புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து 7 மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாப சாவு

புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சும் சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் ஆட்டோவில் லிப்ட் கேட்டு வந்த 7 மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சரக்கு ஆட்டோ
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே குளவாய்ப்பட்டி மதவடிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது45), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து பசும்பாலை சேகரித்து கேன்களில் நிரப்பி, அவற்றை சரக்கு ஆட்டோவில் எடுத்து சென்று புதுக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருவது வழக்கம்.
அதன்படிஇன்று  காலையில் அவர் பால் கேன்கள் ஏற்றிய சரக்கு ஆட்டோவை ஓட்டிக் கொண்டு புதுக்கோட்டைக்கு வந்தார். அங்கு கடைகளில் பாலை விற்பனை செய்த பின்னர், காலி கேன்களுடன் புதுக்கோட்டையில் இருந்து குளவாய்ப்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவருடன் கிளினீர் மேலகுள வாய்ப்பட்டியை சேர்ந்த தியாகராஜன்(40) என்பவரும் சரக்கு ஆட்டோவில் இருந்தார்.
லிப்ட் கேட்டு ஏறினர்
திருவரங்குளம் அருகே கைக்குறிச்சி பகுதியில் வந்தபோது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பஸ்சுக்காக காத்து நின்றனர். அவர்கள் சரக்கு ஆட்டோவை கண்டதும், அதில் லிப்ட் கேட்டு கை காட்டினர்.
இதைக்கண்ட டிரைவர் ஆறுமுகம் சரக்கு ஆட்டோவை அங்கு நிறுத்தினார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 9 மாணவர்களும் மகிழ்ச்சியுடன் ஓடிப்போய் சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் காலிகேன்கள் இருந்த இடத்தில் ஏறி நின்று கொண்டனர்.
நேருக்கு நேர் மோதல்
இதையடுத்து சரக்கு ஆட்டோ அங்கிருந்து புறப்பட்டு சென்றது. காலை 9.30 மணி அளவில் திருவரங்குளம் அருகே உள்ள பூவரசகுடிக்கும், வாண்டாக் கோட்டைக்கும் இடையே வந்தபோது, அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ்சும், சரக்கு ஆட்டோவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் சரக்கு ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி குட்டிக்கரணம் அடித்து சாலையிலும், அதைத்தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள 10 அடி பள்ளத்திலும் உருண்டு விழுந்தது. இதனால் சரக்கு ஆட்டோவில் இருந்த மாணவர்கள் அய்யோ, அம்மா என்று அபய குரல் எழுப்பினர்.
8 பேர் பலி
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் ஏறி வந்த மாணவர்கள் 7 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் ஆறுமுகமும் உடல் நசுங்கி இறந்தார். கிளீனர் தியாகராஜன் மற்றும் 2 மாணவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆம்புலன்சும், போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.
3 பேர் படுகாயம்
அவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்த மக்களின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் விக்னேஷ் என்கிற மணிகண்டன், ராஜேஷ்குமார் மற்றும் கிளீனர் தியாகராஜன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையே இந்த விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த கீரமங்கலத்தை சேர்ந்த பிரபு(30) என்பவரும் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் பலியான 8 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
மாணவர்கள் யார், யார்?
இந்த விபத்தில் பலியான மாணவர்களின் பெயர் விவரங்கள் வருமாறு;–
திருவரங்குளம் அருகே உள்ள கைக்குறிச்சி ஊராட்சி விஜயரெகுநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவக்குமார், சுந்தரம் மகன் மதியழகன், அண்ணாமலை மகன் விஷ்ணு, மூக்கையா மகன் அருண்குமார், ரமேஷ் மகன் சத்யா, மணிகண்டன், நாராயணசாமி ஆகியோர் உயிரிழந்தனர். பலியான மாணவர்கள் 6, 9, 12–ம் வகுப்புகளில் படித்து வந்தவர்கள். மாணவர்கள் அனைவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger