நாட்டின் பணமதிப்பு வீழ்ச்சி, கிரிக்கெட் சூதாட்டம், வளைகுடா இந்தியர்களின் நாடுதிரும்பல், பெட்ரோல் விலை போன்ற பிரதான செய்திகளையும் நேற்றைய ஒரு செய்தி பின்னுக்குத் தள்ளியது என்றால் அது பாஜகவின் பிரதமர் கனவுத் தலைவராக இருந்துவந்த எல்.கே. அத்வானி தன் கட்சிப் பொறுப்புகளை ஆவேசமாகத் துறந்த செய்தி தான்.
சூறாவளியாய் முடிவெடுத்த அத்வானி அதே வேகத்திலேயே அடங்கிப் போனதுதான் இதில் மிகவும் விசேஷம். இதற்கு முன்னரும் இவ்வாறு அத்வானி நடந்துகொண்டுள்ளார் என்றாலும் இம்முறை அவருடைய முடிவால் கட்சியே பிளவு படும் நிலை உருவானது. முன்னர் இருமுறை அவர் பதவி விலக பாகிஸ்தானின் தேசியத் தலைவர் 'ஜின்னா'' காரணமாக அமைந்தார் என்றால் இம்முறை குஜராத் முதல்வர் "நரேந்திர மோடி" காரணமானார்.
கோவாவில் நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் பாஜக கட்சித் தலைவர்கள் இருகூறாகப் பிரிந்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அடிதடி நடக்காத குறைதான் என்று சொல்லப்படுகிறது.
எப்போதும் பிரதமர் பதவி மீது கண் வைத்திருக்கும் அத்வானி இம்முறை கட்சித் தலைமைக்கு மூன்று நிபந்தனைகளை விதித்ததாகவும், கட்சித் தலைமையோ, உயர்தலைமையான ஆர் எஸ் எஸ்ஸோ அந்த நிபந்தனைகளை சற்றும் விரும்பவில்லை என்றும் அத்வானியின் ஆக்ரோஷமான விலகலுக்கு அதுதான் காரணமாக அமைந்தது என்றும் தெரிய வந்துள்ளது.
முதலாவதாக, கட்சியோ கூட்டணியோ தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டால், தானே பிரதமராக வேண்டும் என்று அத்வானி கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டாவது நிபந்தனையாக, குறைந்தபட்சம் ஆறுமாதகாலமாவது தன்னை பிரதமராக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
மூன்றாவது நிபந்தனையாக, நரேந்திர மோடிக்கு எந்தப் பதவி வழங்கப்பட்டாலும், அது தனக்குக் கீழுள்ள பதவியாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக, தேர்தல் பிரச்சார பணிக்குழுத் தலைவராக தானே இருக்க வேண்டும் என்றும், நரேந்திர மோடியை அதற்குக் தான் கீழே தான், பிரச்சாரக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என்று அத்வானி கோரிக்கை விடுத்தாராம்.
கட்சித் தலைமையும், ஆர் எஸ் எஸ்ஸும் இந்த நிபந்தனைகளை ஏற்க இயலாது என்று திட்டவட்டமாகச் சொன்னதாகவும், அதனால் வெகுண்ட அத்வானி விலகல் முடிவுக்கு (எட்டு வருடங்களில் மூன்றாம் முறையாக) வந்ததாகவும் தேசிய அரசியல் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment