கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ, இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. (2:184)
இந்த ரமளான் மாதத்தில் நம் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் நோன்பைப் பற்றி பலவிதமான கருத்துக்களை நோன்பின் நோக்கம் என்ற பெயரில் மக்களிடம் பரப்பப்பட்டு வருகின்றது.
அதேபோல் எந்த மாதமும் இல்லாமல் இந்த மாதம் மட்டும் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறோம், அழைப்புப் பணிச் செய்கிறோம் எனும் பெயரில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் வலையில் உள்ள ஆலிம்(?) களைக் கொண்டு பிரச்சாரங்கள் செய்து வருவதை நாம் காண்கிறோம்...
இத்தகைய ஆலிம்களில் சிலர், நோன்பின் நோக்கம் எனும் பெயரில், நோன்பு என்பது, பசியின் கொடுமையை உணர்வதற்காகத் தான் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இது தான் சரியானது என்றால், பசியை அறியாத பணக்காரர்களுக்கு மட்டும் தான் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்க வேண்டும். ஏழைக்கு நோன்பு அவசியமில்லை என்றாகி விடுகின்றது என்பதை மறைத்து விடுகின்றனர்.
இன்னும் சிலரோ, நோன்பு நோற்பதால் உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது என்பதால் நோன்பு அவசியம் என்கின்றனர். இது சரியென்றால் நோயாளிகளுக்கு மட்டும் தான் நோன்பு என்றாகி விடுகிறது. மேலும், அல்லாஹூதாஆலா நோயாளிகளுக்கு நோன்பில் சலுகை வழங்குவதை மேற்குறிப்பிட்டுள்ள ஆயத்தில் நாம் காண்கிறோம். ஆக இதெல்லாம் நோன்பின் நோக்க மல்ல.
நோன்பின் நோக்கத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
நம்பிக்கைக் கொண்டோரே!நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)
இந்த வசனத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்யக் கூடியவர்களில் சிலர் இறையச்சத்தை மக்களுக்கு போதித்துக் கொண்டே, அன்னியபெண்ணுடன் தவறான செய்கைகளை செய்பவர்களையும், மார்க்கத்தை இரண்டாம் பட்சமாக்கி அரசியல் வாழ்விற்காக மாற்றுமத விழாக்களில் கலந்துக் கொள்பவர்களையும், தமிழகத்தில் தவ்ஹீதைப் பேச மாட்டோம் என்று உரத்த குரலில் வீர வசனம் பேசி விட்டு, வளைகுடாவில் தவ்ஹீத் பேசும் இரட்டை முகத்தையுடையவர்களையும் கண்டிக்காமல் தான் பேசிய தொகைக்காக பிரச்சாரம் செய்து விட்டு செல்பவர்களையும் நாம் காண்கிறோம்.
அதனால் தான் இத்தகைய வேடதாரிகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கையையும் விட்டு விடவில்லையோ அவர் தாகித்தி ருப்பதிலும் பசித்திருப்பதிலும் அல்லாஹ்விற்கு எந்த தேவையுமில்லை. (அபுஹூரைரா(ரலி) புகாரி 1903, 6057)
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் யாராவது சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறவும் (அபுஹூரைரா(ரலி) புகாரி 1893, 1908)
ஆக நோன்பின் நோக்கம் ஒவ்வொருவரும் தங்களின் சுய வாழ்க்கையில் அல்லாஹ்வைப் பயந்து ஆன்மிகப் பயிற்சி பெறுவது தான் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்.
நோன்பின் நேரம்:
வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்) கருப்பு கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். (அல்குர்ஆன்: 2:187)
அதாவது பஜ்ரிலிருந்து நோன்பின் நேரம் தொடங்குகிறது என இவ்வசனத்தின் மூலம் அறியலாம். ஆனால் நம் சமுதாய மக்கள், தமிழகத்திலும் சரி, வளைகுடா நாடுகளிலும் சரி இரவு 12 மணிக்கோ அல்லது 3 மணிக்கோ சாப்பிட்டு விட்டு உறங்கி விடும் பழக்கம் இருந்து வருவதைப் பார்க்கிறோம். இது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமானதாகும். இதனை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அல்லாஹ் பஜ்ரிலிருந்து தொடங்குங்கள் என்று கட்டளையிட்டிருக்க, நாமோ இல்லை நான் 12 மணிக்கோ அல்லது 3 மணிக்கோ தான் தொடங்குவேன் என்பது அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணிப்பது போலாகும் என்பதை ஏனோ சகோதரர்கள் விளங்க மறுக்கின்றனர்.
ஸஹரின் நேரம்:
நோன்பு வைக்கும் நம் சகோதரர்களில் பலர் ஸஹர் உணவை உண்கிறோம் என்ற பெயரில் இரவு 12 மணிக்கும் அல்லது 3 மணிக்கும் உண்டு விட்டு உறங்கி விடுவதைப் பற்றி நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம்.
நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்து விட்டு (பஜ்ர்) தொழுகைக்கு ஆயத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (பஜ்ருக்கும் ஸஹருக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும்? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஒதும் நேரம் என்றார்கள்.(அனஸ்(ரலி) புகாரி 576, 1134, 1921, 575)
அதாவது ஐம்பது திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆகும்.
ஸஹர் உணவு:
நம்மில் பலர் விடி ஸஹர் எனும் பெயரில் மார்க்கத்திற்கு முரணான வகையில், ஸஹர் நேரம் முடிந்தவுடன் எழுந்து தண்ணீரை மட்டும் குடித்து விட்டு நோன்பு நோற்பதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். இத்தகைய செயல்கள் நம்மை நோன்பின் பலனை விட்டும் தூரமாக்கி விடும் என்பதை விளங்க வேண்டும்.
மேலும் நபி(ஸல்) அவர்கள் ஸஹர் உணவில் பரகத் உள்ளது என நவின்றுள்ளார்கள்:
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரகத் உள்ளது (அனஸ் பின் மாலிக் (ரலி) புகாரி 1923)
நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட(யூத கிருஸ்துவ)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும். (அம்ரு பின் ஆஸ் (ரலி) முஸ்லிம் 1836)
ரமளான் அல்லாத நோன்பாக இருந்தால் நோன்பு நோற்கும் முடிவை காலையில் சுபுஹ் தொழுத பின்புகூட எடுத்துக் கொள்ளலாம். காலையில் சுபுஹ் தொழுது விட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டில் உண்பதற்கு எதுவும் இல்லை. பட்டினியாகத் தான் அன்றைய பொழுது கழியும்போல் தெரிகிறது. நோன்பு நோற்பது முடிவு செய்துக் கொள்ளலாம். ஆனால் சுபுஹ் நேரம் வந்தது முதல் எதுவும் உண்ணாமல் இருந்திருக்க வேண்டும்.ஒரு நாள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள் (உண்பதற்கு) எதுவும் உள்ளதா? என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று கூறினோம். அப்போது நான் நோன்பாளியாக இருந்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள். மற்றொரு நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் ஹைஸ் எனும் உணவு அன்பளிப்பாக வந்துள்ளது என்று கூறினோம். அதற்கவர்கள் நான் நோன்பு நோற்றுள்ளேன். இருந்தாலும் கொண்டு வா என்று கூறிவிட்டு சாப்பிடலானார்கள். கடமையல்லாத நோன்பு நோற்பவர் தர்மம் செய்பவர் போலாவார். விரும்பினால் செய்யாமலும் இருக்கலாம் என்று கூறினார்கள். (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 1851)
கடமையல்லாத நோன்பை பொறுத்தவரை காலையில் கூட அது குறித்து முடிவு செய்யலாம் என்பதையும் விருப்பமான உணவு தயாராக இருந்தால் கடமையல்லாத நோன்பை முறிக்கலாம் என்பதையும் இந்த ஹதிஸிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.
ஆனால் கடமையான நோன்பு நோற்கும் முடிவைக் காலையில் எடுக்கக்கூடாது. ஏனெனில் அது நமது விருப்பத்திற்கு உட்பட்டதல்ல. சுபுஹ் முதல் மக்ரிப் வரை நோன்பு நோற்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். சுபுஹ் முதலே நோன்பாளியாக நாம் இருக்க வேண்டும் என்றால் சுபுஹூக்கு முன்பே நோன்பு நோற்கும் முடிவை நாம் எடுத்து விட வேண்டும்.
மேலும் எதுவரை நோன்பை நோற்றிருக்க வேண்டும் என அல்லாஹ் தன் திருமறையில் :
பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் (அல்குர்ஆன் 2:187)
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு துறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர்(அபுதர்(ரலி) புகாரி 1957)
இந்த திசையிலிருந்து இரவு நம்மை நோக்கி வந்து அந்தத் திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்.(இப்னு அபீ அவ்ஃபா(ரலி) புகாரி1954)
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்தவுடன் ஒரு மனிதரிடம் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக் கரைசலைக் கொண்டு வருவீராக! என்றார்கள். அதற்கவர், இன்னும் கொஞ்சம் மாலையா கட்டுமே! என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போய் மாவைக் கரைத்து எடுத்து வருவீராக! என்றார்கள். இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்து வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். (இப்னு அபீ அவ்ஃபா(ரலி) புகாரி 1941, 1955, 1956,1958, 5297)
ஆனால் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாக பேனுதல் என்ற அடிப்படையில் நம்மவர்கள் சூரியன் மறைந்து ஐந்து நிமிடங்கள் கழித்து நோன்பு துறக்கின்றனர். இது அல்லாஹ்வின் கட்டளையையும், அவனின் தூதரின் கட்டளையையும் மீறுகின்ற செயல் என்பதை உணர்ந்து அதை விட்டும் விலக வேண்டும்.
நிய்யத் செய்வது:
செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.(உமர்(ரலி) புகாரி 1)
இங்கு நிய்யத் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. நிய்யத் எண்ணம் வார்த்தைக்கு மனதால் எண்ணுவது, தீர்மானம் செய்வது என்பதாகும். ஆனால் வாயால் மொழிவது என்கின்ற அர்த்தம் கிடையாது.ஆனால் இன்று நம் சமுதாயத்தில், நவ்வைத்து ஸவ்மகதின் அன்ன தாயி ஃபர்ளி ரமளானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதாலா மற்றும் தஹபள்ளமவு என்ற வாசகங்களைக் கொண்டு நிய்யத் எனும் பெயரால் வாயால் மொழியும் பழக்கம் இருந்து வருகிறது. இத்துவாக்கள் ஹதிஸ் கிரந்தங்களில இருந்தாலும் அனைத்து ஹதிஸ்களும் பலவீனமானவை யாகும்.
இவ்வாறு கூறித்தான் நோன்பு நோற்க வேண்டுமென்றி ருந்தால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்திருப் பார்கள். ஆனால் அப்படி ஒரு நிய்யத் மார்க்கத்தில் இல்லை ஆகவே அதை ஓதக் கூடாது. மீறி செய்தால் அது நிராகரிக்கப்படும்.
யாரேனும் நமதுக் கட்டளையின்றி ஒரு செயலை செய்தால் அது நிராகரிக்கப்படும் (ஆயிஷா(ரலி) முஸ்லிம் 3243)
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் (புகாரி 5376) என்ற நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் தான் சரியான முறை.
நோன்பை முறிக்கும் செயல்கள்:
சுப்ஹ் முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமலும், பருகாமலும், உடலுறவு கொள்ளாமலும் இருப்பது. தீயப் பேச்சுக்கள் பேசாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு ஆகும்.
இத்தகைய நோன்கை முறிக்கும் செயல்களில் பதினொரு மாத பழக்கத்தின் அடிப்படையில் செய்து விட்டால் என்ன செய்வது. ஏனெனில் இதன் விபரங்களை அறியாமல் நோன்பை விட்டவர்கள் அநேகம் பேர் உள்ளனர். ஆனால் நோன்பை தொடரலாம் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமைப்படுத்தட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் செய்தான் (அபூஹூரைரா(ரலி) புகாரி 1933, 6669)
மேலும் நம்மில் பலர் நோன்பு வைத்துக் கொண்டு குளிக்கக் கூடாது என்றும் எண்ணுகின்றனர். இதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் குளித்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நோன்பிருக்கும் நிலையில் வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். (அஹ்மது22107, அபூதாவுத் 2018)
அதேபோல் பல்துலக்குதல், நறுமணம் பூசுதல் போன்றவற்றையும் தடை செய்கின்றனர். இவற்றிற்கெல்லாம் மார்க்கத்தில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
மேலும் நோன்பு நோற்றுக் கொண்டு இரத்தம் கொடுப்பதை மார்க்கம் தடை செய்யவில்லை என்பதையும் விளங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு நோற்பவர்கள் இரத்தம் கொடுப்பதை நீங்கள் வெறுத்ததுண்டா? என அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் (இதனால்) பலவீனம் எற்படும் என்பதற்காகவே நாங்கள் வெறுத்தோம் என்று கூறினார்கள்.(ஸாபித் அல் புனானி புகாரி 1940)
அதேசமயம் உடலுக்குள் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதோ மருந்து ஊசி குத்திக் கொள்வதோ கூடாது.எனவே நோன்பின் உண்மையான நோக்கத்தினை உணர்ந்து இறையச்சம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ரமளானில் நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு ஈருலக நன்மையை அடைவோமாக!
நன்றி - துபாய் ததஜ
Post a Comment