பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?
இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம். இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்! இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.
"அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்." - (லூக்கா 1:15)
"அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக..." - (லூக்கா 1:67)
இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?
"எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு..." - (லூக்கா 1:41)
யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்;
அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்;
அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா? இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?
இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது.
"பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்" - ( மத்தேயு 4:1-10)
இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது. யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார். அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான், தனது தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்ல அதிகத் தகுதி உள்ளது என்பதை கிறித்தவ அன்பர்கள் சிந்திக்கட்டும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Post a Comment