நோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்திகள் எத்தனை வகை

நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி

(Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)

இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytesஎன்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)

மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய்த்தொற்று எப்போது ஏற்படுகிறது?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில...

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப்பொருள் பழக்கம்,

5. புகைப்பழக்கம்,

6. தூக்கமின்மை,

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்க

சாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது.

கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது.

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

நன்றி: நக்கீரன்

நன்றி - கருப்பு ரோஜாக்கள்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger