பிரிட்டிஷ் முடிக்குரியவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் இளவரசர் வில்லியம்மின் தாய் வழி மூதாதையர் ஒருவர் இந்தியர் என மரபணுப் பரிசோதனைகள் காட்டியுள்ளதாக, பிரிட்டனின் தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் மிகப்பெரிய காலனியாக விளங்கிய இந்தியாவுடன் நிரூபிக்கப்பட்ட மரபணு வேர்களைக் கொண்ட முதல் பிரிட்டிஷ் அரசராக இளவரசர் வில்லியம் வரலாம்.
இளவரசர் வில்லியமின் தாய் டயானா வழியில்சுமார் ஏழு தலைமுறைகள் முந்திச் சென்றால், வில்லியம்மின் மூதாதையராக அமைந்திருக்கும் எலீஸா கிவார்க் என்ற பெண் பாதியளவிலாவது இந்தியர் என்று எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வில்லியமின் ஏழாம் தலைமுறை மூதாதையரான எலைஸா கீவர்க் இந்தியாவின் சூரத் நகரில் வாழ்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
இந்தப் பெண் ஆர்மீனியப் பெண் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டு வந்தது.
ஆனால் இந்தப் பெண்ணின் வழிவந்தவர்களுடைய மரபணுக்களை ஆராய்ந்ததில், அப்பெண் தாய் வழியிலோ தந்தை வழியிலோ இந்திய மரபணு கொண்டவராக இருந்திருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
எலீஸா கீவர்க் யார் என்று மரபணு பரிசோதனைகளை நடத்தி இந்த விவரத்தைக் கண்டறிந்துள்ள பிரிட்டன்ஸ் டி என் ஏ நிறுவனத்தின் பேராசிரியர் ஜிம் வில்சன் பிபிசியிடம் விளக்கினார்.
"ஸ்கொட்லாந்து நிலச்சுவாந்தார் ஒருவரின் இளைய மகனான தியோடோர் ஃபோர்ப்ஸ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தவர் இந்த எலீஸா கீவர்க். இவர்கள் இருவருமாக சூரத்தில் ஒரு குடும்பம் நடத்தினர். மும்பைக்கு சற்று வடக்கேயுள்ள ஒரு ஊர் இது. பிரிட்டிஷ் கிழக்கு இந்தியல் கம்பெனியில் வேலைபார்த்த அந்த ஸ்கொட்லாந்து இளைஞனின் வீட்டுப் பணிகளுக்கு பொறுப்பாக இருந்தவர் இந்தப் பெண். இவர்களுக்கு குறைந்தது இரண்டு பிள்ளைகள் பிறந்தன. தம்முடைய மகள் கேட்டியையும் மகன் அலெக்ஸாண்டரையும் இவர்கள் இந்தியாவிலிருந்து ஸ்கொட்லாந்துக்கு அனுப்பிவைத்திருந்தனர். அதில் கேட்டி வழியில் வந்தவர்தான் டயானா."
பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தில் ஐரோப்பாவுக்கு வெளியிலான மரபணுக் கலப்பு இருப்பது நிரூபிக்கப்படுவதென்பது இதுவே முதல் முறை.
Post a Comment