தென்னமெரிக்காவின் கத்தோலிக்க குருமார்களுடன் போப்பாண்டவர் நடத்திய தனிப்பட்ட கூட்டம் ஒன்றில், அசாதாரண வெளிப்படைத்தன்மையுடன் அவர் இக்கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
தென்னமெரிக்க கத்தோலிக்க குருமார்கள் பங்குகொண்ட இந்த சந்திப்பு பற்றி உருவாக்கப்பட்டிருந்த தொகுப்பு அறிக்கை ஒன்று சிலி நாட்டில் இணையதளம் ஒன்றிடம் கசியவிடப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் அந்த இணையதளம் இத்தொகுப்பை பிரசுரித்துவிட்டுள்ளது.
அசாதாரண வெளிப்படைத்தன்மை
கசிந்து வெளியாகியுள்ள குருமார்கள் கூட்டத்தின் அறிக்கையை வைத்துப் பார்க்கையில், வத்திகானத்தில் காணப்படும் பிரச்சினைகள் பற்றி போப்பாண்டவர் மிகவும் வெளிப்படையாக விவாதித்துள்ளார் என்று தெரிகிறது.
வத்திகானின் நிர்வாகத்தில் நல்லவர்கள், புனிதர்களாக மதிக்கப்படவேண்டியவர்கள் நிறைய பேர் இருந்தாலும், அதற்குள்ளும் ஊழலுக்கு இடமிருக்கத்தான் செய்கிறது என கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னமெரிக்க குருமார்களிடம் போப்பாண்டவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
வத்திகானின் நிர்வாகிகள் இடையே "தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொள்வதற்காக காய்நகர்த்தும் ஒருபால் உறவுக்காரர்கள்" சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உண்மைதான் என போப்பாண்டவர் இந்த கூட்டத்தில் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது சம்பந்தமாக தன்னால் என்ன செய்ய முடியும் என தான் ஆராய்ந்துவருவதாக போப்பாண்டவர் கூறியிருந்தார்.
மிரட்டலுக்குள்ளாகும் ஒருபாலுறவுக்கார பாதிரியார்கள்
ஒருபால் உறவுக்காரர்களாக இருக்கின்ற கத்தோலிக்க குருமார் சிலர், தமது நலனை முன்னெடுப்பதற்காக இணைந்து செயலாற்றுகிறார்கள் என இத்தாலிய ஊடகங்கள் சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.
ரகசியங்களை வெளியில் சொல்லுவோம் என இந்த ஒருபால் உறவுக்காரர்களை சிலர் மிரட்டி வருவதாகவும் அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அச்சமயம் வத்திகான் குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்திருந்தது.
ஆனால் தென்னமெரிக்க குருமார்களிடம் போப்பாண்டவர் தற்போது தெரிவித்துள்ள விஷயங்கள் பற்றி வத்திகான் எவ்விதத்திலும் பதில் சொல்ல மறுத்துவிட்டது.
போப்பாண்டவருடன் தாம் மேற்கொண்ட உரையாடலின் தொகுப்பறிக்கை பிரசுரமாக நேர்ந்ததற்காக தென்னாப்பிரிக்க குருமார்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு ஆழமான வருத்தம் தெரிவித்துள்ளதுடன் போப்பாண்டவரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
Post a Comment