கடவுளின் இலக்கணம்
கடவுளுக்கும், மனிதனுக்கும் தனித்தனி இலக்கணங்களை பைபிள் கூறுகிறது. கடவுளுக்குக் கூறப்பட்ட எந்த இலக்கணமும் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. மனிதனுக்குக் கூறப்படுகின்ற எல்லா இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதை பைபிளின் துணையுடன் இப்பகுதியில் காண்போம்.காணப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
"நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள(காணமுடியாமை) ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்." - (முதலாம் தீமோத்தேயு 1:17)
கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
"தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை." - (யோவான் 1:18)
"கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது'' என்று பைபிளின் மேற்கண்ட வசனம் கூறுகிறது. இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.
இரத்தமும் சதையும் கடவுளுக்கு இல்லை:
"கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும்'' எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
"தேவன் ஆவியாக இருக்கிறார்." - (யோவான் 4:24)
இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா? இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது. இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார். அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் இவ்வாறே இருந்தார். ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது. இயேசுவைச் சுட்டிக் காட்டும் ஓவியங்களில் அவர் சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தும் நிலையிலேயே தீட்டப்படுகிறார்.
அது மட்டுமின்றி அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் இதே நிலையிலேயே இருந்திருக்கிறார்.
"அவர், அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள்! நீங்கள் காண்கிற படி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்." - (லூக்கா 24:38-40)
உயிர்த்தெழுந்த பின்னரும் கூட இயேசு ஆவியாக இல்லை; இரத்தமும், சதையும், எலும்பும் உள்ளவராகவே இருந்தார். இதன் பிறகும் அவரைக் கடவுள் என்றோ கடவுள் தன்மை பெற்றவர் என்றோ நம்பினால் அது பைபிளை மறுத்ததாக ஆகாதா?
மரணித்தல் கடவுளின் தன்மை அல்ல:கடவுள் என்றென்றும் நிலையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது.
"கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார்." - (சங்கீதம் 9:7)
இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பினால் கூட அவர் பிறப்பதற்கு முன் இருந்திருக்கவில்லை. மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர் இருக்கவில்லை. என்றென்றைக்கும் இராததால் இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று அறியலாம்.
கொல்லப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கொலை செய்ய முடியாது. கொல்லப்பட்ட யாரும் கடவுளாயிருக்க முடியாது என்றும் பைபிள் கூறுகிறது.
"உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே!" - (எசக்கியேல் 28:9)
குத்திப் போடப்பட்டவன் மனுஷனாகத் தான் இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்கவே முடியாது என்ற இந்த இலக்கணத்துக்குப் பொருந்தும் வகையில் இயேசு கொல்லப்பட்டிருக்கிறார்.
"நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி...." - (அப்போஸ்தலர் 5:30)
கொலை செய்யப்பட்ட காரணத்தால் இயேசு கடவுள் இல்லை என்று பைபிள் தெளிவாகக் கூறிய பிறகும் அவரைக் கடவுள் என்று கூறலாமா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Post a Comment