இயேசு இறை மகனா ? - தொடர் 5

இறை மகன் என்றால் என்ன ?
இறை மகன் என்பதன் பொருள்:
இயேசு இறை மகன் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளார். இயேசு மட்டுமின்றி இன்னும் பலரும் இறை மகன்கள் என்று கூறப்பட்டுள்ளனர். இதை எப்படிப் புரிந்து கொள்வது? தங்கள் மனோ இச்சைப் பிரகாரம் விளக்கம் கொடுத்துப் புரிந்து கொள்வதை விட பைபிளின் வெளிச்சத்தில் கிறித்தவர்கள் இதைப் புரிந்து கொண்டால் தான் பைபிளை மதித்தவர்களாக அவர்கள் ஆக முடியும்.

இறை மகன், இறைக் குமாரன் என்பன போன்ற சொற்களுக்கு இறைவனிலிருந்து பிறந்தவர், அதனால் இறைவனாகவே ஆகிவிட்டவர் என்று பொருள் கொள்வதா?
அல்லது இறைவன் விரும்பும் விதமாக தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்று பொருள் கொள்வதா?


இதைத் தான் கிறித்தவர்கள் விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்!
இறை மகன் என்பது போன்ற சொற்களுக்கு முதலாவது அர்த்தம் இருக்க முடியாது.
இயேசுவைத் தவிர மற்றவர்களுக்கு அந்தச் சொல் பயன்படுத்தப்படும் போது முதலில் சொன்ன பொருளைக் கிறித்தவர்களே கொள்வதில்லை. கர்த்தர் விரும்பும் வகையில் நடந்தவர்கள் என்றே பொருள் கொள்கின்றனர். பைபிளின் இன்னும் பல வசனங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

"பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்." - (மத்தேயு 23:9)

பூமியில் உள்ள ஒருவரையும் பிதா - தந்தை என்று சொல்லக் கூடாது என்று இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகிறது. அந்தக் கட்டளையின் பிரகாரம் நம்மைப் பெற்ற தந்தையைக் கூட தந்தை என்று கூறக் கூடாது. அவ்வாறு கூறினால் இந்தக் கட்டளையை மீறுவதாக ஆகும். ஆனால் ஒவ்வொரு கிறித்தவரும் தன்னைப் பெற்றெடுத்தவரை தந்தை என்று தான் கூறுகிறார். அப்படியானால் ஒருவரையும் பிதா என்று கூறக் கூடாது என்ற கட்டளையை அவர் மீறுகிறாரா? என்பதைச் சிந்திக்கும் போது தான் இங்கே "பிதா" என்பது எந்தப் பொருளில் கையாளப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. 

பிதா என்பது இரண்டு பொருளில் பயன்படுத்தப்படும் சொல் என்பதும் புரிகிறது. படைத்தவன், கடவுள் என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு. பெற்ற தந்தை எனவும் பொருள் உண்டு. கடவுள் சம்மந்தப்படாத இடங்களில் இச்சொல் புதல்வன் என்ற பொருளிலும், கடவுளுடன் தொடர்பு படுத்திக் கூறப்படும் இடங்களில் நல்ல அடியார் என்ற பொருளிலும் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட வசனத்தில் பிதா என்ற இடத்தில் கடவுள் என்ற வார்த்தையைப் போட்டுப் பாருங்கள்! எவ்வளவு அழகாக அது பொருந்திப் போகிறது!

"பூமியில் உள்ள எவரையும் கடவுள் என்று கூறாதீர்கள். பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்கள் கடவுள்'' என்று சொல்லிப் பார்த்தால் இதன் அர்த்தம் தெளிவாக விளங்குகிறது.
"பூமியில் உள்ள எவரையும் உங்கள் தந்தை என்று சொல்லாதீர்கள்! பரலோகத்திலிருப்பவரே உங்கள் தந்தை'' என்று சொல்லிப் பார்த்தால் அது அனர்த்தம் ஆகிறது.


பள்ளிக் கூடங்களில், அரசு அலுவலகங்களில், வாக்காளர் பட்டியலில், குடும்ப அட்டைகளில், பாஸ் போர்ட்டுகளில், திருமணப் பதிவேடுகளில் இன்னும் பல சந்தர்ப்பங்களில் உங்கள் தந்தையின் பெயர் என்ன என்று கேட்கப்பட்டால் "பரலோகத்திலிருப்பவர்" என்று கிறித்தவர்கள் கூறுவார்களா? அல்லது தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரைக் கூறுவார்களா? நிச்சயமாக தங்களைப் பெற்றெடுத்த தந்தையின் பெயரையே கூறுவார்கள்! அப்படியானால் யாரையும் தந்தை என்று கூறக் கூடாது என்ற பைபிளின் கட்டளையைக் கிறித்தவர்கள் மீறி விடுகிறார்களே! இந்தக் கட்டளையை மீறாமல் உலகில் வாழவே முடியாதே! இப்படித் தான் அவர்கள் கூறப் போகிறார்களா? நிச்சயமாகக் கூற மாட்டார்கள். "பிதா" என்பது கடவுள் என்ற பொருளிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் கூறுவார்கள்.

"பிதா' என்பதற்குப் "படைத்தவன்' என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் "குமாரன்" என்பதற்கு "படைக்கப்பட்டவன்" என்ற பொருளைத் தவிர வேறு பொருளிருக்க முடியாது. பிதா என்பதற்கு இறைவன் என்பது பொருள் என்றால் அதற்கு எதிர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் மகன் என்பதற்கு "அடியான்" என்பது தான் பொருளாக இருக்க முடியும். இந்தச் சாதாரண உண்மையைக் கிறித்தவர்கள் விளங்கிக் கொண்டால் "இயேசு இறைவனுக்குப் பிறந்தவர்; அதனால் இறைவனாகவே ஆகி விட்டவர்'' என்று கூற மாட்டார்கள்! "இறை குமாரன் என்று இயேசு குறிப்பிடப்படுவதால் அவரும் இறைவனே" என்று நம்புகின்ற கிறித்தவர்களின் நம்பிக்கை எவ்வளவு தவறானது என்று இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
                                                          இன்ஷா அல்லாஹ்  தொடரும்....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger