9:06)

அடைக்கலம் தேடிவரும் எதிரியை பாதுகாப்பான இடத்தில் சேர்க்குமாறு கட்டளையிட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.

இந்த அடிப்படையை விளங்காத சில முஸ்லிம்கள் முஸ்லிம் அரசுக்கு இடப்பட்ட கட்டளையைத் தவறாக புரிந்து கொண்டு தனி நபர்களும், குழுக்களும் ஆயுதம் தரிப்பதே போர் என்று விளங்கி நடந்து கொள்கின்றனர்.

ஆட்சியில் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவையேனும் ஆயுதம் தூக்கியதில்லை எனும்போது இவர்கள் தவறான முடிவில் உள்ளது உறுதியாகிறது.

இது போன்ற காரியங்களால் எந்தச் சமுதாயத்திற்காக அவர்கள் இத்தகைய காரியங்களைச் செய்தார்களோ அந்தச் சமுதாயத்திற்குத் தான் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன.

உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய குழுக்களுக்கு இறைவன் எந்த வெற்றியும் அளிக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட இஸ்லாத்தை நேசிக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதற்கு இத்தகைய போக்குகளே காரணம்.

எனவே பொறுமை காத்து முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும் கடமையே முஸ்லிம்களின் முதல் கடமை. இதை உணர்வோம். மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.

வெளியீடு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை - 600001.
போன் : +91 44 - 25215226




நன்றி - கத்தார் tntj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger