இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 7

3. தந்தையின் மனைவியை மணக்கக் கூடாது

உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும். (திருக்குர்ஆன் 4:22)


மணக்கக் கூடாத உறவுகள்

ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

   1. தாய்
   2. மகள்
   3. சகோதரி
   4. தாயின் சகோதரி
   5. தந்தையின் சகோதரி
   6. சகோதரனின் புதல்விகள்
   7. சகோதரியின் புதல்விகள்
   8. பாலூட்டிய அன்னையர்
   9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
  10. மனைவியின் தாய்
  11. மனைவியின் புதல்வி
  12. மகனின் மனைவி
  13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
   1. தந்தை
   2. மகன்
   3. சகோதரன்
   4. தாயின் சகோதரன்
   5. தந்தையின் சகோதரன்
   6. சகோதரனின் மகன்
   7. சகோதரியின் மகன்
   8. பாலூட்டிய அன்னையின் கணவன்
   9. பாலூட்டிய அன்னையின் மகன்
  10. கணவனின் தந்தை
  11. கணவனின் புதல்வன்
  12. புதல்வியின் கணவன்
  13. சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது

ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம். உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரி கள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும்,  (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:23)


இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது. 

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவுமுறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2451, 4719


இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. (புகாரி 4719)


மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

பால்குடிப் பருவமும் அளவும்

எந்த வயதில் பால் குடித்தாலும் ஒரு பெண் தாயாகி விடுவாள் என்று பாலரும் எண்ணுகின்றனர். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைப் பருவத்தில் பால் கொடுத்தால் தான் தாய் பிள்ளைஎன்ற உறவு ஏற்படும். பாலூட்டும் பருவம் இரண்டு ஆண்டுகள் தான் என்று திருக்குர்ஆன் 2:233 கூறுகிறது.


மேலும் பசியை அடக்கும் அளவுக்கும், நான்கு தடவைகளுக்கு அதிகமாகவும் பாலூட்டினால் தான் தாய் லி பிள்ளை என்ற உறவு ஏற்படும்.

பசியைப் போக்குவதே பாலூட்டலாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2453, 4712


ஒரு தடவை இரண்டு தடவைகள் பால் அருந்துவதால் திருமணத் தடை ஏதும் ஏற்படாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்: முஸ்லிம் 2628


ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் ஐந்து தடவை பாலருந்தினால் தான் திருமணத் தடை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்...
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger