தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராகவும், சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் பத்ரு சைய்யத். மேல்தட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் வழக்கறிஞரான இவர் இஸ்லாமிய ஆடையான புர்காவை அணியாதவர் என்பதோடு, இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக வாளை வீசும் குணம் கொண்டபவருமாவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் (?) வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து விவகாரங்களில் மற்ற மதத்தினருக்கு உள்ள சட்ட உரிமைகள் இல்லை. முஸ்லிம் பெண்களுக்கு மதம் சார்ந்த கட்டுப்பாட்டுகள்; இருப்பதால் அவர்களின் உரிமைக்காக முஸ்லிம் பெண்களால் போராட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, ஜைனம், புத்தம் என்று ஏராளமான மதங்கள் உள்ளன. இந்த மதங்களில் திருமணச் சட்டங்கள் பற்றி நிறைய சொல்லப்பட்டு உள்ளன. ஆனால் விவாகரத்து எப்படிச் செய்ய வேண்டும்? அதற்கான சட்டங்கள், விதிமுறைகள் என்ன? என்று தெரிவிக்கப்படவே இல்லை.
இஸ்லாம் ஒரு மதமல்ல. மாறாக அது ஒரு வாழ்க்கை நெறி. அதனால் விவாகரத்து பற்றி அது சொல்லாமல் இருக்காது. இருக்க முடியாது. உலகிலேயே விவாகரத்து சம்பந்தமாக சரியான சட்ட நெறிகளை வகுத்த மார்க்கம் என்றால் அது இஸ்லாம் மட்டுமே! பத்ரு சையிது இஸ்லாம் குறித்து சரிவர தெரிந்து வைத்திருக்கவில்லை. அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் கன்னா பின்னா என்று எழுதி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறார்.
விவாகரத்து செய்வதற்கு ஆணுக்கு மட்டும் உரிமை வழங்கி, பெண்ணுக்கு அந்த உரிமையை இஸ்லாம் வழங்காமல் இருந்தால் இஸ்லாம் பெண்களுக்கு விவாகரத்து விவகாரங்களில் இஸ்லாம் உரிமை வழங்கவில்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தில் அப்படிப்பட்ட பாகுபாடு எதுவும் இல்லை. ஒரு கணவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது போல ஒரு மனைவி தனது கணவனை விவாகரத்து செய்ய முடியும். இவ்வாறு மனைவி, கணவனை விவாகரத்து செய்யும் முறைக்கு குலா என்பது பெயர். இது குறித்து குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.
அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் (மஹ்ராக) வாங்கியதில் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எனவே அவற்றை மீறாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்களாவர். (திருக்குர்ஆன் 2 :229)
இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேற்காணும் திருக்குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது. அப்படி இருக்கும் போது விவாகரத்து விஷயங்களில் மற்ற மதத்தினருக்கு உள்ளது போன்ற சட்ட உரிமைகள் முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்று பத்ரு சையது சொன்னால் அவர் கருத்துக் குருடராக இருக்க வேண்டும். அல்லது இஸ்லாம் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவராக இருக்க வேண்டும். இதில் அவர் எந்த ரகம்? என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஸாபித்பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி வருகிறார் அவர் அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறைகூற மாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்.(அதாவது கணவர் நல்லவராக இருந்த போதும் அவருடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்கிறார்.) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு திருமணக் கொடையாகத் தந்த) அவரது தோட்டத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்துவிடு என்றார்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 5273
முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டு என்பதை மேற்கண்ட நபி வழி நிரூபிக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆனும், நபி வழியும் மட்டுமே! இந்த இரண்டும் பெண்களுக்கு விவாகரத்து உரிமையை வழங்கி இருக்கும் போது முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து விஷயங்களில் உரிமை இல்லை என பத்ரு சையது சொல்வது அவரது அறிவின்மையை வெளிப்படுத்துகிறது அல்லவா?
முஸ்லிம் அல்லாத பெண்ணை அவளது கணவர் விவாகரத்து செய்ய வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு சென்று அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்ல வேண்டும்
அல்லது சட்டம் ஏற்கும் ஏதாவது காரணத்தை அவள் மீது பழியாக தூக்கிப் போட வேண்டும்.
அப்போதுதான் விவாகரத்து கிடைக்கும்.
முஸ்லிம் பெண் மீது இப்படி அவதூறு சுமத்தி, விவாகரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. காரணத்தை வெளியில் காட்டாமலேயே ஒரு முஸ்லிம் பெண்ணால் விவாகரத்து பெற்று விட முடியும். முஸ்லிம் பெண்களுக்கு உள்ள இந்த உரிமைகளைப் பிற மத பெண்களுக்கும் தர வேண்டும் என்று பத்ரு சையது சொன்னால் அது நியாயம். அதை விட்டு விட்டு இஸ்லாமியப் பெண்களுக்கு விவாகரத்து பிரச்சனையில் சட்டஉரிமை இல்லை என்று சொன்னால் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு முஸ்லிம் கணவனும், தனது மனைவியை நடத்தை கெட்டவள் என சொல்ல வேண்டும் என்று பத்ரு சையது சொல்ல வருகிறாரா? இது தான் அவருடைய நோக்கம் என்றால் முஸ்லிம் சமுதாயம் இதை எதிர் கொள்ள வேண்டிய விதத்தில் எதிர்கொள்ளும்.
மனைவிக்குத் தெரியாமலேயே மூன்று முறை தலாக் கூறிவிட்டு, ஹாஜிக்களிடம் விவாகரத்துக்கான ஒப்புதல் மற்றும் சான்றிதழைப் பெற்றுக் கொள்கின்றனர். இது இஸ்லாமியப் பெண்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவருக்கு ஒப்புதலும், சான்றிதழும் அளிப்பதற்கு தமிழக தலைமை ஹாஜி மற்றும் ஹாஜிக்களுக்கு தடை விதிக்க வேண்டும். விவாகரத்துக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் ஹாஜிக்களுக்கு இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று பத்ரு சையது தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் சொல்லும் முறையே கிடையாது. இதை ஹாஜிக்களும் புரிந்து கொள்ளவில்லை. பத்ரு சையதுக்கும் தெரியவில்லை. ஒருவர் டவுன் ஹாஜியிடம் செல்கிறார். நான் எனது மனைவியை ஒரே சமயத்தில் முத்தலாக் சொல்லிவிட்டேன். அதற்கான ஆதாரம் இதோ! என்று காட்டுகிறார். இவருடைய ஆதாரத்தின் அடிப்படையில் இது குறித்து விளக்கமளிக்கவும், நேரில் ஆஜராகவும் டவுன் ஹாஜி மனைவிக்கு நோட்டீஸ் அனுப்புகிறார். இந்த நோட்டீஸை மதித்து நேரில் ஆஜரானால் உனது கணவர் உன்னை முத்தலாக் கூறிவிட்டார். இனிமேல் நீங்கள் கணவன், மனைவி கிடையாது. இனி இருவரும் கணவன், மனைவி ஆக வேண்டும் என்றால் மனைவி இன்னொருவரை திருமணம்செய்து அந்த கணவர் விவாகரத்து செய்தால் மட்டுமே நீங்கள் மறுபடியும் திருமணம் செய்ய முடியும் என்று சொல்லி, விவாகரத்துக்கான ஒப்புதல் சான்றை வழங்கி விடுகிறார்.
மனைவி வராவிட்டாலோ, விளக்கம் சொல்லாவிட்டாலோ குறிப்பிட்ட அவகாசத்திற்குப் பிறகு ஹாஜி விவாகரத்து வழங்கி விடுகிறார். ஒரே சமயத்தில் முத்தலாக் சொல்வது செல்லும் என சொல்லி, கணவன், மனைவியை நிரந்தரமாக பிரிப்பது பாவமான செயலாகும். இதை ஹாஜிக்கள் செய்யக் கூடாது என்று பத்ரு சையது சொன்னால் அது சரி.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.
அறிவிப்பாளர். இப்னு அப்பாஸ், நூல், முஸ்லிம் 2691.
இந்த நபி வழியின் அடிப்படையில் பத்ரு சையது வாதம் வைக்கவில்லை. மாறாக தலாக் சான்றிதழையே ஹாஜிக்கள் தரக் கூடாது என்கிறார்.
இந்த வாதம் இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிரானது. ஸாபித்பின் கைஸ் (ரலி) அவர்களின் மனைவி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டு விவாகரத்து பெற்றதின் மூலம் டவுன் ஹாஜி மட்டுமல்ல. சமுதாயத் தலைவர் எவரிடமும் முறையிட்டு ஒரு இஸ்லாமியப் பெண் விவாகரத்து பெற முடியும் என்பதே சட்டத்தின் நிலையாகும்.
இந்த சட்டத் தெளிவு இல்லாமல் டவுன் ஹாஜிக்கு உள்ள உரிமையைப் பறிக்க வேண்டும் என பத்ரு சையது சொல்வது அபத்தமானது. விவாகரத்து பெறுவது சிரமமானால் அங்கு கொலைகளும், கள்ள உறவுகளும் தான் அதிகாரிக்கும். இதைத் தான் பத்ரு சையது விரும்புகிறாரா? எனத் தெரியவில்லை.
மனைவிக்குத் தெரியாமலேயே கணவர்கள் தலாக் கூறி வருகிறார்கள் என்ற அபத்த வாதத்தையும் பத்ரு சையது வைக்கிறார். அது எப்படி முடியும் என்று தெரியவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு கணவன் எடுத்த எடுப்பில் மனைவியை தலாக் சொல்லி விட முடியாது.
திருகுர்ஆனின் 4:34 வது வசனப்படி
ஒரு கணவன், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன் அறிவுரை கூறி மனைவியை திருத்த முயல வேண்டும்.
அது பயன்தராத போது மனைவியை படுக்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
அதுவும் பயன்தராத போது லேசாக அடித்து திருத்த முயல வேண்டும்.
இதன் பிறகும் கணவனுக்கும் , மனைவிக்கும் இடையில் இணக்கம் ஏற்படவில்லை என்றால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு திருக்குர்ஆனின் 4:35வது வசனம் கட்டளையிடுகிறது.
இந்த நான்கு வழிமுறைகளும் பயனில்லாத போதுதான் கணவன், மனைவியை தலாக் சொல்ல வேண்டும். தலாக்கிற்கு முன்பு கணவன் மனைவிக்கு அறிவுரை சொல்லும் போதே கணவனின் தலாக் நோக்கம் மனைவிக்கு தெரிந்து விடும். மனைவியை படுக்கையில் இருந்து விலக்கி வைக்கும் போது சந்தேகத்திற்கு இடமின்றி தலாக் நோக்கம் புரிந்துவிடும். அடிக்கும் போது தலாக் நோக்கம் அப்பட்டமாக தெரிந்து விடும். இரு குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சமரசம் பேசும் போது இரு குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் தலாக் நோக்கம் தெரிந்து விடும். பின்னர் கணவன் முதல் தலாக் சொல்லும் போது மனைவிக்கு தெரியாமல் கணவன் தலாக் சொல்லி விட்டான் என்று எப்படி சொல்ல முடியும்?
கணவன் தனது மனைவியை தலாக் சொல்வதற்கு முன்பு திருக்குர்ஆனின் கூறும் 4 வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்று டவுன் ஹாஜி விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதை அவர் சரிவர செய்வது கிடையாது. ஒரே சமயத்தில் சொல்லப்படும் முத்தலாக் செல்லாது. இந்த இஸ்லாமிய சட்டத்தை டவுன் ஹாஜி விளங்கிக் கொள்ளாமல் பல சமயங்களில் சொல்லப்படும் மூன்று தலாக்குக்கான சட்டத்தை ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் தலாக்குக்கு பயன்படுத்தி குடும்பத்தில் பெரும் குழப்பம் செய்துவிடுகிறார்.
டவுன் ஹாஜியின் இந்தத் தவறான செயலைத் தடுத்து நிறுத்தும் வகையில் பத்ரு சையதின் மனு இல்லை. மாறாக விவாகரத்து விஷயங்களில் முஸ்லிம் பெண்களுக்கு சட்ட உரிமைகள் இல்லை என்பது போலவும், இஸ்லாமியத் தலைவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தந்துள்ள சட்ட உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்திலும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து விஷயத்தில் இவர் இஸ்லாமியக் கொள்கைகளைத் தெரிந்து கொள்ள நினைத்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பத்ரு சையித் அணுகலாம். அல்லது தனது கொள்கையில் பத்ரு சையத் உறுதியாக இருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோடு அவர் நேரடி விவாதம் செய்து தனது நிலைப்பாடு சரி என நிரூபிக்க முன் வர வேண்டும்.
ஆரோக்கியமான இந்த இரு வழிமுறைகளை பத்ரு சையது புறக்கணித்து இஸ்லாத்திற்கு எதிராக வாளை உருவினால் இவரை முஸ்லிம் சமுதாயம் எதிர் கொள்ள வேண்டிய முறையில் எதிர் கொள்ளத் தயங்காது என சொல்லிக் கொள்கிறோம்.
குறிப்பு : பதர் சையதுக்கு விவாத அறைகூவல் கடிதம் அனுப்பப்பபட்டுள்ளது. (காண்க : ஸ்கேன் செய்யப்பட்ட கடிதம்)
நன்றி- ஆன்லைன் பி ஜே
Post a Comment