முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியின் பல பகுதிகளில் கடற்சீற்றம் காரணமாக நூறுக்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் உட்புகுந்துள்ளது.
கடந்த சில நாள்களாக, பூத்துறை, வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டம் துறை, இரவிபுத்தன் துறை, தூத்தூர் பகுதிகளில் கடலில் பெரும் பெரும் அலைகள் எழும்பி வருகின்றன. குறிப்பாக, பூத்துறை பகுதியில் நேற்று மாலை கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. பெரும் அலைகள் 15 அடி முதல் 20 அடி உயரத்திற்கு எழும்பின.
கடல் அரிப்புத் தடுப்புச்சுவர்களை தாண்டியும் உயர்ந்த அலைகள் சில இடங்களில் இருந்த தடுப்புச்சுவர்களையும் உடைத்து இழுத்துச் சென்றன. கடற்சீற்றத்துக்கு ஏராளமான வீடுகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்கரையை ஒட்டியுள்ள நூறுக்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கடல் நீர் புகுந்ததால் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் இல்லங்களில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
அதிகாரிகள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.
Post a Comment