அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் போட்டியாக சீனாவும் விண்ணில் நிரந்தர ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்காக பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களை அனுப்பி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இப்போது 5-வது முறையாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. கான்சூ மாகாணத்தில் உள்ள ஜியூகான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று ஷென்சூ-10 விண்கலம், வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
லாங் மார்ச் என்ற ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்த விண்கலத்தில், வாங் யாபிங் (வயது 35) என்ற விண்வெளி வீராங்கனையுடன், நீ ஹைஷெங், ஜாங் ஜியாகாங் ஆகிய வீரர்களும் சென்றனர். இன்று பிற்பகல் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்த இந்த விண்கலத்தில் உள்ள வீரர்கள், 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.
விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் நிகழ்வை, பிரதமரும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜிங்பிங் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய சீன விஞ்ஞானிகளுக்கு, அவர் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் சீனாவின் கனவுத் திட்டமான இந்த விண்கலத்தில் சென்றுள்ள வீரர்கள் தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்ப வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
Post a Comment