3 வயது பச்சிளம் பெண் குழந்தை வன்புணர்வு; 60 வயது மூதாட்டி வன்புணர்வு - இவை நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்டன.
சமூக சீர்கேடுகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. 10 வருடங்களுக்கு முன் சமூகத்தில் பாரிய குற்றங்களாக கருதப்பட்டு வந்த விபச்சாரம், முறையற்ற உறவுகள், திருமணத்திற்கு முன் சல்லாபம், மது, புகைப்பிடித்தல் ஆகியவை இன்று சர்வ சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
இதற்கான முன்னணி காரணிகளில் ஒன்றாக திரைப்படங்களும் அத்திரைப்படங்களில் தோன்றும் நாயக நாயகிகளும் உள்ளனர் என்றால் அது மிகையல்ல.
ஓசூரில் அமையப் பெற்றுள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து வந்த சென்னையச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரது அறையில் படுகொலை செய்யப்படுகின்றார். அவரை கொலைச் செய்த கொலையாளிகள் மிளகாய்ப் பொடிகளை தூவிச் சென்றுள்ளனர். ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காக படமாக்கப்பட்டது இப்போது வாழ்வில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. ஆட்டோ சங்கர் போன்ற கொடூர கொலையாளிகள் உருவாக காரணமாக இருந்தவையும் திரைப்படங்களே என்று வரலாறு நமக்கு பாடம் நடத்துகிறது
தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆவேசமடைந்த மகன், தம் தந்தையையே குத்திக் கொன்ற துயர சம்பவம் ஆந்திர மாநிலம் நிலுமாபாத் மாவட்டம் கும்மரிவாடா பகுதியில் 10 தினங்களுக்கு முன் நடைபெற்றது. கணவன் மனைவிக்கிடையே தொலைக்காட்சித் தொடர் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தூண்டப்பட்ட மனைவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட விபரீதம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சின்ன மண்டம் அருகே சகிபந்த் என்ற கிராமத்தில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்றது.
இன்றைய சமுதாயத்தில் திரைப்படங்களின் பாதிப்பு அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதை கீழ் வரும் சம்பவம் நமக்கு உணர்த்திக் காட்டுகின்றது. காதலனுடன் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை செய்து கொள்கிறார் இந்தி நடிகையொருவர். இது குறித்த செய்தி தொகுப்புகள், அந்த நடிகை நடித்த திரைப்பட காட்சிகள் போன்றவை தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதனை கவனித்து வந்த 5ஆம் வகுப்பு படித்து வரும் 12 வயதே நிரம்பிய பள்ளிச்சிறுவன் கவலையுற்றிருக்கிறான். வீட்டில் யாருமில்லா நேரத்தில் அவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் திரைப்படங்களும் நாடகங்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றியுள்ளன. அதே திரைப்படத்துறை இன்று கலாச்சார சீர்கேடுகளை வளர்க்கும் பணிகளையும், இளைஞர்-இளைஞிகளை வழிகெடுக்கும் பணிகளையும், சாதி-மத துவேசங்களைப் போற்றும் பணிகளையுமே செய்து வருகின்றன என்பது சுட்டெரிக்கும் உண்மை.
Post a Comment