இயேசு இறை மகனா ? - தொடர் 16

பரிசுத்த ஆவி பெற்ற பலர்
இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!
"பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்." - (மத்தேயு 10:20)
இயேசு தன் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார். இயேசு எப்படி பரிசுத்த ஆவியால் பேசினாரோ அது போல் அவரது சீடர்களும் பரிசுத்த ஆவியின் மூலமே பேசியுள்ளனர். 

பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயேசுவின் சீடர்களும் கடவுளர்களா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

"அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்." - (லூக்கா 2:25)

"இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்." - 
(அப்போஸ்தலர் 5:32)

"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்." -
 (அப்போஸ்தலர் 11:24)

"இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு..." - 
(அப்போஸ்தலர் 6:5)

"உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்" - (இரண்டாம் தீமோத்தேயு 1:14)
"தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்." - 
(இரண்டாம் பேதுரு 1:21)

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை. தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.
"சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக." - (யாக்கோபு 1:13)
கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்! தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், "இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்; கடவுளின் தூதர்'' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.
                                                                               இன்ஷா அல்லாஹ்  தொடரும்....
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger