இஸ்லாமியத் திருமணம் - PJ - தொடர் 3

வரதட்சணையால் ஏற்படும் கேடுகள்

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும், அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.
  • வரதட்சணை காரணமாக 15 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர். 
  • இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர்.
  • விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.
  • மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரை தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். இந்தப் பாவத்திலும் வரதட்சணை கேட்போர் பங்காளிகளாகின்றனர்.
  • மணவாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.
  • வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்தமாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.
  • மானத்துடன் வாழ்ந்த ஒருவனை பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.
  • பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.
இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சனையை வாங்குவோர் இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காக தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார்.

திருமண ஒப்பந்தம்

இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கருதுகின்றது.

அப்பெண்கள் உங்களிடமிருந்து கடுமையான உடன்படிக்கை செய்துள்ளனர்.(அல்குர்ஆன் 4:21)

திருமணம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று; அது வாழ்க்கை ஒப்பந்தம் என்று இந்த வசனம் தெளிவாக்குகின்றது.

ஒப்பந்தம் என்பது அதில் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் புரியக் கூடிய மொழியில் அமைந்திருக்க வேண்டும். புரியாத பாஷையில் எவரும் ஒப்பந்தம் செய்ய மாட்டார்கள்.

நான் என் மகளை இவ்வளவு மஹருக்கு அவரது பரிபூரண சம்மதத்துடன் உங்களுக்கு மணமுடித்து தருகின்றேன் என்று பெண்ணின் தந்தை (அல்லது அவளது மற்ற பொறுப்பாளர்) கூற, மணமகன் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியவுடன் ஒப்பந்தம் முடிந்து விடும்.

அல்லது உங்கள் மகளை அவளது பூரண சம்மதத்துடன் இவ்வளவு மஹருக்கு மணமுடித்துத் தருகிறீர்களா? என்று மணமகன் கேட்க, பெண்ணின் பொறுப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் ஒப்பந்தம் முடிந்து விடும்.

இதற்கென்று குறிப்பிட்ட எந்த வாசகமும் கிடையாது. அரபு மொழியில் தான் அந்த வாசகம் அமைய வேண்டும் என்பதும் கிடையாது.

(குத்பா) திருமண உரை

திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்தும் வழக்கம் பரவலாக உள்ளது. ஆனால் திருமணத்தின் போது குத்பா எனும் உரை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்துவதற்காக எந்தத் திருமணத்திற்கும் சென்றது கிடையாது. அழைக்கப்பட்டதும் கிடையாது.

தமது மகளின் திருமணத்தின் போது கூட அவர்கள் உரை நிகழ்த்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

ஆயினும் மக்கள் கூடும் இடங்களில் தேவை எனக் கருதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இந்தப் பொதுவான அனுமதியின் அடிப்படையில் திருமண உரையினால் மக்கள் பயன் பெறுவார்கள் என்று கருதினால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் குத்பா எனும் உரை ஏதும் நிகழ்த்தப்படாவிட்டால் திருமணத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது.

சாட்சிகள்

திருமணத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. எனினும் அவையனைத்தும் பலவீனமானவையாக உள்ளன. ஆயினும் கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு குர்ஆன் கூறுகிறது.

கடன் கொடுக்கும் போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 2:282 வது வசனம் கூறுகிறது.

அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருக்குர்ஆன் 4:6 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

மரண சாசனம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு இறைவன் கூறுகிறான். (திருக்குர்ஆன் 5:106)

இதை அடிப்படையாகக் கொண்டு திருமணத்திற்கும் சாட்சிகள் அவசியம் என்பதை அறியலாம்.

திருமணம் செய்த பின் ஒரு தரப்பினர் பிறகு மறுத்து விடக் கூடும் என்பதாலும், விபச்சாரத்தில் ஈடுபடுவோரும் மாட்டிக் கொள்ளும் போது தாங்கள் கணவன் மனைவியர் என்று கூறித் தப்பித்து விடாமல் இருப்பதற்காகவும் ஏனைய கொடுக்கல் வாங்கலின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வது போலவே திருமணத்திலும் குறைந்தது இரு சாட்சிகள் ஏற்படுத்தப் பட வேண்டும்.

நாளை விவகாரம் ஏற்பட்டால் உள்ளதை உள்ளபடி சொல்வதற்கே சாட்சிகள் தேவைப்படுகின்றனர். சடங்குக்காக சாட்சிகள் ஏற்படுத்தப் படவில்லை.

உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமானால் திருமணத்தின் முக்கியமான பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் அவர் பார்வையில் நடக்க வேண்டும். அவர் தான் சாட்சியாக இருக்கத் தக்கவர்.

மணப் பெண்ணின் சம்மதம் பெறப்பட்டதும், மஹர் கொடுக்கப்பட்டதும், எவ்வளவு மஹர் என்பதும் அவருக்குத் தெரிய வேண்டும். இந்த விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் திருமணத்திற்கு வந்திருக்கும் இரண்டு நபர்களை சாட்சிகளாக ஆக்குவது அர்த்தமற்றதாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger