காரைக்கால்: காரைக்கால் மாவட்ட கடல் பரப்பில், மத்தி மீன் சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து,
தமிழக மீனவர்கள் இவ்வகை மீன்களை பிடித்து காரைக்கால் மீன்பிடி துறைமுகம் வாயிலாக, கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யும் பணியில் திவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வருடந்தோறும் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மத்தி மீன் சீசன் இருக்கும் என்றாலும், மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதத்துடன் மத்தி மீன் வருகை படிப்படியாக குறைந்துவிடும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், மே மாதத்தில் உச்சக்கட்டமாக அதிக அளவில் கிடைக்கவேண்டிய மத்தி மீன் தற்போதுதான் கிடைக்க துவங்கியுள்ளது. கடந்த மூன்று மாதமாக ஓரளவிற்கு கிடைத்த மத்தி மீன் தற்போது அதிக அளவில் கிடைக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து, மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் ரவி கூறியதாவது:
"சாதாரணமாக, காலை சுமார் 6 மணிக்கு, கடலில் 15 கிலோ மீட்டர் முதல் 25 கிலோ மீட்டர் வரை பைபர் படகில் செல்லும் மீனவர்கள், மத்தி மீனுக்கான டிஸ்கோ உள்ளிட்ட விசேஷ வலையை பயன்படுத்தி, கூட்டம் கூட்டமாக வரும் மத்தி மீன்களை மட்டும் பிடித்து மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கரைக்கு கொண்டு வருவார்கள். ஒரு பைபர் படகில், சுமார் 5 ஆயிரம் மதிப்பிலான மத்தி மீன்களை மீனவர்கள பிடித்து வருவார்கள். பெரும்பாலும், காரைக்கால் மீனவர்கள் மத்தி மீனை பிடிப்பதில்லை.
காரைக்கால் மற்றும் சுற்றுவட்டாரங்களில், இந்த வகை மத்தி மீன்கள் கிலோ ரூ. 20 முதல் விற்பனை செய்யபடுகிறது. இதே மத்தி மீன் கேரளா பகுதியில் கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு, காரைக்கால் மாவட்டத்தில், 10 ஆயிரம் கிலோ வரை மத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு கேரளா மாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மே மாதத்தில் படிப்படியாக குறைந்த மத்தி மீன் தற்போது 20 ஆயிரம் கிலோ வரை கிடைக்கிறது. பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு பெரிய வகை மீன்கள் கிடைக்காததால் பெருத்த ஏமாற்றத்துடன் இருந்தனர். மத்தி மீனால் பெரிய அளவில் லாபம் இல்லையென்றாலும், ஏமாற்றத்துடன் இருந்த ஒரு சில மீனவர்களுக்கு அதிகப்படியான மத்தி கொஞ்சம் ஆறுதலை தருகிறது.
இதுபற்றி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் இளையப்பெருமாள் கூறியதாவது:
"மத்தி மீன்களை பெரும்பாலும் காரைக்கால் மீனவர்கள் பிடிப்பதில்லை. அந்த வகையில் அவர்களை பாராட்டவேண்டும். தமிழகப்பகுதியில் சிலர் சுறுக்கு வலைகளை பயன்படுத்துவதாக தெரிகிறது. பயன்படுத்த கூடாது என்றுதான் எச்சரிக்கை செய்யமுடியும், மீன் குஞ்சுகள் பாதிக்காவண்ணம் அவர்களாகவே சுறுக்கு வலை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். அப்போதுதன் மீன்வளம் நன்றாக இருக்கும்" என்றார்.
Post a Comment