இயேசு இறை மகனா - தொடர் 8

ஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா?

"பைபிளில் இயேசு சில இடங்களில் ஆண்டவர்" எனவும், தேவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார். இதற்குக் கடவுள் என்று பொருள். பைபிளில் இயேசு கடவுள் எனத் தெளிவாகக் குறிப்பிடப்படுவதால் "அவர் கடவுள் தாம்'' என்பது கிறித்தவர்கள் எடுத்துக் காட்டும் மற்றொரு ஆதாரமாகும். இந்த ஆதாரமும் அவரைக் கடவுள் என்று ஏற்பதற்கு உதவப் போவதில்லை. ஏனெனில் பைபிள் இதற்கு மாற்றமாகக் கூறுகிறது.தேவர்கள், ஆண்டவர் என்பதன் அர்த்தம் என்ன என்று பைபிள் சொல்லித் தருவதற்கு மாற்றமாக இவர்கள் விளங்கியதால் இவ்வாறு விபரீத முடிவுக்கு வந்துள்ளனர். இதோ தேவர்கள் என்பதற்கு பைபிள் தரும் விளக்கத்தைப் பாருங்கள்!

இயேசு அவர்களை நோக்கி, "நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன். அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என் மேல் கல்லெறிகிறீர்கள்'' என்றார். யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக "நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன் மேல் கல்லெறிகிறதில்லை. நீர் மனுஷனாயிருக்க உன்னை தேவனென்று சொல்லி இவ்விதமாக தேவதூஷனஞ் சொல்லுகிறபடியினால் உன் மேல் கல்லெறிகிறோம்'' என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக "தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தை பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க வேதவாக்கியமும் தவறாததாயிருக்க. - (யோவான் 10:32-35)

இயேசு மனிதராயிருந்தும் ஆண்டவர் எனக் கூறிக் கொண்டதால் யூதர்கள் அவரைக் கல்லெறியத் திட்டமிட்டார்கள். இதற்கு இயேசு பதிலளிக்கும் போது "கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்டவர்கள் தேவர்கள்'' என்ற அர்த்தத்தில் அப்படிக் கூறியதாக  பதிலளிக்கிறார். கடவுள் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தையைத் நான் பயன்படுத்தவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கிறார். தேவர்கள் என்ற சொல்லுக்கு இயேசுவே பொருள் விளக்கம் தந்த பின் அதற்கு முரணாகப் பொருள் கொள்வது இயேசுவை மதித்ததாக ஆகுமா?

பைபிளில் பயன்படுத்தப்படும் "ஆண்டவர்", "தேவர்" என்பது போன்ற பதங்கள் "கடவுளின் தூதர்கள்", "கடவுளின் வார்த்தையைப் பெற்றவர்கள்" என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு இது சரியான சான்றாகும். இயேசு, தேவர் எனத் தம்மைக்  கூறிக் கொண்டது கடவுள் என்ற அர்த்தத்தில் தான் என்று கிறித்தவர்கள் பிடிவாதம் பிடித்தால் அதற்கும் மேற்கண்ட வசனத்தில் போதுமான மறுப்பிருக்கின்றது. நான் மட்டும் தேவனல்லன்; கடவுளின் வார்த்தையைப் பெற்றுக் கொண்ட அனைவருமே தேவர்கள் தாம் என இயேசு குறிப்பிடுகிறார்.

எண்ணற்ற தேவர்கள்
மோசே, ஆபிரகாம், தாவீது, சாலமோன் மற்றும் பல தீர்க்கதரிசிகளும் இறை வார்த்தையைப் பெற்றவர்கள் என பைபிள் கூறுகிறது. அப்படியானால் அவர்களையெல்லாம் கடவுள்கள் என்று கூறாத கிறித்தவர்கள் இயேசுவை மட்டும் கடவுள் எனக் கூறுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

மோசேயும் தேவர்:
"கர்த்தர் அவனிடம் மோசேயை நோக்கி "பார்! நான் உன்னைப் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.'' - (யாத்திராகமம் 7:1)

மக்களும் தேவர்கள்:
"நீங்கள் தேவர்களென்றும் நீங்களெல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்." என்று தாவீது தம் சமூகத்தாரிடம் கூறியிருக்கிறார். - (சங்கீதம் 82:6 )

தேவர்கள் எனும் சொல் இயேசுவுக்கு மட்டுமின்றி மோசேவுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கும் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயேசுவை வழிபடக் கூடியவர்களும் கூட தேவர்களாக இருக்கும் போது இயேசுவை வழிபடுவது என்ன நியாயம்?
இயேசுவுக்கு இதில் சிறப்பு என்ன இருக்கிறது?

தேவர்கள் என்ற சொல்லைப் போலவே ஆண்டவர் என்ற சொல்லையும் கிறித்தவர்கள் தவறாக விளங்கிக் கொண்டதால் தான் இயேசுவைக் கடவுளின் குமாரர் என்று நினைக்கின்றனர். கிறித்தவர்கள் தவறான பொருளில் விளங்கிக் கொண்ட "ஆண்டவன்" என்ற வார்த்தை இன்னும் எத்தனையோ மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர்கள் வாசிக்கின்ற பைபிள் கூறுகிறது!

மன்னரும் ஆண்டவரே:
"அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி ராஜ சமூகத்தில் நின்று அவருக்குப் பணிவிடை செய்யவும் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு... " - (முதலாம் ராஜாக்கள் 1:2)
இங்கே மன்னர் ஆண்டவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

வீட்டு எஜமானரும் ஆண்டவரே:
"வீட்டு எஜமானன் எழுந்து கதவைப் பூட்டின பின்பு நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே! ஆண்டவரே! எங்களுக்கு திறக்க வேண்டுமென்று... " - (லூக்கா 13:25)இவ்வசனத்தில் வீட்டு எஜமானர்கள் ஆண்டவர் எனக் கூறப்படுகின்றனர். மத்தேயு 25:11 ஐயும் பார்க்க!

கணவரும் ஆண்டவரே:
"அந்தப் படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி அவனுக்குக் கீழ்ப்படிந்தாள்... " - (ஒ பேதுரு 3:6)
இங்கே கணவர் ஆண்டவர் எனக் கூறப்படுகிறார்.

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள்:
"நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல்..." - (முதலாம் ராஜாக்கள் 1:11)
"இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி!" - (ஆதியாகமம் 32:18)

நல்ல மனிதர்கள் ஆண்டவர்கள் என இங்கே குறிப்பிடப்படுகின்றனர். ஆண்டவர் எனும் சொல்
கணவன்
எஜமான்
தலைவன்
நல்லவன்
ஆகியோருக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை இந்த வசனங்கள் நன்கு விளக்குகின்றன. இன்றைக்குக் கூட கத்தோலிக்கர்கள் தங்கள் தலைமை குருவை போப் ஆண்டவர் எனக் கூறுவதில்லையா? அவரும் இயேசுவைப் போல் கடவுள் தாமா? "இயேசுவை ஆண்டவர் என பைபிள் கூறுவதால் அவர் கடவுள் தான்'' எனக் கிறித்தவர்கள் கூறுகின்ற இந்த வாதமும் அர்த்தமற்றது என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
இன்ஷா அல்லாஹ் தொடரும் ...
நன்றி - jesusinvites 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger