இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவரவிருப்பதாக செய்திகள் அடிபடும் நிலையில், இந்திய அமைச்சரவை வியாழனன்று கூடுகிறது.
நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு உணவுப் பொருட்களை மானிய விலையில் கிடைக்கச்செய்யக்கூடியதாக இந்த அவசரச் சட்டம் அமையும்.
உணவை அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சட்டபூர்வ உரிமையாக்குவதோடு, சுமார் எண்பது கோடி ஏழை மக்களுக்கு மாதத்துக்கு ஐந்து கிலோ தானியம் குறைவான விலையில் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா கூறுகிறது.
இந்த சட்டத்தை சீக்கிரமாக நடைமுறைப்படுத்துவதற்காக அவசரச் சட்ட வழியில் அதனைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
அப்படி அவசரச் சட்டமாக கொண்டுவரப்பட்டால், ஆறு மாதத்துக்குள் நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா என்பது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
ஆனால் அதன் நிறைவேற்றம் தொடர்ந்து தாமதப்பட்டுக்கொண்டே வருகிறது.
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த சட்டம் நிறைவேற்றப்படுவது தமது கட்சிவெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கும் என காங்கிரஸார் கருதுகின்றனர்.
அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமை கிலோ இரண்டு ரூபாய்க்கும், கேழ்வரகு கிலோ ஒரு ரூபாய்க்கும் மானிய விலையில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என இந்த மசோதா கூறுகிறது.
Post a Comment