மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு தேர்வுகள் முடிந்து பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகம் வரை மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கைக் காலம் தொடங்கி விட்டது. பால்குடி மறந்த பச்சை மழலைகள் முதல் பருவமடைந்த வாலிப வயதினர் வரை மழலையர், ஆரம்ப, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சேர்ப்பதற்குப் பெற்றோர்கள் பெரு முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்களது முயற்சிகளில் இரண்டு முக்கிய விஷயங்களைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். அல்லது தெரிந்தே கண்டு கொள்ள மறுக்கின்றனர்.
1. கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தல்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிறித்துவப் பள்ளிக்கூடங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை விட வெறி கொண்டு அலைகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அங்கு போய் பயில்கின்ற பிஞ்சு நெஞ்சுகளில் கிறித்தவப் போதனைகள், கிறித்தவப் பிரார்த்தனைகள் பதியப்படுவதுடன் மண்டியிட்டுச் செய்கின்ற வணக்க வழிபாடுகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
தும்மினால் கூட 'ஏசப்பா' என்று குழந்தைகள் சொல்கின்ற அளவுக்கு, உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கிறித்தவ மதத்திற்குப் பாதை மாற்றம் செய்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1358, 1359, 1385, முஸ்லிம் 4803
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்தப் பெரும் பாவத்தை எந்த ஒரு சலனமும் இல்லாமல் செய்கின்றனர்.
கிறித்தவ நிறுவனங்களில் பணி புரிவோர், பிஞ்சு உள்ளங்களில், தளிர்க்கின்ற சின்னஞ்சிறு நாற்றுக்களிடம் தங்கள் நச்சுக் கருத்துக்களை நடுவதற்குப் பாடம் பயின்றவர்கள்; பயிற்சி பெற்றவர்கள்.
இந்தக் கிறித்தவ மையங்களில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்து கிறித்துவ மயமாக்குவதற்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இது மழலைப் பிள்ளைகளின் நிலை என்றால் விடலைப் பிள்ளைகளின் நிலை வேதனையிலும் வேதனையாக அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்க்காமல் கிறித்தவ நிறுவனங்களில் கொண்டு போய் சேர்க்கின்றனர். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இதைச் செய்தாலாவது பரவாயில்லை. பணம் கட்டிச் சேர்க்கும் போதும் இத்தகைய கிறித்தவப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது தான் வேதனையாகும். இந்தக் கல்லூரிகள், முஸ்லிம் மாணவர்களை ஜும்ஆ கூடத் தொழ அனுமதிப்பதில்லை. இப்படி இம்மைக்காக மறுமையை இழப்பதற்குப் பெற்றோர்கள் முன்வரலாமா? என்பதைச் சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.
2. பெண்களின் மேல்படிப்பு
பெற்றோர்கள் தங்கள் பெண் மக்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் கடுமையான ஆர்வத்தைக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணுக்கு உயர் கல்வி வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் உன்னத கற்பா? உயர் கல்வியா? என்று கேட்டால் கற்பு தான் என்று இந்தப் பெற்றோர் பதிலளிப்பர்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் கல்லூரி வாழ்க்கை அபாயகரமானதாகவும் ஆபத்தானதாகவுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் அது மிக மிக அபாயகரமானதாக ஆகி விட்டது. சர்வ சாதாரணமாக சக மாணவர்களுடன் திரையரங்கம் சென்று அருகருகே அமர்ந்து படம் பார்ப்பது, ஹோட்டல், பார்க், பீச் என்று சுற்றுவது போன்ற அத்துமீறல்கள், ஆபாசக் கலப்புகள் எல்லாம் இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது. இப்படிச் சுற்றித் திரியும் பெண் பிள்ளைகள் எப்படி கற்பு சுத்தம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அதனால் நம்முடைய பெண் பிள்ளைகளை நரகத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 66:6)
ஆனால் நம்முடைய உலக ஆசை இதையெல்லாம் செய்வதற்குத் தடையாக அமைகின்றது. இதை உள்ளடக்கும் விதமாகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16,17)
நாம் நம்முடைய பிள்ளைகளின் மறுமைத் தேர்வை முதன்மையாக்குவோமாக!
நன்றி - ஏகத்துவம்
நன்றி- அதிரை tntj
Post a Comment