காரைக்கால்: மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, கடந்த 45 நாட்களாக அமலில் இருந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 8000 விசைப் படகு மீனவர்கள் நேற்று மாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
கடலில் மீன்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல் 15 முதல் மே.30 வரை என்பதால், ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் அந்த 45 நாட்களும், மின்பிடிக்க செல்லக்கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுமார் 350 விசைப்படகு மீனவர்களும், நாகை மற்றும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 விசைப்படகு மீனவர்களும் என, சுமார் 8000 மீனவர்கள் கடைபிடித்து வந்தனர்.
மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்கள் தங்கள் படகு, வலை மற்றும் மீன்பிடி சாதனங்களை சீரமைத்து வந்தனர். பலர் ரூ.50 முதல் 75 லட்சம் வரையிலான இரும்பிலான புதிய விசைப்படகை தயார் செய்து வெள்ளோட்டம் விட்டனர்.
புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக, மீனவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கடந்த 2011 வரை தலா ரூ.2.750 வழங்கி வந்தது. விலைவாசி உயர்வு காரணமாக இந்த நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், தடைக்காலம் முடிவதற்குள் நிவாரணத்தை வழங்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இருந்தும், கடந்த 2012-ம் ஆண்டுக்கான நிவாரணம், விசைப்படகு பழுதுபார்க்க வழங்கும் ரூ.20 ஆயிரம், பைபர் படகை பழுதுபார்க்க ரூ.5 ஆயிரம் மற்றும் டீசல் மானியத்தை புதுச்சேரி அரசு இதுவரை முழுமையாக வழங்கவில்லை. இந்நிலையில், நடப்பாண்டுக்கான நிவாரணத்துடன் நிலுவையில் உள்ள நிவாரணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நேரம்
Post a Comment