அமெரிக்க தேசிய பாதுகாப்பு உளவு நிறுவனமான என் எஸ் ஏ வின் தலைவர் ஜெனரல் கீத் அலெக்ஸாண்டர் அமெரிக்க செனெட் உறுப்பினர்களுடன் ரகசிய விளக்கக்கூட்டம் ஒன்றை வியாழனன்று நடத்துகிறார்.
இணையத்திலும் தொலைபேசி வலயமைப்பிலும் ரகசிய கண்காணிப்பு பணிகளை செய்ததன் மூலம் அமெரிக்காவில் டஜன் கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்கள் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகக் கூறும் அவர் அது பற்றி செனெட் உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளார்.
மிகவும் அரிதாகவே நடத்தப்படுகின்ற ஒரு கூட்டம் இது.
அமெரிக்க தேசியப் பாதுகாப்பு உளவுத்துறையின் கண்காணிப்பு திட்டங்கள் பற்றி உளவுத்துறை முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் அண்மையில் வெளியில் தகவல் கசியவிட்டிருந்தார்.
அவர் செய்த காரியத்தால் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளி நாடுகளுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லாமல் போய்விட்டது என ஜெனரல் அலெக்ஸாண்டர் கூறினார்.
கோடிக்கணக்கான தொலைபேசி அழைப்புப் பதிவுகள், மின் அஞ்சல் போன்றவற்றை என் எஸ் ஏ ரகசியமாக சேகரித்து வந்ததாக தகவல் வெளியாகியிருந்ததன் பின்னர் முதல் தடவையாக நேற்று புதன்கிழமை அமெரிக்க செனெட்டின் உளவுத்துறை விவகார குழுவினரின் கேள்விகளுக்கு ஜெனரல் அலெக்ஸாண்டர் பதிலளித்திருந்தார்.
அனைவரும் காணும் வண்ணம் இந்தக் கேள்வி நேரம் நடந்தது.
தான் என் எஸ் ஏ வில் வேலைபார்த்த நேரத்தில், நாட்டின் அதிபர் உட்பட எவரின் தொடர்பாடல்களையும் தன் லாப்டாப் கணினியில் இருந்தே ரகசியமாக கண்காணித்திருக்க முடியும் என்ற ஸ்னோடனின் கூற்றை அலெக்ஸாண்டர் நிராகரித்திருந்தார்.
Post a Comment